pஒரே குடும்பம்: 12 பேர் தீக்குளிக்க முயற்சி!

public

இப்போதெல்லாம் வீட்டில் பிரச்சனையா?அதிகாரிகள் தீர்த்துவைக்கவில்லையா? உடனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ உரிய அதிகாரி அலுவலகத்திற்கோ நடுவீதிக்கோ தற்கொலை யுத்தியுடன் வந்து அப்பாவிகள் விபரீத செயலை செய்ய முற்படுவது கொடுமையாக உள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை அடுத்துள்ள கரிக்காலி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது மகன் சக்திவேல், மகள்கள் செல்வி, கலையரசி என 12 பேர் சேர்ந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று (மார்ச் 9) மனு அளிக்க வந்தனர். அவர்களிடம் அங்குள்ள புகார் பெட்டியில் மனுவைச் செலுத்திவிட்டுச் செல்லுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கலெக்டரை சந்திக்க வேண்டும் என சக்திவேல் குடும்பத்தினர் வலியுறுத்தினர். இதனிடையே, சக்திவேல் திடீரென மண்ணெண்ணெய்யை ஊற்றி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், தீக்குளிப்பு முயற்சியிலிருந்து சக்திவேலை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக காவல்துறையிடம் சக்திவேல் கூறியதாவது, “கரிக்காலி எல்.புதூர் பகுதியில் வசித்து வந்த எங்கள் பெரியம்மா சகுந்தலா (எ) மாரிம்மாள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வு காரணமாக இறந்துவிட்டார். அவரது வாரிசு நான்(சக்திவேல்), செல்வி மற்றும் கலையரசி ஆகியோர் மட்டுமே என வேடசந்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் மூலம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்று பெற்றுள்ளோம். சகுந்தலாவின் பெயரிலிருந்த 6.30 ஏக்கர் நிலம், கூட்டுப் பட்டாவாக எங்களது பெயருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், எங்களது உறவினர் குருமூர்த்தி, அர்ஜூன் ஆகியோருக்கு ஆதரவாக, வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரமசிவம், குஜிலியம்பாறை தாசில்தாரிடம் பட்டா மாறுதல் ரத்து செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன்படி எங்கள் பெயருக்கு மாறுதல் செய்யப்பட்ட பட்டாவை ரத்து செய்துவிட்டனர்.

இதுகுறித்து தாசில்தார் சிவபாலனிடம் கேட்டால் எம்எல்ஏ சொல்வதைத்தான் செய்வோம் என கூறிவிட்டார். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி, எம்எல்ஏ பேச்சைக் கேட்டு பட்டாவிலிருந்து பெயர் நீக்கம் செய்த தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மு.விஜயலட்சுமியைச் சந்தித்து புகார் அளிப்பதற்காக சக்திவேல் குடும்பத்தினரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

காவல்துறையினர் மின்னல் வேகத்தில் மீட்புப்பணியைச் செய்ததால் பலர் தீ காயம், உயிரிழப்பிலிருந்து தப்பினர்.பாதிக்கப்படுபவர்கள் மனுமூலம் அதிகாரிகளை அவசரமின்றி நேரில் சந்தித்து தங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் .அவசரகதியில் ஆத்திரத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கவேண்டும் என உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

-சக்தி பரமசிவன்

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *