மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

சிறப்புக் கட்டுரை: எல்லை பிரச்சினை முடிவுக்கு வர என்ன காரணம்?

சிறப்புக் கட்டுரை: எல்லை பிரச்சினை முடிவுக்கு வர என்ன காரணம்?

பாஸ்கர் செல்வராஜ்

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்திய - சீன எல்லை பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு வந்து கொண்டிருந்தது. எதிர்பாராவிதமாக ஜூன் மாதம் மீண்டும் மோதல் ஏற்பட்டு 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேலும் தீவிரமடைந்தது. அப்போது லடாக் பகுதியில் சீன ராணுவம் உள்ளே நுழைந்து ஆக்கிரமித்து இந்தியாவின் மீது அழுத்தத்தைக் கொடுத்தது. பதிலடியாக இந்திய ராணுவம் சீன பகுதியில் நுழைந்து ஆக்கிரமித்து சீனாவைப் பின்வாங்க அழுத்தம் கொடுத்தது.

இப்படி மாறிமாறி ஆக்கிரமித்து பத்து மாதங்களாக தீர்க்கப்படாமல் நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்த பிரச்சினை தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. மோதலுக்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் இருந்த நிலைக்கு இரு நாட்டு ராணுவமும் திரும்ப ஒப்புக்கொள்ளப்பட்டு படிப்படியாக இரு நாட்டு ராணுவமும் ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு வெளியேறி வருகின்றன. முதலில் இந்த பிரச்சினை ஏன் எழுந்தது என்றே புரியாமல் இருந்த நிலையில் தற்போது இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த மந்திர ஆற்றல் என்னவென்பதும் புரியாத புதிராக இருக்கிறது.

இப்போது மட்டும் வெடித்தது ஏன்?

ஏனெனில் சமீபத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முன்னாள் படைத்தளபதி, தற்போது பிஜேபி அரசின் அமைச்சர் வி.கே.சிங், சீன ராணுவத்தைக் காட்டிலும் இந்திய ராணுவம் அதிகமாக எல்லையை மீறி இருக்கிறது என்று கூறி இருந்தார். இப்படி பலமுறை இரு நாட்டு ராணுவமும் எல்லை மீறிய போதெல்லாம் வெடிக்காத எல்லை பிரச்சினை கடந்த ஆண்டு மட்டும் ஏன் இவ்வளவு பெரிய பிரச்சினையையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தியது என்ற கேள்வியை இது எழுப்புகிறது. ஒரு நாட்டின் ராணுவம் மற்றொரு நாட்டை ஆக்கிரமிப்பதும் அல்லது அதன்மீது போர்தொடுப்பதும் பொழுதுபோக்குக்காக இருக்க முடியாது. அவை எப்போதும் பொருளாதார நோக்கம் கொண்டவையாகவே இருந்திருக்கின்றன.

போர்களின் நோக்கமும் வகைகளும்

இந்தப் போர்களும் நோக்கங்களும் இரு வகையானது.

1. ஒரு நாட்டின் செல்வத்தை, இயற்கை வளத்தை, சந்தையைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட நேரடி போர்கள்.

2. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து வழிக்குக் கொண்டுவரும் நோக்கிலும் அல்லது சக பொருளாதார போட்டியாளனை வலுவடைய விடாமல் பலகீனமாக்கும் நோக்கிலும் நடத்தப்படும் மறைமுக போர்கள்.

இராக், லிபியா, சிரிய நாடுகளின் மீதான போர்கள் முதல் வகைப்பட்டவை. இரண்டாவது வகையில் திட்டமிட்டுத் தூண்டப்படும் உள்நாட்டுப் போர்கள், சதிப்புரட்சிகள், கிளர்ச்சிகள், பொருளாதார போர்கள், பணப்போர்கள், நிதிச்சந்தை மீதான தாக்குதல்கள், வண்ண புரட்சிகள், தேர்தல் குறுக்கீடுகள், திரிபு தகவல் போர்கள், இணையதள தாக்குதல்கள் எனப் பல போர்முறைகள் கையாளப்படுகின்றன.

இந்த பிரச்சினையின் நோக்கம் என்ன?

