மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 மா 2021

பெண்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கிய தனலெட்சுமி

பெண்களின் வாழ்க்கையை பிரகாசமாக்கிய தனலெட்சுமி

திருவிழாக்கள், திருமணங்கள் பண்டிகைகள் போன்றவற்றிற்கு ஸ்பீக்கர் கட்டி சீரியல் லைட் கட்டி விழா கொண்டாட்டத்தை கொண்டு வருகிறவர்கள் ஆண்களே என்பது பொதுவானது. ஆனால், சீரியல் கட்டும் தொழிலில் அறந்தாங்கி அருகே வசித்து வரும் தனலட்சுமி என்ற பெண் கோலோச்சுகிறார் . அவரது வாழ்க்கை மட்டுமல்லாமல் அவரால் பல பெண்களின் வாழ்க்கையை பல்புகள் எப்படி பிரகாசமாக்கியது என்பதை பார்ப்போம்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அரசர்குளம் என்ற ஊர் உள்ளது. மிகவும் வறட்சியான கிராமம். பருவம் தப்பும் மழையால் அந்த ஊர் விவசாயிகள் வேளாண் தொழிலை முப்போகத்திற்கும் செய்ய முடியாத நிலை.வேளாண்மை பொய்த்ததால் பலர் அந்த ஊரை விட்டும், பலர் வேறு தொழிலுக்கும் சென்றுவிட்டனர். தனலெட்சுமியின் தந்தையும் ஒரு விவசாயிதான். அவரது அம்மா அங்கன்வாடி ஊழியர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தனலட்சுமியின் சகோதரன் இறந்துவிட்டார்.

12-ஆம் வகுப்புவரை படித்த தனலெட்சுமி, அதே ஊரைச் சேர்ந்த அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். விழாக்களுக்கு சீரியல் லைட் கட்டும் தொழிலை அசோக் செய்து வருகிறார். தனலட்சுமி பற்றிய ஒரு குட்டி அறிமுகம் இதுதான்.

“வெறும் இரண்டரை ஏக்கர் நிலம் மட்டுமே கொண்ட சிறு விவசாயிகள் நாங்கள்.இந்த பகுதியில் வறட்சி அதிகமாக இருப்பதால், எங்களால் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை. அந்த வருமானம் எங்களது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. ஒரு ஆர்டர் எடுத்து சீரியல் லைட் கட்டினால், இரண்டாயிரம், மூன்றாயிரம் ரூபாய் மட்டுமே கிடைப்பதால் என் கணவர் அவருக்கு உதவியாக ஆள் வைத்து கொள்வதில்லை. பணப் பற்றாக்குறை இருந்ததால், சீரியல் லைட் கட்டும் தொழிலில் என் கணவருக்கு உதவியாக இருக்க முடிவு செய்து, அவரிடம் கூறினேன். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். மின்சாரம், வயர், கம்பி என ஆபத்து நிறைந்த வேலையில், அவர் என்னை ஈடுபடுத்த விரும்பாததால் என்னை அந்த தொழிலுக்கு வர வேண்டாம் என்று கூறினார்” என்கிற தனலட்சுமி தொடர்ந்து..

“ அந்த சமயத்தில், பக்கத்து டவுனிலுள்ள கோயில் திருவிழாவுக்கு சீரியல் பல்பு கட்ட ஆர்டர் வந்தது. மிகக் குறைந்த நாட்களே உள்ளதால், வேறு வழியில்லாமல் என்னை உதவிக்கு அழைத்தார். மூங்கில் குச்சிகளில் கடவுள் உருவங்கள், அரசியல் தலைவர்கள், கட்சி சின்னங்கள், பறவைகள், விலங்குகள், மலர்கள் போன்ற வடிவங்களில் வடிவமைத்து, அதன்மீது சீரியல் லைட் செட் பண்ண வேண்டும்.நான் அதை செய்து கொடுத்தேன். அது என் கணவருக்கு பிடித்திருந்தது. மிகக் குறுகிய காலத்தில் வேலையை கற்றுக் கொண்டு இவ்வளவு திறமையாக வேலை செய்கிறாளே... என என் கணவருக்கு ஆச்சரியம்! அதன் பின்னர் அவர் அதிக அளவு ஆர்டர்களை எடுப்பதில் கவனம் செலுத்தியபோது, அவருடைய வேலைகளை நான் நிர்வகிக்கத் தொடங்கினேன்” என்கிறார் தனலட்சுமி.

