மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 மா 2021

ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு: 50 பேரிடம் விசாரணை!

ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு: 50 பேரிடம் விசாரணை!

பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தார். இவ்விவகாரத்தில் ராஜேஷ் தாஸ் உத்தரவின் பேரில் பெண் எஸ்.பி.யின் காரை வழிமறித்த செங்கல்பட்டு, எஸ்.பி. கண்ணன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது.

இந்த சூழலில் இவ்வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.யான ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், “சிறப்பு டிஜிபி ஏற்கனவே இதே போல வேறொரு பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். இது போன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.

உயரதிகாரி மீதான புகாரை மாநில போலீசார் சிபிசிஐடி விசாரித்தால் மென்மையான அணுகுமுறையைக் கையாளுவார்கள். எனவே இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று (மார்ச் 10) தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ”இந்த விவகாரத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இதுவரை 50 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

-பிரியா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

புதன் 10 மா 2021