மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

கசாப்புக்கடையில் பெண்கள்!

கசாப்புக்கடையில் பெண்கள்!

வழக்கமாக ஆண்கள் மட்டுமே செய்து வரும் வேலைகளில், தற்போது பெண்களும் நுழைந்து கோலாச்சுவது என்பது இயல்பானதாகிவிட்டது.

கசாப்புக்கடையில் கறி வெட்டுபவர் என்று சொன்னவுடன், நம் மனதில் உடனே தோன்றுவது ஒரு ஆணின் உருவம்தான். ஏனென்றால், அவர்கள் மட்டும்தான் அந்த வேலைகளை செய்து வந்தார்கள். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஆர்வத்துடன் கறி வெட்டும் வேலை செய்து வருகின்றனர்.

பெண் கசாப்புக் கடைக்காரர் நின்று கறி வெட்டும் காட்சி அசாதாரணமானது. முழு ஆட்டை அல்லது பிராய்லர் கோழியை துண்டு துண்டாக்க வெட்டுவதற்கு ஆணுக்கு ஒத்த வலிமை இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும். அவ்வளவு பெரிய கத்தியை தூக்கி கறியை வெட்டுவது என்பது சுலபமான வேலை கிடையாது. இருந்தாலும், அதில் இருக்கும் சந்தோஷம் அலாதியானது என மூன்று பெண்கள் yourstory.comக்கு பேட்டி அளித்துள்ளனர்.

சென்னையில் டெண்டர் கட்ஸ்(‘Tendercuts) எனப்படும் இறைச்சி விற்பனை நிறுவனம் 13 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இங்கு இறைச்சி மிகவும் சுகாதாரமான முறையில் கிடைக்கும். மேலும், இங்கு கிடைக்கும் கடல் உணவுகள் மிகவும் சிறப்பானவை. செயலி மற்றும் இணையம் மூலமாக இறைச்சி டெலிவரி செய்யப்படும். இந்த நிறுவனத்தில் ஆண்களுடன் சேர்ந்து இறைச்சி வெட்டும் வேலையை செய்து வரும் பெண்கள்தான் சுடர்வாணி , சின்னப்பொண்ணு, ஹஜீரா என்ற மூன்று பெண்கள்.

குடும்பத்திற்காக கடினமான வேலைகளை மரியாதையுடன் செய்து வருகிறோம் எனக் கூறும் சுடர்வாணி, துரைப்பாக்கத்திலுள்ள டெண்டர் கட்ஸில் இறைச்சி வெட்டும் வேலையை செய்து வருகிறார். இறைச்சியை வெட்டுவது, சுத்தம் செய்வது, அதை பேக் செய்வது என்பதெல்லாம் அவ்வளவு எளிதான வேலை கிடையாது. பல மணி நேரங்களாக நின்றுகொண்டே பல்வேறு விதமான வேலைகளை செய்ய வேண்டும். இதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் குடும்பத்தை கவனித்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறுகிறார்.

”இங்கு ஆரம்பத்தில் பில் போடும் பணியில்தான் இருந்தேன். இங்கு இறைச்சி வெட்டுபவர்களையும், வெட்டும் முறையையும் பார்த்து, அந்த வேலையை தானும் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது” என்று கூறும் சுடர்வாணி, அதுகுறித்து நிர்வாகத்திடம் தெரிவித்தபோது, தனக்கு மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, இறைச்சி வெட்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்” என்கிறார் களிப்போடு.

இங்கு இருக்கும் நேரத்தில் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் சுடர்வாணி, இதை தவிர்த்து ஒரு கடையில் வேலை பார்த்து வருவதாகவும் கூறுகிறார். ”இதற்கு காரணம் என் குடும்பத்தின் ஒத்துழைப்புதான். வீட்டு செலவுகளுக்கு நானும் சரிபாதி கொடுக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. நான் இந்த வேலை செய்வது, மற்றவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆனால், இந்த வேலையை தொடர்ந்து செய்ய விரும்புகிறேன் எனக் கூறும் அவர், தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், மகன் போலீசாகவும், மகள் கலெக்டராகவும் ஆக வேண்டும் என்ற ஆசையில் உள்ளனர்” என கூறினார்.