தனலட்சுமிக்கு இரு பெண்கள். இருவரையுமே திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். ஆனால், மகள்கள் இருவருக்கும் இந்த தொழிலில் ஆர்வம் ஏற்பட அவர்கள் கணினி மென் பொருள் மூலம் புதிய சீரியல் லைட் டிசைன்களை செய்து கொடுக்க ஆரம்பித்தனர். இரண்டாவது மகளின் கணவர், வணிகத்தை நவீனப்படுத்துதலில் கவனம் செலுத்தினார். இவ்வாறு அவர்களின் தொழில் ஒவ்வொரு நாளும் கால மாற்றத்திற்கு ஏற்ப வளர்ச்சியை நோக்கிச் சென்றது.ஆர்டர்களை சீக்கிரம் முடிக்க வேலைக்கு ஆட்களை எடுக்கும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

ஆனால், இதையும் தாண்டி எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்ததாக கூறும் தனலெட்சுமி, எங்கள் கிராமம் குக்கிராமம் என்பதால், அந்தளவுக்கு போக்குவரத்து வசதி இல்லை. அதேமாதிரி வேலைவாய்ப்புகளும் அந்தளவுக்கு இல்லை. பத்தாண்டுக்கு முன்பு, இந்த தொழில் வெற்றி பெறுமா என நான் நினைக்கவில்லை என்கிறார் தனலட்சுமி.

அரசியல் கூட்டங்கள், பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விழாக்கள் போன்றவற்றிற்கு சீரியல் லைட் அமைக்கும் ”மகாமாரியம்மன் சுய உதவிக் குழு”வுக்கு ஒரு உந்து சக்தியாக தனலெட்சுமி திகழ்கிறார். ஆம், தனலெட்சுமிதான் இந்தக் குழுவை நடத்தி வருகிறார். இவரிடம் 50 பெண்கள் இப்போது வேலை செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல், 20-30 வயதுள்ள 550 பெண்களுக்கு மூங்கில் குச்சிகளில் உருவங்களை வடிவமைத்து சீரியல் பல்பு கட்டுவது தொடர்பாக பயிற்சியும் அளித்துள்ளார். அவர்களும் இதுபோன்ற தொழிலை சிறிய அளவில் தொடங்கியுள்ளனர்.

தனது கிராமத்திலுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், தனது சுற்றுப்புறத்தையொட்டிய கிராம மக்களின் வாழ்க்கைக்கும் தனலெட்சுமி ஒரு புதிய வடிவத்தை தந்துள்ளார்.

இந்த சுய உதவிக் குழு எப்படி அமைக்கப்பட்டது என்பது குறித்து கூறுகிறார் தனலெட்சுமி, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை(The Srinivasan Services Trust) அளித்த கடன் உதவியில்தான் இந்தக் குழு ஆரம்பிக்கப்பட்டது. மேலும், இந்தியா முழுவதும் எங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் உதவியது. அதுமட்டுமில்லாமல், உள்ளூர் சமூக மேம்பாட்டு அலுவலர் மற்றும் காவல் துறையினரும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். கிட்டதட்ட ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை கிடைக்க பெற்றது.

இது எல்லாம் சுமூகமான முறையில் கிடைத்துவிடவில்லை. கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் தொழில் மிகவும் பாதிப்படைந்தது. இருப்பினும், தனலெட்சுமி நம்பிக்கையை கைவிடவில்லை. சூழ்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன. ஆர்டர்கள் வர ஆரம்பித்துள்ளது. விரைவில் நாங்கள் பழைய வளர்ச்சிக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு கிடைத்த உண்மையான வெகுமதி என்னவென்றால், பல பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவும், சுதந்திரமாக இருக்கவும் உதவியாக இருந்ததுதான். பெண்கள், தற்போது வீட்டை விட்டு வெளியில் வந்து தங்கள் தேவைகளுக்காக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டனர். எனக்குக் கிடைத்த ஒரு சின்ன வாய்ப்பை பயன்படுத்தி எனது சமூகத்துக்கு ஏற்ற மாற்றத்தையும், சேவையும் என்னால் கொண்டு வர முடிந்தது என்பதை நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

வினிதா

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

செவ்வாய் 2 மா 2021