அடுத்த இரு ஆண்டுகளில் 1 கோடி இலவச எல்பிஜி இணைப்பு!

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 1 கோடி இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்கவுள்ளதாகவும், அதன்மூலம் நாட்டில் 100% சுத்தமான எரிபொருள் என்ற லட்சியம் விரைவில் சாத்தியமாகும் என்றும் மத்திய எண்ணெய் அமைச்சக செயலர் தருண் கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எண்ணெய் அமைச்சக செயலர் தருண் கபூர் கூறுகையில், “குறைந்தபட்ச அடையாள ஆவணங்களுடன் எல்பிஜி இணைப்பை வழங்குவதற்கும், சிலிண்டர்கள் பெறும் இடத்திற்கான ஆதாரத்தை வலியுறுத்தாமலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தில், 3 டீலர்களிடமிருந்து, புதிய சிலிண்டர்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்பு ஒரேயொரு டீலர் மட்டுமே இதைச் செய்து வந்ததால் தொடர்ச்சியாக இலவச சிலிண்டர்கள் அளிக்கப்படவில்லை. அதற்கு காரணம் சிலிண்டர்கள் தட்டுப்பாடே.
4 ஆண்டுகளில் 8 கோடி இலவச சிலிண்டர்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் எல்பிஜி பயனாளர்களின் எண்ணிக்கை 29 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 1 கோடி இலவச இணைப்புகளை வழங்குவதே எங்களது இலக்கு. முன்பு இலவச இணைப்புகள் வழங்கிய போது விடுபட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி.
உஜ்வாலா திட்டத்தினால் தற்போது இந்தியாவில் எல்பிஜி இல்லாதவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சமையல் எரிவாயுவின் மூலம் வெளியாகும் கரியமில வாயுவின் அளவு மற்ற மரபார்ந்த எரிபொருட்களிலிருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்ஸைடை விட 50% குறைவு. ஒரு குடும்பம் தற்காலிகமாக ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு குடிபெயர்ந்தாலும் உடனடியாக எல்பிஜி இணைப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைவோர் தங்களுக்கான கேஸ் அடுப்பை வாங்கிக் கொள்ள வேண்டும். பயனாளர்கள் நலன் கருதி சிலிண்டர் தீர்ந்தவுடன் முதல் முறை ரீ ஃபில் செய்வதற்கான தொகையை தவணைகளில் செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அடுத்தடுத்த ரீஃபில்களுக்கான செலவுகளை பயனாளர்களே செலுத்த வேண்டும்” என்று கூறினார்.