மயான பராமரிப்பாளருக்கு இலவச வீடு!


சேலம் டிவிஎஸ் மயானத்தில் பராமரிப்பாளராக இருந்து வரும் சீதாவுக்கு சேலம் டிரக்கர்ஸ் கிளப் இலவசமாக வீடு கட்டி கொடுத்துள்ளது.
சேலம் டிவிஎஸ் மயானத்தில் கடந்த பல ஆண்டுகளாக தனியாக ஆயிரக்கணக்கான பிரேதங்களை அடக்கம் செய்யும் பணியில் சீதா என்பவர் ஈடுபட்டு வருகிறார். இவருடைய சொந்த ஊர் பெத்தநாயக்கன்பாளையம். எட்டாவது வகுப்பு படிக்கும்போதே சீதாவின் பெற்றோர்கள் இறந்துபோனதால், தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். சின்ன வயதிலேயே உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார் சீதா. அதில், வரும் வருமானத்தை வைத்து தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
இதுவரை 10,000க்கும் அதிகமான பிரேதங்களை இரவு பகல் என்று பாராமல் தனி ஒரு ஆளாய் நின்று குழி தோண்டி அடக்கம் செய்து, தேவையான சடங்குகளை செய்து வந்துள்ளார். இதனால், அப்பகுதி மக்களின் நன்மதிப்பை சீதா பெற்றுள்ளார்.
சீதாவுக்கு, கூரை வீடு மட்டுமே இருந்தது. மயான வளாகத்தில் ஓய்வுக்காக ஏற்கனவே மாநகராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்பட்ட சிறிய அறை முற்றிலும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால், சமூக ஆர்வலர்கள் அக்கட்டடத்தை புனரமைத்து கொடுக்க வேண்டும் என்று சீதா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுபற்றி அறிந்த சேலம் டிரக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து ரூ.1.50 லட்சம் மதிப்பில் பழுதடைந்த கட்டடத்தை சீரமைத்து இலவசமாக வீட்டை கட்டி கொடுத்துள்ளனர். இந்த வீட்டை சேலம் டிரக்கர்ஸ் கிளப் நிர்வாகிகள் நேற்று சீதாவிடம் ஒப்படைத்தனர்.
வினிதா