மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 மா 2021

அரசு ஊழியர்களுக்கு தனிவாக்குச்சாவடி: மார்ச் 8க்குள் பதிலளிக்க உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு தனிவாக்குச்சாவடி: மார்ச் 8க்குள் பதிலளிக்க உத்தரவு!

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்களிக்க தனி வாக்குச்சாவடி அமைக்கக் கோரிய வழக்கில் மார்ச் 8ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. அதனால், அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தனி வாக்குச்சாவடிகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குக்கான வாக்குச்சீட்டுகள் கடைசி கட்ட பயிற்சியின்போது வழங்கப்படுகிறது. வாக்குச் சீட்டில் அதிகாரிகளின், அத்தாட்சி பெற்றாலும் பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கு நேரம் இருப்பதில்லை.

தபால் வாக்குகள் செலுத்தினாலும், சில நேரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தான், அந்த வாக்குச்சீட்டுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியை சென்றடைகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 3 லட்சத்து 97 ஆயிரத்து 697 பேர் தபால் மூலம் வாக்களித்தனர். 37 ஆயிரத்து 712 பேர் வாக்குகளை செலுத்த முடியவில்லை. தபால் வாக்கு செலுத்தியவர்களில் 24 ஆயிரத்து 912 பேருடைய வாக்குச்சீட்டுகள் அதிகாரிகளின் அத்தாட்சி இல்லாததால் நிராகரிக்கப்பட்டதன் மூலம் மொத்தமாக 62 ஆயிரத்து 624 பேர் வாக்குகள் வீணாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68,374 லிருந்து 90,000 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணிக்கு 6 லட்சம் பேர் அமர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனவும், தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தனி வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த மனு குறித்து விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மார்ச் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

புதன் 3 மா 2021