பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: மனுக்கள் தள்ளுபடி!


அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட வேண்டியதில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
கடந்த 2017ஆம் ஆண்டில், தமிழகத்தில் நடந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில், 196 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் தெரியவந்தது. இதனால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அந்த 196 பேரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதத் தடை விதிக்கப்பட்டது.
தேர்வு ரத்து செய்யப்பட்டதையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களைத் தவிர்த்து மற்ற தகுதியானவர்களை நியமிக்கக் கோரியும் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கையே என உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து தேர்வில் கலந்து கொண்ட பலர் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை விடுத்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தேர்வில் முறைகேடு நடந்ததால்தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வில் பங்கேற்ற யாருக்காகவும் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
வினிதா