அதிரடி சோதனையில் ஈடுபடும் ஐடி அதிகாரிகள்!

தமிழகத்தில் 20 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
தமிழகச் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் வேட்பு மனுத்தாக்கலும் துவங்கியது. தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ய அரசியல் கட்சி பிரமுகர்கள் திட்டமிட்டு, ரொக்கம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித் துறைக்குத் தகவல் அடுத்தடுத்து வந்ததாம்.
இதனால் தமிழகத்தில் 20 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீா் சோதனை நடத்தினர். தமிழகத்தில் 118 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே சந்தேகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், அதிகளவில் பணத்தைப் பதுக்கி வைத்தல் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் வருமானவரித் துறை, அமலாக்கத் துறை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
தேர்தல் செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கில் வராத பணத்தைக் கண்டறியவும் வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, தமிழகம், புதுச்சேரி வருமானவரித் துறை மண்டலத்தின், புலனாய்வுப் பிரிவு இயக்குநரகம் சார்பில் இலவச தொலைபேசி எண்களுடன், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்யப் பணம், பொருள்கள் எடுத்துச் சென்றாலோ அல்லது பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தாலோ பொதுமக்கள் இக்கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வருமான வரி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 20 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை, கோவை, சேலம் உள்பட மாநிலம் முழுவதும் சுமார் 20 இடங்களில் தனி நபர்களுக்குச் சொந்தமான பகுதிகளில் சோதனை நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனையில் நேற்று மாலை பெரியளவில் பணமோ, பொருள்களோ கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் நள்ளிரவையும் தாண்டியும் சோதனை நீடித்தது.
இதனால் சோதனை முழுமையான முடிவடைந்த பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்கள் குறித்த விவரத்தைத் தெரிவிக்க முடியும் என வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பண பட்டுவாடாவைத் தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மதுமஹாஜன் பாலகிருஷ்ணன் ஆகியோரை சிறப்புச் செலவின பார்வையாளர்களாகத் தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.இருவரும் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வருமான வரித் துறை கலால் துறை காவல்துறை என பல்வேறு துறைகளில் இருந்து அமலாக்க பணிக்கு நியமிக்கப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பு உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளதால் இத்தேர்தலில் பணம் வாக்காளர்களுக்கு வழங்குவது கட்டுப்படுத்தப்படலாம்.
சக்தி பரமசிவன்