^சென்னை புத்தகக்காட்சி இன்றே கடைசி!

public

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஒவ்வோர் ஆண்டும் புத்தகக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44ஆவது சென்னை புத்தகக்காட்சி கடந்த மாதம் (பிப்ரவரி) 24ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 14 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் புத்தகக்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்தப் புத்தகக்காட்சியில் 700 அரங்குகளுடன் 500 பதிப்பாளர்களின் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

கொரோனா காரணமாக தாமதமாக புத்தகக்காட்சி இந்த ஆண்டு தொடங்கி இருந்தாலும், வாசகர்களிடம் வரவேற்பு எதிர்பார்த்த அளவில் இருந்ததாகவும், இதுவரை ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புத்தகக்காட்சியைப் பார்வையிட்டு இருப்பதாகவும் பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கிப்போய் இருந்த பலர் எழுத்தாளர்களாக உருவெடுத்து இருப்பதாகவும், நவீன இலக்கியம், சரித்திர நாவல்கள், குழந்தைகளுக்கான அறிவுத்திறன் சார்ந்த புத்தகங்கள், ஆங்கில நாவல்கள், வரலாறு நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள் ஆகியவற்றை வாசகர்கள் தேடி வாங்கிச் சென்றதாகவும், 50 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருவது குறைந்திருப்பதாகவும் பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன் கூறினார்.

உலக மகளிர் தினத்தையொட்டி நேற்று (மார்ச் 8) மகளிர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிறைவு நாளான இன்று மாலை 6 மணிக்கு பதிப்புத்துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியுடன் புத்தகக்காட்சி முடிவடைகிறது.

சென்னை புத்தகக்காட்சியைத் தொடர்ந்து ஈரோடு மற்றும் மதுரையில் வருகிற ஆகஸ்ட் மாதம் புத்தகக்காட்சி நடைபெற இருக்கிறது என்றும், சென்னையில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதத்தில் வழக்கம்போல் புத்தகக்காட்சி நடைபெறும் என்றும் பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *