மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

மூடப்படும் பட்டாசு ஆலைகள்!

மூடப்படும் பட்டாசு ஆலைகள்!

விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரியிலிருந்து தொடர்ந்து நடந்த பட்டாசு ஆலை விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதனால் விதிமுறை மீறிச் செயல்பட்ட பல பட்டாசு ஆலைகள் மூடப்பட்டது. இதை கண்டித்து நாளை (மாா்ச் 8) முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்

சாத்தூர் அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12ல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் பலா் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகாசி அருகே காளையாா்குறிச்சியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 போ் உயிரிழந்தனா். பின்னர், வி.சொக்கலிங்காபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டதால் மத்திய அரசு அச்சங்குளம் விபத்து குறித்து ஆய்வு செய்யக் குழு அமைத்தது.. இதையடுத்து மாவட்ட வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து விதிகளை மீறிச் செயல்பட்டதாக சுமார் 50 பட்டாசு ஆலைகளை படைகலச் சட்டத்தின்கீழ் ‘சீல்’ வைத்து மூடினா்.

சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர், 2 குழுக்களை அமைத்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து, வெடிபொருள் கட்டுப்பாட்டு விதியின் கீழ் 13 ஆலைகளின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்தனர்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ரா. கண்ணன், “விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்தைத் தடுக்கும் வகையில் வட்டாட்சியர் தலைமையில் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் கடந்த 10 நாள்களில் அதிகளவு விதிமுறை மீறல்கள் உள்ள 28 பட்டாசு ஆலைகள் கண்டறியப்பட்டு அவற்றிற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது தொடா்ந்து நடைபெறும். விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆலைகளுக்குச் சீல் வைக்கப்படும்” என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் விதியை மீறிச் செயல்பட்ட 13 பட்டாசு ஆலைகளுக்கு வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் சீல் வைத்துள்ளதாகச் சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் கூறியுள்ளார்.

”விதியை மீறி பட்டாசு ஆலைகள் செயல்படக் கூடாது எனப் பலமுறை அறிவுறுத்தப்பட்டும் விபத்து ஏற்பட்டது வருத்தமளிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் சுமார் 800க்கும் மேல் உள்ளது. இந்த ஆலைகளை ஆய்வு செய்ய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பல பட்டாசு ஆலை ஆய்வு செய்தது. இதில் மரத்தடியில் பட்டாசு தயார் செய்தது, அளவுக்கு அதிகமாக மருந்து இருப்பு வைத்திருந்தது விதியை மீறி பட்டாசு தயாரிக்கும் அறையில் அளவுக்கு அதிகமாக பணியாளர்களை கொண்டு வேலை செய்தது உள்ளிட்ட பல விதிமீறல்கள் இருந்த 13 ஆலைகளுக்கு அக்குழுவினர் சீல் வைக்கப்பட்டுள்ளதாக” கூறினார் .

இந்நிலையில் விருதுநகா் மாவட்டத்தில் மாா்ச் 8 ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் மூடப்படும் என ஆலை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ப.கணேசன், “அச்சங்குளம் விபத்து ஏற்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து விதிகளை மீறி செயல்பட்டதாகப் பல ஆலைகளுக்குச் சீல் வைத்ததைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள பல பட்டாசு ஆலைகளை அதன் உரிமையாளா்கள் தாங்களாகவே மூடத் தொடங்கினர். தொடர்ந்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்து, விதிகளை மீறிச் செயல்படும் பட்டாசு ஆலைகளின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடும் நிலை ஏற்படலாம்.

வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரால் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ஆலைகளை மீண்டும் இயக்க, உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உருவாகலாம். எனவே ஆலை உரிமையாளர்கள் தங்களது ஆலையைப் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், ஆலைகளை மார்ச் 8 ஆம் தேதி முதல் மூடுவதற்கு முடிவு செய்துள்ளனர்” என்றார்.

-சக்தி பரமசிவன்

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

ஞாயிறு 7 மா 2021