மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 மா 2021

அர்ச்சகர் நியமனத்துக்கு தேவைப்படும் உரிமை!

அர்ச்சகர் நியமனத்துக்கு தேவைப்படும் உரிமை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடவடிக்கைகளைத் தொடர, இந்து சமய அறநிலையத் துறைக்கு அனுமதியளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர், ஸ்தானிகம், பரிசாரகம், பரிவராகம், மெய்காவல் ஆகிய ஐந்து பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கடந்த ஜனவரி 21ஆம் தேதி பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்கு, தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும், வயது 18 முதல் 45க்குள் இருக்க வேண்டும், வேத பாடசாலைகளில் வேத ஆகம படிப்பு முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சிவாச்சாரியார் செந்தில்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில், அருணாச்சலேஸ்வரர் கோயில் அர்ச்சகர்கள் பணிக்கு ஆகம விதிகளின்படி ஆதி சைவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்க முடியும். மேலும், சமய தீட்சை, விஷேச தீட்சை, நிர்வாண தீட்சை, அர்ச்சகர் அபிஷேக தீட்சைகள் பெற்றவரைத்தான் கோயில் அர்ச்சகராக நியமிக்க முடியும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள், கோயில் மரபுகளுக்கு முரணாக இருப்பதால், அர்ச்சகர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி மகாதேவன் முன்பு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்காதவர், இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமை இல்லை என்றும் ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுவிட்டதாகவும், மொத்தம் 322 பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும், ஆகம விதிகளில் அனுபவம் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அர்ச்சகர்கள் பணி நியமனம் என்பது மத பழக்க வழக்கங்களையும் கோயில் நடைமுறைகளையும் பின்பற்றியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோயில் மரபு, நடைமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றி தேர்வு நடவடிக்கைகளைத் தொடரலாம் என இந்து அற நிலையத் துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரருக்கு இந்த வழக்கு தொடர அடிப்படை உரிமை இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

சனி 6 மா 2021