மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 மா 2021

கொண்டாட்ட நாளல்ல, போராட வேண்டிய நாள்!

கொண்டாட்ட நாளல்ல, போராட வேண்டிய நாள்!

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வேலை தளத்திலும், அன்றாட வாழ்க்கையில் இருக்கும் பல தடைகளை தாண்டி, சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் போன்ற தளத்தில் சாதித்த பெண்களை கொண்டாடும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

வரலாறு

கி.பி. 1789ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின்போது, பெண்களுக்கு சம உரிமை, வாக்குரிமை, உழைப்புக்கேற்ற ஊதியம், சமத்துவம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் இறங்கினர். 1910ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில், நடைபெற்ற உலக சோஷலிச பெண்கள் மாநாட்டில் அனைத்து நாட்டிலுள்ள பெண்களும் சேர்ந்து மகளிர் தினம் என்ற ஒன்றை உருவாக்கி, அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எதிராகப் போராட வேண்டுமென்றும் முடிவு செய்தனர்.

அதன்படி, 1911 ஆம் ஆண்டிலிருந்தே மகளிர் தினம் அனுசரிக்கப்பட்டு வந்தாலும், 1967ஆம் ஆண்டு வரை கம்யூனிச நாடுகள் மற்றும் சோசலிச இயக்கங்களால்தான் இந்த நாள் முக்கியமாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை சர்வதேச தேசிய மகளிர் தினமாக அங்கீகரித்தை தொடர்ந்து, தேசம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

மகளிர் தினத்துக்கு பல நாடுகளில் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சில நாடுகளில் அந்த நாள் புறகணிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தினம் என்பது கொண்டாட்டம் மற்றும் உரிமைகளுக்காக போராடக் கூடிய தினமாகும். பல்கேரியா, ருமேனியா, போன்ற நாடுகளில் மகளிர் தினம் அன்னையர் தினத்திற்கு சமமாக கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் மூன்று நாடுகளில் மட்டுமே 50% அல்லது அதற்கு மேற்பட்ட பெண்கள் நாடாளுமன்றத்தில் பங்கு பெற்றுள்ளனர். 22 நாடுகளில் பெண்கள் மாநில தலைவர்களாக உள்ளனர்.

2021 சர்வதேச மகளிர் தினம் நீண்டகால ஏற்றத் தாழ்வுகளை மாற்றியமைக்கும் வகையில் செயல்பட தேவையான உத்வேகத்தை அளிக்க கூடியதாக இருக்க வேண்டும். என்ன ஏற்றத்தாழ்வுகள் என்றால், பாலின பாகுபாடு, ஊதிய இடைவெளி, வீட்டு வேலைகளை கணக்கில் எடுத்து கொள்ளாதது உள்ளிட்டவையாகும்.

இன்று பல மாநிலங்களில் பெண்களுக்கு சலுகை அளிக்கப்பட்டும், விடுமுறை அறிவிக்கப்பட்டும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டங்களில் தங்களுடைய உரிமையை, சுயமரியாதையை போராடி பெற வேண்டிய கால கட்டத்தில்தான் இருக்கிறோம். இன்றைய நாள் வெறும் கொண்டாட்டத்திற்கான நாளாக மட்டும் பார்க்காமல், போராட்டத்தின் நாளாக பார்க்க வேண்டும்.

பெண்கள் வளர்ச்சி அடைந்தாலும், அந்த காலத்திலிருந்து தற்போது வரை பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகள், பாலின பாகுபாடு, போன்றவை இன்னும் இருக்கதான் செய்கிறது. குறைந்திருக்கிறதே தவிர, முற்றிலும் அழிக்கப்படவில்லை. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க ஒருபோதும் தயங்கக் கூடாது.

இந்நிலையில், மகளிர் தினம் என்றால் இரண்டே இரண்டு செய்திகள்தான் என்கிறார் வழக்கறிஞர் அருள்மொழி, இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ”ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தின கூட்டங்களில் மறக்காமல் சொல்லும் செய்திகள் இரண்டு. முதலாவதாக இது உலக உழைக்கும் மகளிர் தினம். வெறும் கொண்டாட்ட நாளல்ல. குறிப்பாக கோலப்போட்டி அழகிப்போட்டி நடத்தும் நாளல்ல. வீட்டிலும் வெளியிலும் பெண்களின் கடும் உழைப்பை நினைத்துப்பார்த்து அதற்கு சமூகம் நியாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதுதான் உலக உழைக்கும் மகளிர் தினம் என்ற செய்தி. இரண்டாவது , தொழிலாளர்களாகத் திரண்டு 8 மணிநேரத்திற்கு மேல் வேலை வாங்கக்கூடாது என்று போராடிய அந்தப் பெண்களால்தான் ஆண்களுக்கும் எட்டுமணிநேரம் மட்டுமே வேலை என்ற உரிமை கிடைத்தது. இந்த செய்திகளை இன்று நினைவு படுத்திக்கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.” என்கிறார்

பெண்கள் தினம் என்பது தங்களை அலங்கரித்து கொண்டு கேக் வெட்டி, பூங்கொத்து பெற்று குதூகலிக்கும் கொண்டாட்டம் என்று பலர் நினைக்கிறார்கள். அது முதலாளித்துவ வியாபாரத்தின் யுக்தியாகும். நாம் கொஞ்சமாவது சுதந்திரமாக வாழ தன் உயிரை நீத்த பெண்களை நினைவு கூறுவதை தவிர்த்து வேறு வழியில் சென்று கொண்டிருக்கிறோம். சில பெண்களின் குருதியால் எழுதப்பட்டதுதான் பெண் சுதந்திரம் என்று சமூக செயற்பாட்டாளர் யோகி, தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் பெண் சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறோம், இது கொண்டாட்ட நாள் அல்ல போராட வேண்டிய நாள் என்கின்றன பெண்ணிய அமைப்புகள்.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 8 மா 2021