மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 பிப் 2021

பாலியல் தொல்லை... புகார் கொடுக்க சென்ற பெண் அதிகாரி... வழிமறித்த எஸ்பி.... பின்னணி என்ன?

பாலியல் தொல்லை... புகார் கொடுக்க சென்ற  பெண் அதிகாரி... வழிமறித்த எஸ்பி.... பின்னணி என்ன?

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் எஸ்.பி, டிஜிபியிடம் புகார் கொடுக்க சென்ற போது, தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த செங்கல்பட்டு எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

பொதுவாக டிஜிபி சாலை வழியாகச் செல்கிறார் என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.கள் மாவட்ட எல்லை துவக்கத்தில் ரிசீவ் செய்து அவரது வாகனத்தில் அமர்ந்துகொண்டு மாவட்ட எல்லை முடிவில் இறங்கிவிடுவார்கள்.

உதாரணமாக, சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் சென்னையிலிருந்து திருச்சி செல்கிறார் என்றால்... செங்கல்பட்டு மாவட்டத் துவக்கத்தில் அம்மாவட்ட எஸ்.பி.கண்ணன், சிறப்பு டிஜிபியை ரிசீவ் செய்து அவரது காரில், காஞ்சிபுரம் மாவட்டம் எல்லை ஆரம்பம் வரையில் செல்வார். எல்லை முடிவான தொழிற்பேடு சுங்கச்சாவடி வரையில் காஞ்சி எஸ்.பி.சண்முக பிரியா செல்வார். விழுப்புரம் எல்லை துவக்கத்திலிருந்து எஸ்.பி. ராதாகிருஷ்ணன் எல்லை முடிவான தொழுதூர் வரையில் செல்வார். பெரம்பலூர் எஸ்.பி நிஷா பார்த்திபன் ஐபிஎஸ்., மாவட்டத் துவக்கத்திலிருந்து மாவட்ட எல்லை முடிவு வரையில் டிஜிபி காரில் பயணித்துவிட்டு இறங்குவார். இதுபோன்று பயணிக்கும் அதிகாரிகள் உயர் அதிகாரி காரை விட்டு இறங்கி பின்னால் வரும் அவரவர் கார்களில் அலுவலகத்துக்குத் திரும்புவார்கள்.

அப்படிதான் கடந்த 21ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பியை அவர் மாவட்டத்திலிருந்து தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி பயணித்துள்ளார் சிறப்பு டிஜிபி.

இடையில் ஓரிடத்தில் காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு ஓட்டுநரை கீழே இறங்கி வெளியில் காத்திருக்க சொல்லியிருக்கிறார் சிறப்பு டிஜிபி. அந்த நேரத்தில் பெண் எஸ்.பி.யிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அவரை தள்ளிவிட்டு காரைவிட்டு இறங்கிய பெண் எஸ்.பி பின்னால் வந்த தனது காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார்.

பெண் எஸ்.பி ஏதோ பிரச்சனை செய்யப்போகிறார் என உணர்ந்த சிறப்பு டிஜிபி, அவரது லொக்கேஷனை மீன் கொத்தி பறவை போல் கண்காணித்திருக்கிறார்.

இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி காலையில் பெண் எஸ்.பி, அரசு வாகனத்தில் சென்னை நோக்கிப் போகிறார் என்ற தகவலை பெண் ஆய்வாளர் ஒருவர் ஸ்பெஷல் டிஜிபியிடம் தெரிவித்திருக்கிறார் . சுதாரித்துக் கொண்ட ராஜேஷ் தாஸ் தனக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணனிடம், தகவல் சொல்லி பெண் எஸ்.பி.காரை மறித்து, என்னிடம் பேசசொல்.... மீறினால் காரை விடாதே... மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்... என்று சொல்லியிருக்கிறார் .

எஸ்.பி.கண்ணன் தனது அதிரடிப்படையுடன் தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்று, பெண் எஸ்.பி வந்த காரை வழி மறித்து ராஜேஷ் தாஸிடம் பேசுங்கள் என்று அவரது நம்பரை போட்டு கைப்பேசியைக் கொடுத்தபோது, பெண் எஸ்.பி செல்போனை வாங்க மறுத்துவிட்டார்.

மீண்டும் காரை நகர்த்திய போது அதிரடிப்படை போலீஸார் மூலம் கார் சாவியை பிடுங்கியிருக்கிறார். இதனால் கோபமடைந்த பெண் எஸ்.பி.காரைவிட்டு இறங்கி, 'என் வேலை போனாலும் பரவாயில்லை... உங்களையும் சேர்த்து புகார் கொடுப்பேன்' என்று சத்தம் போட்டு பேசியபோது, பயந்துபோன எஸ்.பி கண்ணன், பெண் ஐபிஎஸ் காருக்கு வழிவிட்டுள்ளார்.

