வேட்பு மனு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுத் தாக்கலை வாங்கும்போது தேர்தல் அதிகாரிகள் விழிப்புடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், ”தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போது பெரும்பாலான வேட்பாளர்கள் தவறான தகவல்களை அளிக்கிறது மட்டுமில்லாமல், விண்ணப்ப பகுதிகள் நிரப்பபடாமலே விட்டுவிடுகிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தரும், நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட ஆ.ராஜா ஆகிய இருவர் மட்டுமே விண்ணப்பங்களை சரியான முறையில் பூர்த்தி செய்திருந்தனர். மற்றவர்கள் முறையாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை.
அதனால், முறையாக வேட்பு மனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், வேட்பு மனுவில் அனைத்து விவரங்களும் தவறில்லாமல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று(மார்ச் 12) தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் குறிப்பிடுவதுபோல, வேட்பு மனுக்களில் குறைகள் இருந்தது உண்மைதான். ஆனால், குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னரே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன என விளக்கமளித்தார்.
இதையடுத்து, வேட்பு மனு தாக்கலின்போது தேர்தல் அதிகாரிகள் விழிப்புடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும், மனுதாரரின் கோரிக்கையை பரீசிலிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.
வினிதா