மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

5 தலைமுறையைக் கண்ட மூதாட்டி: 101ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

5 தலைமுறையைக் கண்ட மூதாட்டி: 101ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் மனைவி பழனியம்மாள். தனது 101ஆவது பிறந்தநாளைச் சுற்றமும் நட்புமாய் குடும்பத்துடன் நேற்று (மார்ச் 4) உற்சாகமாகக் கொண்டாடினார்.

காலம் நவீன யுகமாக மாறிவரும் நிலையில் மாறுபட்ட உணவுப் பழக்க வழக்க முறைகள் மனிதனிடம் ஒட்டிக்கொண்டது. புதுப்புது சத்தில்லா உணவுகள் புதுப்புது நோய்கள் எனப் பல்வேறு காரணங்களால் மனிதனின் ஆயுள்காலம் தற்போதைய விஞ்ஞான யுகத்தில் குறைந்து கொண்டே வருகிறது.

இந்தியா சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நூறு, நூற்றி பத்து வயது என சர்வ சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்தனர் நம் முன்னோர். நல்ல உணவு, நல்ல திடமான தேகத்துடன் எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டனர். இன்று 60 வயதை எட்ட மருத்துவத்தோடு திணறிக் கொண்டிருக்கின்றனர்.

இயந்திர மயமாகிப் போன மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் அவசரகதியில் பரபரப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் உடல்நலத்தைப் பேணுவதில் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. கிடைத்த உணவை உண்டு காலம் போகிற போக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில் தங்களது உடல்நலத்தில் அக்கறை கொண்டு அதனைப் பேணி பாதுகாப்பவர்கள் இப்போது சொற்பமாகவே உள்ளனர்.

இதில் ஒருவராக இருப்பவர்தான் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியைச் சேர்ந்த மகாதேவன் மனைவி பழனியம்மாள். செஞ்சுரி அடித்து 101ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அத்துடன் ஐந்து தலைமுறைகளையும் கடந்து இருக்கிறார். இவருக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள், 19 பேரன் - பேத்திகள். 25 கொள்ளுப்பேரன் - கொள்ளுப்பேத்திகள், இரண்டு எள்ளு பேத்திகள் உள்ளனர்.

இன்றும் தனது பணிகளை தானே செய்து வருகிறார் ஆரோக்கியத்துடன். மனிதன் எப்படி ஆரோக்கியம் பேண வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து வரும் இம்மூதாட்டியை அவரது வாரிசுகள் அனைவரும் சேர்ந்து 101ஆவது பிறந்தநாளை வியாழக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் வைத்துக் கொண்டாடினர்.உறவினர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுச்சென்றனர்.

பழனியம்மாளின் இரண்டாவது மகன் ராமகிருஷ்ணன் கூறுகையில், "எனது தாயின் இந்த ஆரோக்கியத்திற்குக் காரணம் அவரது உணவு பழக்கவழக்கங்கள்தான். காலையில் ஒரு இட்லி, மதியம் 200 கிராம் சாதம், இரவு ஒரு தோசை என எளிமையான தனது உணவு பழக்கவழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறார். அத்துடன் அவராகவே அவரது வேலைகளைச் செய்து கொள்கிறார்.

தினமும் 2 மணி நேரம் நாளிதழ்கள் படிக்கிறார். செய்தி சேனல்கள் பார்க்கிறார். அவர் இவ்வளவு நாள் ஆரோக்கியமாக இருந்து எங்களை வழி நடத்தியது எங்களுக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய ஒரு கொடை" என்றார்.

அவரது பேத்தி லட்சுமி கூறுகையில், "இன்று (நேற்று) எங்கள் பாட்டி 101ஆவது பிறந்தநாளை நாங்கள் அனைவரும் இணைந்து மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினோம்" என்றார் மகிழ்ச்சி பொங்க. பழனியம்மாளிடம் உறவினர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் பலரும் ஆசிபெற்றுச் சென்றது அன்பின் வெளிப்பாடாக இருந்தது.

சக்தி பரமசிவன்

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

வெள்ளி 5 மா 2021