மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 பிப் 2021

அத்தனைக்கும் ஆசைப்படுவதற்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?

அத்தனைக்கும் ஆசைப்படுவதற்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?

சத்குரு

‘அத்தனைக்கும் ஆசைப்படு!’ என்றால் பேராசைப்படுவது என சிலர் புரிந்துகொள்கின்றனர். வாழ்க்கையில் ஆசைப்படுவது குறித்து நாம் கொண்டுள்ள தவறான புரிதல்களை சங்கரன்பிள்ளை கதைகள் மூலமாக உணர்த்தி, உண்மையை புரியவைக்கிறார் சத்குரு.

உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கவனியுங்கள்

உங்கள்மீது இருக்கும் ஆசையால்தான் பூமி தன் புவியீர்ப்பு விசையைச் செலுத்தி, உங்களைத் தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறது.

சூரியனிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் தனக்கான பாதையை அமைத்துக் கொண்டு, இந்தப் பூமி வலம் வருகிறது. அந்தப் பாதையிலிருந்து அது விலகிப் போய்விடாமல், மையத்தில் இருக்கும் சூரியன் ஆசையோடு இழுத்துப் பிடித்திருக்கிறது.

என்றைக்காவது சூரியனுக்குத் தன் கோள்கள் மீது ஆசை போய்விட்டால் என்னவாகும்? யோசித்துப் பாருங்கள்.

புரிகிறதா... ஆம்.. ஆசை இல்லை என்றால், இந்தப் பிரபஞ்சமே இல்லை!

அப்புறம் ஏன், உங்கள் ஆசையை மட்டும் குறுக்கிக் கொள்கிறீர்கள்? உங்கள் கற்பனைக் கெட்டிய எல்லைகள் வரை உங்கள் ஆசை விரிந்து, மிக மிகப் பெரிதாகவே இருக்கட்டும்.

நட்சத்திரங்களைக் குறி வைத்தால்தான் கூரைவரைக்குமாவது உங்கள் அம்பு போகும். ஐயோ, அவ்வளவு பெரிய ஆசையெல்லாம் கூடாது என்று வில்லைத் தாழ்த்திக் கொண்டே வந்தால், அம்பு உங்கள் பாதங்களின் விரல்களைத்தான் கிள்ளி எறியும்!

கவனியுங்கள்... பேராசைப்படுங்கள் என்று நான் சொல்லவில்லை. உங்கள் ஆசை பெரிதாக இருக்கட்டும் என்றுதான் சொல்கிறேன்.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒருமுறை சங்கரன் பிள்ளை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் எந்த ஸ்டேஷனில் நின்றாலும், சங்கரன் பிள்ளை இறங்கிவிடுவார். இறங்கிய இடத்திலேயே நின்றிருப்பார். வண்டி புறப்படும்போது ஏறிக்கொள்வார்.

சின்ன ஸ்டேஷன், பெரிய ஸ்டேஷன் என்று இல்லை. இரண்டு நிமிடம் நிற்கும் ஸ்டேஷனிலும் இறங்கி ஏறுவார். எதிரிலிருந்த பயணிக்கு சஸ்பென்ஸ் தாங்கவில்லை.

"உங்களைப் பார்த்தால் மிகக் களைப்பாகத் தெரிகிறீர்கள். உங்களோடு வந்தவர்கள் யாராவது காணாமல் போய்விட்டார்களா? புத்தகம், தண்ணீர் ஏதாவது வாங்க வேண்டுமா? எதற்காக இப்படி இறங்கி, இறங்கி ஏறிக் கொண்டிருக்கிறீர்கள்?"

சங்கரன் பிள்ளை தலையைப் பலமாக ஆட்டினார். "அப்படியெல்லாம் இல்லை. சமீபத்தில் எனக்கு பைபாஸ் சர்ஜரி நடந்தது. 'நீண்ட தூரப் பயணங்கள் கூடாது' என்று என் டாக்டர் சொல்லியிருக்கிறார். அதனால், இந்தப் பயணத்தைக் குட்டிக் குட்டிப் பயணங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறேன்!"

'எல்லாவற்றுக்கும் ஆசைப்படு' என்று சத்குருவே சொல்லிவிட்டார் என்று அந்த வார்த்தைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு நீங்கள் ஆசைப்பட ஆரம்பித்தால்... சங்கரன் பிள்ளை டாக்டரைப் புரிந்து கொண்டது போல் ஆகிவிடும்.