இந்திய - சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முதல் வகையைச் சார்ந்தது அல்ல. அதேபோல அமெரிக்காவுடன் போட்டியிடும் சீனாவுக்கு இந்தியா போட்டியாளனும் இல்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் எல்லை பிரச்சினையைப் புதிதாக தூண்டி, இந்திய நாட்டின் அமைதியைக் குலைத்து இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய வைக்க வேண்டிய அவசியமும் சீனாவுக்கு இல்லை. அது சீனாவுக்கு பாதகமானதும்கூட. ஏனெனில் சீன பொருட்களுக்கு இந்தியா முக்கியமான சந்தை. இந்தியாவின் வீழ்ச்சி அதன் பொருட்களுக்கான சந்தையைக் குறைப்பது மட்டுமல்ல; இந்த பிரச்சினை இந்திய சந்தையையே சீனா இழக்கும் நிலையை ஏற்படுத்தும். எனில் இவ்வளவு நாளாக இதுபோன்ற எல்லை தாண்டுதலைப் பெரிதாக்காமல் சீனாவோ அல்லது இந்தியாவோ இப்போது மட்டும் ஏன் பெரிதாக்கியது?

முந்தைய சூழல்

2018 முதல் சீன - அமெரிக்கப் பொருளாதாரப் போட்டியின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப் போர் நடந்து வந்தது அனைவரும் அறிந்தது. இந்தியா வர்த்தகம் மேற்கொள்ளும் முக்கிய முதல் பத்து நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. அமெரிக்காவுக்கு இந்தியா ஒன்பதாவது முக்கிய வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனாவுக்குப் பன்னிரண்டாவது முக்கிய வர்த்தகக் கூட்டாளியாகவும் இருக்கிறது. இதுவரையிலான இந்தியாவின் சுதந்திரமான சார்புத்தன்மையற்ற வெளியுறவுக்கொள்கை இரு நாடுகளுடனான வர்த்தக வளர்ச்சிக்கு வித்திட்டது. அமெரிக்க - சீனப் போட்டி தீவிரமடைய தொடங்கியதில் இந்த நடுநிலை சற்று ஆட்டம் கண்டு காலப்போக்கில் அமெரிக்க சார்பை நோக்கி நகர்ந்து சென்று டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு முழுமையான அமெரிக்கச் சார்பாக மாற்றம் கண்டது.

அசாதாரணம் ஆக்கிய காரணிகள்

இந்த வர்த்தகப் போட்டி நடந்து கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான ராணுவக் கூட்டணியில் (QUAD) இந்தியா இணைந்தது . இது சீனாவுக்கு எதிரான ராணுவக் கூட்டணி என்று சொல்ல வேண்டியதில்லை. இதன் பிறகு டிரம்ப்பை ஆதரித்து அமெரிக்காவில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்ச்சி இந்தியாவில் நடந்த நமஸ்தே டிரம்ப் போன்ற அரசியல் நிகழ்ச்சிகள் அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கத்தை, பிணைப்பை எடுத்துக் காட்டின. வர்த்தகப் போரின்போது முக்கிய வர்த்தக நகரான ஹாங்காங்கில் எழுந்த போராட்டம், சர்ச்சைக்குரிய திபெத் பகுதிக்கு அருகில் இருக்கும் இந்தியாவின் அமெரிக்காவுடனான ராணுவ அரசியல் நெருக்கம் ஆகியவை இந்தியாவின் மீதான பார்வையை, நம்பகத்தன்மையை மாற்றி இதுவரையிலும் சாதாரண ஒன்றாக இருந்த எல்லை மீறலை அசாதாரண நிகழ்வாக மாற்றி இருக்கலாம்.

வர்த்தகப் பார்வை

காரணம் எதுவாக இருந்தாலும்...

1. இரு நாடுகளுமே முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும்போது இந்தியா ஏன் சீனாவைத் தவிர்த்து அமெரிக்காவைத் தேர்வு செய்து அதற்கு எதிரான ராணுவ கூட்டணியில் இணைந்தது?

2. அமெரிக்காவுக்கு அடுத்த முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனாவுடனான எல்லை பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை தீர்வை நோக்கி நகராமல் பத்து மாதங்கள் இழுபறியில் இருந்ததற்கான காரணம் என்ன?

இரு கேள்விகள் இங்கே எழுகின்றன. வர்த்தக நோக்கில் இதற்குப் பதில் சொல்ல வேண்டுமானால் இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி (87.4 பில்லியன்-2019) செய்யும் அளவைவிட இறக்குமதி (58.6) செய்யும் அளவு குறைவு. ஆனால், சீனாவுக்கு ஏற்றுமதி (17.97) ஆகும் அளவை விட இறக்குமதி (74.92) அதிகம். அதாவது இந்த வர்த்தகத்தில் அமெரிக்காவால் இந்தியாவும் இந்தியாவால் சீனாவும் பலனடைகின்றன என்று பொருள்படும்.

