டீக்கடையை நொறுக்கிய போலீஸ்: மனித உரிமை ஆணையம் விசாரணை!


சேலத்தில் காவல் ஆய்வாளர் டீக்கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே மேச்சேரி பிரிவு சாலையில் புளியம்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இரவு 10 மணிக்கு மேல் அவர் டீக்கடையை திறந்து வைத்திருந்ததால், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஒருவர், கடைக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான, கமல்ஹாசன், "இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருந்த டீக்கடையை அடித்து நொறுக்குகிறார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர். இதே காரணம் சொல்லிதான் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்தே கொன்றார்கள். அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது” என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
வினிதா