மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

கொரோனா பரிசோதனை: குறையும் சுற்றுலா பயணிகளின் வருகை!

கொரோனா பரிசோதனை: குறையும் சுற்றுலா பயணிகளின் வருகை!

கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதால் ஊட்டியைப் போல் கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானலில் நிலவும் இதமான சீதோஷ்ண சூழலை அனுபவிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் வெளிமாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகள் மூலம் கொடைக்கானலில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே கொடைக்கானலுக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, கொடைக்கானலின் நுழைவு வாயில் பகுதியாக திகழும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சோதனைச்சாவடியில் பரிசோதனை நடந்து வருகிறது.

வெளிமாநில, வெளிமாவட்டங்களில் இருந்து வருகிற சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவு ஓரிரு நாட்களில் தெரியவரும். அதுவரை வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று வட்டார மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டதால் ஊட்டியில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதற்கிடையே மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எல்லை பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும். அப்போதுதான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இல்லையென்றால் மாவட்ட எல்லையில் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் கடந்த சில நாட்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி 11,482 பேர் வந்தனர்.கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாவரவியல் பூங்காவுக்கு 4,839 பேர், 1ஆம் தேதி 2,587 பேர், 2ஆம் தேதி 1,981 பேர் வருகை தந்தனர். கொரோனா சான்றிதழ் கட்டுப்பாட்டால் சுற்றுலா பயணிகள் வருகை வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பாதியாகக் குறைந்துள்ளது.

“கொடைக்கானலில் தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதால், ஊட்டியைப் போல் கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும்” என்கின்றனர் அங்குள்ள வியாபாரிகளும் மக்களும்.

-ராஜ்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 5 மா 2021