மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

தேர்தல் அதிகாரிகளின் புது புது யுக்தி!

தேர்தல் அதிகாரிகளின் புது புது யுக்தி!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கான ஏற்பாடுகளிலும், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியிலும் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக புது யுத்திகளுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

குமரி

குமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரையில் “பாராகிளைடர்” மூலம் வானில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சாகச நிகழ்ச்சியைக் குமரி மாவட்ட நிர்வாகம், கோவையில் உள்ள இந்திய வான் விளையாட்டு மற்றும் அறிவியல் மையம் இணைந்து நடத்தியது

இதில் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த மதுநிதா என்ற பள்ளி மாணவி முதன் முதலில் “பாராகிளைடர்” மூலம் 10 நிமிட நேரம் வானில் பறந்து தேர்தல் விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சியை நடத்தினார். இந்த பாராகிளைடரில் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டியதின் அவசியம், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டியதின் அவசியம் மற்றும் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த்தும் பாராகிளைடரில் வானில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விருதுநகர்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் சட்டப்பேரவைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி சிலம்பாட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் முக்கிய வீதிகளில் சிலம்பம் ஆடிசென்ற சிறுவர்கள் நூறு சதவீத வாக்குப் பதிவு நடைபெற வேண்டும். வாக்களிக்கப் பணம் வாங்கக் கூடாது என்ற பதாகைகளுடன் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாள் சுற்றியவாறும் வலம்வந்து வாக்காளர்களைப் பரவசப்படுத்தினர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தோ்தல் அதிகாரிகளால் தயாா் செய்யப்பட்டுள்ள ‘வாக்களிக்க வாங்க’ அழைப்பிதழில் தலைப்பில், அன்புடையீா், நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் பங்குனி 24 ஆம் தேதி, 6.4.2021 (செவ்வாய்கிழமை) சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள், இந்திய தோ்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம், தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுவதால் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள, தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்து சுற்றும் நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தாங்கள் வாக்கினை பதிவு செய்யும் படி அன்புடன் அழைக்கிறோம். வாருங்கள் வாக்களிப்போம். தங்கள் அன்புள்ள தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் என அச்சிடப்பட்ட பத்திரிகை வாக்காளர்களிடம் விநியோகிக்கப்படுகிறது.

நேற்று (மார்ச் 8) உலக மகளிர் தினமன்று மதுரை, நாகர்கோவில் உட்பட பல்வேறு பகுதிகளில் மகளிர் குழுவினர் ரங்கோலி கோலமிட்டும் மண்சிற்பம் செய்தும் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில் விருதுநகர், தென்காசி கன்னியாகுமரி தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் மலைவாழ் பழங்குடியின வாக்காளர்களை சந்தித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறை குறித்து செயல் விளக்கம் கொடுத்து அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இதோடு அனைத்து நகரங்களுக்கும் இப்போது தேர்தல் பாதுகாப்புக்கு வந்துள்ள துணை ராணுவத்தினர் காவல்துறையினர் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தி வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். இது தமிழகத்தில் புது வாக்காளர்களை வாக்களிக்க ஆர்வம் ஏற்படுத்துவதுடன் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கும் என்றே தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

-சக்தி பரமசிவன்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 9 மா 2021