கிச்சன் கீர்த்தனா : கொத்துக்கறி ஸ்பைஸி மசாலா


பெரும்பாலானவர்களுக்கு வார இறுதி நாள் கொண்டாட்டம் என்பதே அசத்தலான அசைவ உணவுகளைக் கொண்டதாகவே அமையும். அதற்காக அசைவ ஹோட்டல்களை நாடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் அசைவ ஹோட்டல்களுக்கு இணையான சுவையை, வீட்டு உணவிலும் செய்து அசத்தும் எளிமையான ரெசிப்பியே இந்தக் கொத்துக்கறி ஸ்பைஸி மசாலா.
என்ன தேவை?
கொத்துக்கறி - 500 கிராம்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 2
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 5
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை - ஒரு சிறு துண்டு
அன்னாசிப்பூ - ஒன்று
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
கொத்துக்கறியைத் தண்ணீரில் அலசி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, சீரகம், பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, நீளமாகக் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா இலைகளையும் சேர்த்து இலைகள் சுருங்கும்வரை வதக்கவும். தேவையான உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும்வரை வதக்கவும். வதக்கிய கலவையுடன் கொத்துக்கறியைச் சேர்த்து நன்றாகக் கிளறி, 2 நிமிடங்கள் வதக்கவும். இரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கர் மூடி, வெயிட் போட்டு, 12 நிமிடங்கள் சிறுதீயில் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து பார்த்து, தண்ணீர் அதிகம் இருந்தால் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். கிரேவியாக வந்ததும் இறக்கி சூடாகப் பரிமாறவும். பரோட்டா, சப்பாத்தி, பூரி, தோசை, சாதம் என அனைத்துக்கும் ஏற்ற சுவையான சைடிஷ் இது.