பலனடைவது யார்?

வர்த்தக எண்களை அடிப்படையாகக் கொண்டு எங்கு பலன் அதிகமோ அங்கு செல்வதுதானே சரி என்ற தர்க்கத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவின் நடவடிக்கை சரியாகவே தோன்றும். ஆனால், இந்த வர்த்தக நடவடிக்கையில் யார் பலனடைகிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் நமக்கு வேறு சித்திரம் கிடைக்கிறது.

87. 4 பில்லியன் டாலர் அமெரிக்க ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சில தகவல்தொடர்பு சேவைத்துறை ($29.7B) சார்ந்தவை. வைர ஆபரணக் கற்களை ($11B) அடுத்து அதிக அளவில் ஏற்றுமதியாவது மருந்துகள் ($7.6B), இயந்திரங்கள் ($3.7B), கனிம எரிபொருட்கள் ($3.6B), கரிம வேதிப்பொருட்கள் ($2.8B), அரிசி உள்ளிட்ட வேளாண் பொருட்கள் ($2.6B).

சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் 74.92 பில்லியன் டாலர் (2019) இறக்குமதியில் முக்கிய இடம் பிடிப்பது மின்னணுவியல் இயந்திரங்கள் ($20.17B). மற்ற முக்கிய இறக்குமதிகள் கரிம வேதிப்பொருட்கள் ($8.39B), உரங்கள் ($1.67B). 17.97 பில்லியன் டாலர் இந்திய ஏற்றுமதியில் முக்கிய இடம் பிடிப்பவை இரும்புத்தாது, பருத்தி, வேளாண் பொருட்கள், கரிம வேதிப்பொருட்கள், தீட்டப்படாத வைரங்கள்.

இரு நாடுகளுடனான இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதியில் தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியையும் வைரத்தை எடுத்துவிட்டால் இந்த வர்த்தகத்தில் பொதுவாக இருக்கும் பொருட்களுக்கு இடையிலான தொடர்பைக் காண முடியும். அதாவது இந்திய ஏற்றுமதி சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் இயந்திரங்கள், மூலப்பொருட்கள் சார்ந்ததாக இருக்கிறது.

பாதிக்கப்படுவது யார்?

இந்த இயந்திரங்களும் மூலப்பொருட்களும் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வழங்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தேவை சார்ந்தது. இந்திய - சீன எல்லை பிரச்சினையில் சீனாவின் மீது அழுத்தம் கொடுக்க சீனப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள், சீன முதலீடுகளுக்குத் தடை, சீன இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் என இந்தியா பொருளாதார ரீதியிலான தாக்குதலைத் தொடுத்தது. இந்தப் பொருளாதார தாக்குதல்கள் என்பது இருமுனை வாள். இது எதிரியை மட்டும் தாக்குவதில்லை. இதைக் கையில் எடுப்பவருக்கும் சேதத்தை விளைவிக்கக் கூடியது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் சேதத்தை அனுபவித்தவர்கள் இந்திய சிறு, குறு உற்பத்தியாளர்களும், வேளாண் பொருள் உற்பத்தியாளர்களுமே.

சீனாவின் பொருளாதாரப் போர் உத்திகள்

சீன - அமெரிக்க வர்த்தகப் போரில் டிரம்ப்பின் தாக்குதல் விலைமதிப்பு கொண்ட தகவல்தொடர்பு சாதனங்களாகவும் சீனாவின் பதிலடி விலை குறைந்த அமெரிக்காவின் வேளாண் பொருட்களாகவும் இருந்தது. அதேபோல கொரோனா தொற்றின்போது சீனாவின் மீதான அமெரிக்காவின் திரிபு தகவல் போரில் QUAD உறுப்பினர்களான ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் பங்கெடுத்தன. இதற்கான பதிலடியாக சீனா அதிக வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் அரசியல் ரீதியாக விளைவுகளை ஏற்படுத்தும் ஆஸ்திரேலியாவின் கனிமப் பொருட்கள், மதுபான வகைகள், வேளாண் பொருட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் இறக்குமதிகளின் மீது தடை விதித்தது. இப்படி மூர்க்கமாகக் கையை முறுக்கி பொருளாதாரப் பதிலடி கொடுப்பதன் மூலம் தமது பலத்தைக் காட்டி இந்தக் கூட்டமைப்பின் மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், இந்தியாவோ தானே அதிக வேலைவாய்ப்புகளைப் பறிக்கும் என்று தெரிந்தும் பொருளாதாரப் பதிலடி நடவடிக்கையை சீனாவுக்கு எதிராக முதலில் பயன்படுத்தியது. ஏனெனில் இதன் மூலம் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட போவதில்லை. அதுமட்டுமல்ல, பணமதிப்பிழப்பு தொடங்கி இந்த துறைகளில் இருப்பவர்களை வெளியேற்றி அதில் பெருநிறுவனங்களை ஈடுபட வைப்பதே அல்லது அவர்கள் மொழியில் முறைசார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதே இந்திய அரசின் நோக்கம். ஆக, இந்தத் துறைகளை பாதிக்கும் வகையில் சீன அரசு பொருளாதாரப் பதிலடி கொடுத்தால் அது இந்திய அரசு சீனாவைக் கைகாட்டித் தப்பிப்பதற்கும் அரசியல் ரீதியாக அனுகூலம் அடைவதற்குமே பயன்படும்.

