கிச்சன் கீர்த்தனா: சங்கரா மீன் வறுவல்!

அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம் உள்ளது என்பதால் மட்டன், சிக்கன் சாப்பிடுவதில் உடல்நிலை காரணமாக சிலருக்கு வரையறைகள் இருக்கும். ஆனால், மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருள்களும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் மீன் உணவுகள் பார்வைத் திறனை மேம்படுத்தக்கூடியவை என்பது கூடுதல் சிறப்பு. இந்த சங்கரா மீன் வறுவல் செய்து இந்நாளைக் கொண்டாடுங்கள்.
என்ன தேவை?
சங்கரா மீன் - 500 கிராம்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - மூன்று டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - இரண்டு டீஸ்பூன்
மிளகுத்தூள் - இரண்டு டீஸ்பூன்
சோம்புத்தூள் - இரண்டு டீஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எலுமிச்சைச்சாறு - ஒரு பழம் அளவு
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 150 மில்லி
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மீனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். மற்ற மசாலா பொடிகளைச் சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, மீனில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீனை போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சைப்பழத்தால் அலங்கரித்து பரிமாறவும்.