காரில் போகும்போது தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவருக்கு போன்செய்த பெண் எஸ்.பி, 'செங்கல்பட்டு கண்ணன் அவரது அதிரடிப்படை போலீஸை வைத்து, என்னை ஒரு ஐபிஎஸ் என்றுகூட பார்க்காமல் தீவிரவாதி போல் வழிமறித்து கார் சாவியை பிடுங்கிவிட்டார், நான் கடுமையாகப் பேசிவிட்டு சென்னை சென்று கொண்டிருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார். எதிர்முனையில் பேசியவர், 'வழியில் ஏதாவது பிரச்சனை வரப்போகிறது.. கவனம். யாருக்காவது ஒருவருக்கு மெசெஜ் அனுப்பிவிடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். டிஜிபி திரிபாதியைச் சந்தித்து, 'சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். புகார் கொடுக்கவந்த என்னைச் செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் வழிமறித்து சாவியைப் பிடுங்கிக் கொண்டார்' என நடந்ததைக் கூறி புகார் மனு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பெண் எஸ்.பி மாவட்டத்தை விட்டு வெளியில் சென்றது குறித்த தகவலை டிஐஜி மற்றும் ஐஜியிடம் தெரிவிக்காததால் தனிப்பிரிவு ஆய்வாளர் வனிதாவை காத்திருப்பு பட்டியலில் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், 'இவர் ஸ்பெஷல் டிஜிபிக்கு துணையாக இருந்ததால் தான் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்' என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

அதுபோன்று ராஜேஷ் தாஸின் பாலியல் தொந்தரவைவிட, அவருக்கு கூலிப்படை போல செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை வழிமறித்து மிரட்டிய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன், அவருடன் இருந்த எஸ்.ஐ. மணிகண்டன் , தனிபிரிவு தலைமை காவலர் தமிழ்வாணன் ஆகியோரின் செயல்பாடுகளுக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ராஜேஷ் தாஸுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு ஆதரவாக நிற்காமல், அவரையே மிரட்டி பணிய வைக்க முயன்ற டிஐஜி ஜெய்ராம், செங்கல்பட்டு எஸ்.பி. டி.கண்ணன் எஸ்.ஐ மணிகண்டன் தனிபிரிவு தலைமை காவலர் தமிழ்வாணன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாதி பாதி அதிகாரம்

டிஜிபி திரிபாதி மாநிலத்தை (ஒடிஷா) சேர்ந்தவர்தான் ராஜேஷ் தாஸ். அதனால்தான் அவர் பாதி இவர் பாதி என அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு வந்ததாக சொல்கிறார்கள் டிஜிபி வளாகத்தில் உள்ளவர்கள்.

2001- 2002இல் காஞ்சிபுரம் சரகம், திருவள்ளூர் எஸ்.பியாக ராஜேஷ் தாஸ் இருந்தபோது ஒரு பெண் டிஎஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தற்போதும் காத்திருப்பு பட்டியலிலிருக்கும் ராஜேஷ் தாஸால் பாதிக்கப்பட்ட பெண் டிஎஸ்பி மற்றும் எஸ்.பி,கள் பலர் வெளியில் சொல்லமுடியாமல் வேலை பாதித்துவிடும் என்ற பயத்திலிருந்து வருவதாக ஐபிஎஸ் ஆபிஸர்கள் சொல்கிறார்கள் . விசாக கமிட்டியில் உறுப்பினராக இருக்கும் சாமூண்டிஸ்வரி, டிஐஜியாக உள்ள காஞ்சிபுரம் சரகத்தில்தான் இத்தனை பிரச்சனைகளும் அரங்கேறியிருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த அதே துறையில் துணை இயக்குநராக இருந்த முருகன் மீது அப்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் முருகன் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த பெண் எஸ்.பி இடமாற்றம் செய்யப்பட்டார்.

பெண் எஸ்.பி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், அதன் பிறகு முருகனை சிசிஐடபுள்யூக்கு மாற்றினார்கள். உயர் நீதிமன்றம், முருகன் மீதுள்ள பாலியல் புகாரை விசாரிக்க தெலங்கானா டிஜிபிக்கு பரிந்துரை செய்தது. ஆனால் முருகன் சட்டத்தின் நுணுக்கங்களை தெரிந்துகொண்டு, உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு விசாரணைக்குத் தடை வாங்கியுள்ளார்

அதன் பிறகு தமிழக அரசும் கண்டுகொள்ளாமல், முருகனை ஊக்குவிக்கும் விதமாக மேற்கு மண்டல ஐஜியாக நியமித்தது. பாதிக்கப்பட்டு புகார் கொடுக்கும் பெண் அதிகாரிகளை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுப்பது, அதே சமயத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்களுக்குச் சிறப்பான பதவி வழங்கி வருவதால், இதுபோன்ற புகார்களை தெரிவிக்க பெண் அதிகாரிகள் முன் வருவதில்லை என காவல்துறை வட்டத்தில் புலம்புகிறார்கள்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

வெள்ளி 26 பிப் 2021