அதனால் சீன அரசு இந்தியாவுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமது இறக்குமதியைத் தொடர்ந்தது. மேலும், அதிகமாக அரிசியை இறக்குமதி செய்தது. இதன் நோக்கம் இந்தத் துறையை அழிய விடாமல் நிலைக்க செய்து ஆளும் வர்க்கத்துக்கு நெருக்கடியையும் இந்திய அரசுக்குத் தலைவலியையும் ஏற்படுத்துவது. போர்த் தந்திரங்களில் முக்கிய அம்சம் எதிரியின் நோக்கத்தை இலக்கை அடைய விடாமல் தடுப்பதுதான். சீனாவின் முதலீடுகளைத் தடுத்த இந்திய அரசு, அமெரிக்க முதலீடுகளை இந்த கொரோனா காலத்தில் தாராளமாக அனுமதித்தது. ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து வரும் 58.6 பில்லியன் இறக்குமதியில் 41.5 விழுக்காடு ($24.3B) தகவல்தொழில்நுட்ப சேவைத்துறை சார்ந்ததாக இருக்கும் நிலையில் இப்போது வந்துள்ள முதலீடுகளின் பெரும்பகுதி பெரும் எண்ணிக்கையில் இந்திய தொழிலாளர்கள் ஈடுபடும் சில்லறை வர்த்தகத்துக்கானது.

அரசின் பக்கச்சார்பு

இவை குறைவான தொழிலாளர்களைக் கொண்டு அதிக லாபம் ஈட்டும் தொழிலாளர்களின் தேவையைக் குறைத்து இந்தத் துறையை இயந்திரமயமாக்கும் தகவல்தொடர்பு சேவைத்துறை சார்ந்தது என்று சொல்ல வேண்டியதில்லை. ஒருபுறம் பெருநிறுவனங்களின் தேவைக்குத் தொழில்நுட்ப இறக்குமதிகளை முதலீடுகளை அனுமதித்த ஒன்றிய அரசு மறுபுறம் சிறு, குறு நிறுவனங்களுக்கான இறக்குமதியைத் தடை செய்து அந்நிய நாடுகளை சார்ந்திருக்காமல் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று இவர்களுக்கு தேசபக்தி பாடம் எடுத்தது. அதற்கு ஆத்ம நிர்பார் பாரத் எனப் பெயரும் சூட்டியது. ஒரே நாளில் எந்த மந்திரத்தைப் போட்டு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அது படிப்படியாக பல ஆண்டு முயற்சியில் கடும் உழைப்பில் அரசின் ஊக்குவிப்பில் சமூக வளர்ச்சியின் ஊடாக நிகழ்வதல்லவா? சுருக்கமாக அதிக லாபம் ஈட்டும் நாட்டின் ஜிடிபி எண்ணை உயர்த்தும் தகவல் தொழில்நுட்பத் துறையை காத்து குறைந்த லாபம் ஈட்டினாலும் அதிக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் உற்பத்தித் துறைகளை அரசு ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறது.

பலியான தொழிலாளர்கள்

பொதுவாக ராணுவக் கூட்டணி என்பது பொருளாதார ரீதியில் இரு நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் அதன் பலனை பகிர்ந்துகொள்ளும் நாடுகள் அதற்கு சாதகமாக எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து பாதுகாத்துக்கொள்ள ஏற்படுத்திக் கொள்வது. இந்திய - சீன எல்லை பிரச்சினையை அடுத்து இந்தியா அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். இது அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவின் ஜியோவும் இந்திய சில்லறை வணிகத்தை பங்கு பிரித்துக்கொண்டு பலனடையவும் அவர்களின் நலன் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கும். ஆனால், இதுவரையிலும் இதில் ஈடுபட்டு வரும் 1.2-1.4 கோடி வியாபாரிகளுக்கு என்ன மாற்று? இவர்களின் நலனுக்கு பலிகடா ஆக்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்களுக்கும் அதில் வேலை செய்யும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் என்ன வழி என்று கேட்டால் அப்போதைய டிரம்ப் நிர்வாகம் சீனாவில் உள்ள நிறுவனங்கள் எல்லாம் அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வருவார்கள். அது இந்திய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று வாக்குறுதி அளித்தது.

