மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 மா 2021

தொடர்ந்து விலை சரிவு: தேயிலை விவசாயிகள் கவலை!

தொடர்ந்து விலை சரிவு: தேயிலை விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு குறைந்து பரவலாக மழை பெய்து வருவதால், பச்சை தேயிலை பறிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூளுக்குத் தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளர்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும் 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.

விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அதன்படி விவசாயிகள் விநியோகிக்கும் பச்சை தேயிலையைக்கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது.

அந்தத் தேயிலைத்தூள், குன்னூர் ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை ஏலம் எடுக்கின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே இந்த ஏலத்தில் கலந்துகொள்ள முடியும்.

அதன்படி கடந்த வாரம் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 16 லட்சத்து 82,000 கிலோ தேயிலைத்துள் வந்தது. அதில் 12 லட்சத்து 42,000 கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 40,000 கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

ஏலத்தில் 9 லட்சத்து 86,000 கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.12 கோடியே 34 லட்சம். இது 59 சதவிகித விற்பனை ஆகும். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.6 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

கடந்த மூன்று வாரங்களாகத் தேயிலைத்தூளுக்குத் தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். அடுத்த ஏலம் வருகிற 4, 5ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. “அந்த ஏலத்திலும் விலை சரிவு இருந்தால் எங்களின் வாழ்வாதாரம் இன்னும் பாதிக்கும்” என்கிறார்கள், தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

செவ்வாய் 2 மா 2021