பெயர் தான் சின்னப்பொண்ணு,ஆனால் எனக்கு வயசு 45 என்று கூறும் சின்னப்பொண்ணு, ”கடலுார் மாவட்டம் பண்ருட்டி பக்கத்தில் வீரபெருமநல்லுார்தான் எங்க ஊர். என் அப்பா கறிக்கடை கடை வைத்திருந்தார். சின்ன வயதிலேயே அவருடன் கடைக்கு சென்று சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தேன். அதிலிருந்து இறைச்சியை வெட்டுவது, சுத்தம் செய்வதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அதற்கேற்ப என் இரண்டு அக்காக்களுக்கும் திருமணம் முடிந்தது. சிறிது நாள்களிலே அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால், அந்த கடையை நான் நடத்த ஆரம்பித்தேன் எனக் கூறும் சின்னப்பொண்ணு கசாப்புகடைக்காரரின் மகள் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு பெருமிதம்தான்” என்கிறார்.

திருமணம் முடிந்த பிறகு, சென்னைக்கு வந்துவிட்டோம். இங்கு கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தேன். அப்போதுதான், டெண்டர் கட்ஸில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக கேள்விப்பட்டு அதற்கு விண்ணப்பித்தேன். என்னை பற்றி அவர்களுக்கு தெரியாததால், துரைப்பாக்கத்தில் இறால்களை சுத்தம்செய்யும் பணி எனக்கு கொடுக்கப்பட்டது.

என்னைப பற்றி அறிந்த விற்பனை மேலாளர், இறைச்சியை வெட்டும் பகுதிக்கு என்னை மாற்றினார். வேலைக்கு சேர்ந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது” என்கிறார் சின்னப்பொண்ணு. கொஞ்ச ஆண்டுகள் கழித்து தன் சொந்த ஊருக்கே சென்று அங்கு திரும்பவும் இறைச்சி கடை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது ஆசை” என தெரிவித்தார்.

சின்ன பொண்ணு மாதிரியே கறிக்கடை குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர் தான் ஹஜீரா. ”என் சொந்த ஊர் சென்னை தான். தாத்தா, அப்பா, சித்தப்பானு எல்லோருமே கறிக்கடை தான் வச்சிருக்காங்க. எங்க பரம்பரைத் தொழில் இது. சின்ன வயசுலயே அப்பாக்கூட கடைக்கு போவேன். சின்ன சின்ன உதவிகள் செய்வேன். கணவரும் இந்த தொழில் தான். கல்யாணம் ஆன பிறகு அவர் தான் கறி வெட்டுவதற்கு சொல்லிக் கொடுத்தாரு” என்று கூறும் ஹஜீரா ”டெண்டர் கட்ஸின் கீழ்கட்டளை கிளையில் கறி வெட்டும் வேலை இருப்பது தெரிந்து வேலைக்கு சேர்ந்தேன்.

இங்கு வேலைக்கு சேர்ந்த 7 மாதங்களில் அதிகளவு கற்றுக் கொண்டேன். காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை வேலை செய்வேன். இறைச்சியை வெட்டுவது, சுத்தம் செய்வது என்பது அவ்வளவு எளிதான வேலை கிடையாதுதான். ஆனால் இதை செய்வதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் கிடைக்கிறது. இங்கு அனைத்துமே சுகாதாரமான முறையில் இருக்கும். தற்போது பெரிய மீன்களை எப்படி வெட்டுவது, சுத்தம் செய்வது என்பது குறித்து கற்று கொண்டிருக்கிறேன்” என்கிறார் ஹஜீரா.

வினிதா

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

வெள்ளி 12 மா 2021