பதவி மாற்றமும் கொள்கை மாற்றமும்

அந்த வாக்குறுதி வரத்தை நம்பி இந்திய அரசும் புதிய கல்விக்கொள்கை, புதிய தொழிலாளர் சட்டம் ஆகியவற்றை இயற்றி தலைவாழை இலையில் எண்ணெய் தடவி நம்மை பெருவிருந்துக்கு காத்திருக்க சொன்னது. இறுதியில் டிரம்ப் தேர்தலில் தோற்று பைடன் கடந்த ஜனவரியில் பதவி ஏற்றார். பதவி ஏற்ற ஒரு மாதத்தில் தனது வெளியுறவு கொள்கையை தெளிவுபடுத்தி வருகிறார். சீனா எதிரி அல்ல; போட்டி நாடு அமெரிக்காவுக்கு ஆதாயம் தரும் என்றால் அவர்களுடன் இணைந்து செல்வதில் எந்த தயக்கமும் இல்லை என்று அறிவித்திருக்கிறார். இரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்துக்குத் திரும்ப போவதாக அறிவித்திருக்கிறார். இந்தியாவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தோ - பசிபிக் பகுதியின் முக்கியத்துவம் வாய்ந்த QUAD ஒத்துழைப்பு தொடரும் என்று அவரின் நிர்வாகம் அறிவித்து கூட்டம் கூட்டி பேசி இருக்கிறது. இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் பொருளாதார ஒத்துழைப்பு குறித்துப் பேசியதாக செய்தி வெளியானது.

முடிவுக்கு வந்த பிரச்சினை

முற்றி இருந்த அமெரிக்க - சீன மோதல் தணிந்து வருகிறது. சீனாவில் இருந்து நிறுவனங்கள் இந்தியாவுக்கு சாரை சாரையாக அணிவகுக்க போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்திய - சீன எல்லையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை தீர்ந்து வருகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட 45 சீன முதலீடுகளில் தேச பாதுகாப்புக்கு முக்கியமான தரவுகள் (Data) தொடர்பானவை தவிர்த்து (தேச பாதுகாப்பா? ஜியோ பாதுகாப்பா?) மற்ற முதலீடுகளுக்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது. முன்பு டிரம்ப் நிர்வாகத்தின் இரான் எதிர்ப்பு கொள்கையின் காரணமாகக் கைவிட்ட இந்திய - இரான் ஒத்துழைப்புகளை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்திய அரசு அறிவிக்கிறது.

யார் பொறுப்பு?

சுருக்கமாக டிரம்ப் நிர்வாகத்துக்கு முந்தைய நிலைக்கு அரசின் நடவடிக்கைகள் திரும்புகின்றன. ஆனால், அதற்கு முன்பு இருந்த இந்தியா மாறி விவசாயிகளும், தொழிலாளர்களும் தெருவில் நிற்கிறார்கள். அரசின் ஒரு கொள்கை முடிவு நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் தலைவிதியை மாற்றி அமைத்திருக்கிறது.

இந்த இடைப்பட்ட நான்கு வருடக் காலத்தில் இந்தியா இழந்த உயிரிழப்புகளுக்கும், வேலை இழப்புகளுக்கும், மக்கள் அடைந்த அடைய போகும் இன்னல்களுக்கும், இந்தியா இழந்த நம்பகத்தன்மைக்கும் யார் பொறுப்பு? இன்னொரு நாட்டின் அரசியல் மாற்றங்களுக்கும் கொள்கை மாற்றங்களுக்கும் ஏற்ப இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் மாற்றம் காண்கிறது என்றால் இதற்குப் பெயர் என்ன?

ஆதார சுட்டிகள்

1. India-China Trade And Economic Relations

2. India’s trade with China falls in 2020, deficit at five-year low

3. U.S.-India Trade Facts

4. India’s imports from China dropped ....

5. India to clear 45 investments from China

கட்டுரையாளர் குறிப்பு:

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 25 பிப் 2021