அப்படியானால் எது ஆசை, எது பேராசை?

ஒருவருக்கு ஆசை என்று தோன்றுவது, இன்னொருவருக்குப் பேராசையாகத் தோன்றும்.

பைக் வைத்திருப்பவர் கார் வாங்க நினைத்தால், அதை ஆசை என்பீர்கள். அதையே பிளாட்பாரத்தில் படுத்திருப்பவர் சொன்னால், அது பேராசை என்பீர்கள்.

ஒப்பிட்டுப் பார்த்துப் பெருமூச்சு விடும் குணம் உங்களிடம் இருக்கும்வரை, இந்தக் குழப்பம் தீராது.

உண்மையில், உங்கள் ஆசை எங்கே தன் வேர்களை ஊன்றியிருக்கிறது என்று கவனியுங்கள்.

பாட்டிகள் கதை சொல்லும் போதெல்லாம் கவனித்திருப்பீர்கள். ஒரு ராஜகுமாரன் தன்னை எதிர்ப்பவர்களுடன் கடுமையாகப் போராடி ஜெயித்து, ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி இன்னும் என்னென்னவோ சாகசங்கள் எல்லாம் செய்து அழகான ராஜகுமாரியைச் சிறை மீட்டு வருவான். அப்புறம் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று பாட்டி சொல்லி முடிப்பாள்.

சந்தோஷமாக வாழ ஆரம்பித்துவிட்டால், காரியம் முடிந்துவிட்டது. அப்புறம் போராட்டம் இல்லை.

எது சந்தோஷம்?

கல்யாணமானால் சந்தோஷம் என்று நினைத்தீர்கள். பிறகு குழந்தைகள் பிறந்தால்தான் வாழ்க்கை முழுமை பெறும். அதுதான் சந்தோஷம் என்று நினைத்தீர்கள். குழந்தைகளும் பிறந்தன. ஆனால், 'இன்றைக்கு என் நிம்மதி போனதற்கே அவர்கள்தான் காரணம்' என்று மனம் உடைந்து அழுகிறீர்கள்.

கோடி ரூபாய் கிடைத்தால் சந்தோஷம் என்கிறீர்கள். கிடைத்துவிட்டது. ஆனால், அதை அனுபவிக்க நேரமில்லாமல், பிரெட் துண்டுகளைக் கடித்துக் கொண்டே, அடுத்த பிஸினஸ் வெற்றிக்காகக் காரில் டென்ஷனுடன் கம்ப்யூட்டரை தட்டிக் கொண்டே பயணம் செய்கிறீர்கள்.

அமைச்சர் பதவி கிடைத்தால் சந்தோஷம் என்றீர்கள். கிடைத்த பின்னோ, எப்போது நாற்காலி பறிபோகும்... எப்போது வாரண்ட்டோடு போலீஸ் வந்து கதவைத் தட்டும்... எப்போது எதிரி கையால் அரிவாள் வீசப்படும் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அலைகிறீர்கள்.

இப்படித்தான் சங்கரன் பிள்ளையும் ஒருமுறை மாட்டிக் கொண்டார்.

'நிறைய சலுகைகள் கிடைக்கும் என்று சொன்னார்களே!" என்று சங்கரன் பிள்ளை ராணுவத்தில் சேர்ந்தார். தவறுதலாக, இரண்டு நம்பர் சிறிய அளவு பூட்ஸ்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டன. தினமும் அவற்றுக்குள் கால்களை நுழைக்கும்போது, வீரல்கள் எல்லாம் ஒன்றன் மீது ஒன்று ஏறிக்கொள்ளும். நாள் பூராவும் அந்தச் சிறிய பூட்ஸ்களைக் கழற்றாமல், அவர் பாதங்கள் வலியில் தவிக்கும். வேதனை தாங்காமல் சங்கரன் பிள்ளை ஊருக்கெல்லாம் சாபம் கொடுத்துக் கொண்டிருப்பார்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

சிறப்புக் கட்டுரை: உங்களிடமிருந்து மனச்சோர்வை விரட்டுங்கள்!

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

சனி 27 பிப் 2021