மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

தொடர் பாலியல் தொல்லை: ஸ்பெஷல் டிஜிபி மீது புகார் கொடுத்த பெண் எஸ்.பி!

தொடர் பாலியல் தொல்லை: ஸ்பெஷல் டிஜிபி மீது புகார் கொடுத்த பெண் எஸ்.பி!

தமிழக காவல்துறையில் உட்சபட்ச பதவியிலிருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் , மாவட்ட பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்து காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஸ்பெஷல் டிஜிபியாக இருப்பவர் ராஜேஷ் தாஸ். இவர் முதல்வர் சுற்றுப்பயணத்தின் போதெல்லாம் அங்கு பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவதற்காக முன் கூட்டியே சென்றுவிடுவார் . கடந்த 21ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது விசிட்டுக்கு சென்ற ராஜேஷ் தாஸ் மீண்டும் சென்னை திரும்புகையில் குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்கு பெண் எஸ்.பி.யை வரவழைத்து தனது காரில் அழைத்துக்கொண்டு பெண் எஸ்.பி.காரை பின்னால் வரசொல்லியிருக்கிறார். காரில் செல்லும்போது பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன் அன்று இரவு சென்னை செல்லும் வழியில் செங்கல்பட்டு் அருகில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்.

’பெண் எஸ்.பி.யைத் தொடர்ந்து அவ்வழியே போகும்போதும் வரும்போதும் காரில் ஏற்றிக்கொண்டு அருவருப்பான செயல்களில் ஈடுபட்டு, அந்த பெண் எஸ்.பி ஒருநாளும் பணியாததால் பாதி வழியில் ஸ்பெஷல் டிஜிபி, இறக்கிவிட்டு சென்றுவிடுவார்’ என காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஆத்திரமடைந்த பெண் அதிகாரி, தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களைக் குறித்தும், ஸ்பெஷல் டிஜிபி மீது நடவடிக்கை, எடுக்கும்படியும் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் கடந்த 22ஆம் தேதி புகார் கொடுத்துள்ளார்.

புகாருக்கு உள்ளான ஸ்பெஷல் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் இந்த ஸ்பெஷல் டிஜிபி, காவல்துறையில் எஸ்.பி போன்ற பதவியில் இருக்கும் பெண் அதிகாரிகளிடம், அவர்களைப் பற்றி குறைகள் சொல்வது, மறைமுகமாக மிரட்டுவதுமாக இருந்துள்ளார். தனக்கு பணியாத பெண் அதிகாரிகளைப் பார்த்து ’என்னமா உன்னோட சர்வீஸ் இத்துடன் முடித்துக்கொள்ள போகிறியா’ என்று ஆங்கிலத்தில் கேட்பார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் உயர் அதிகாரியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளாகியிருக்கும் தமிழகக் காவல்துறை சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை முதல்வர் காப்பாற்றுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தங்களுக்கு நேரும் அநீதியை - சந்திக்கும் பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லவே பெண்கள் பயந்து தயங்கும் நேரத்தில் - இந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனது சீனியர் போலீஸ் அதிகாரி மீது புகார் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த பெண் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியின் துணிச்சலுக்கு நான் தலை வணங்குகிறேன்.

முதலமைச்சர் புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் நிகழ்ந்த இந்த பாலியல் தொல்லை - தமிழகக் காவல்துறைக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான – கண்ணியமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியாற்றும் தமிழகக் காவல்துறையில் இதுபோன்ற விரல் விட்டு எண்ணும் சில புல்லுருவி போலீஸ் அதிகாரிகளால் “யூனிபார்மில் உள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை” என்று உருவாகியுள்ள நிலையைப் பார்த்து - அத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால், பொள்ளாச்சி பாலியல் குற்றத்திலேயே அ.தி.மு.க.வினரைக் காப்பாற்றிய முதலமைச்சர், “பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி” என நடத்தி வரும் பிரச்சாரத்தைப் பொய்யாக்கி விட்டது.

தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது சட்ட விரோத உத்தரவுகளை நிறைவேற்றவும் இதுபோன்ற பாலியல் தொந்தரவில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளை முதலமைச்சர் பழனிசாமி காப்பாற்றுகிறார். அதன் விளைவு - இன்றைக்குப் பேச வேண்டும் எனத் தனது காருக்குள் அழைத்து ஒரு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் தைரியத்தை காவல்துறையில் உள்ள சிறப்பு டி.ஜி.பி.யே பெற்றிருப்பது கேவலமானது. அதுவும், முதலமைச்சரின் பிரச்சார பாதுகாப்பிற்குச் செல்லும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியே இப்படியொரு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது - அசிங்கத்தின் உச்சபட்சம் - நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடு!

தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு முதலமைச்சர் உருவாக்கியுள்ள இந்த இழி நிலையைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

எனவே, பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்துள்ள புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து - சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை சஸ்பெண்ட் செய்து - கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் எஸ்.பி. கூறிய பாலியல் புகாரை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது. கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட குழுவில் ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு, தன்னார்வலர் லோரட்டா ஜோனாவும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியாக இருந்த முருகன் தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மீதான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று தற்போது தெலங்கானாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் புகார் அளித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில் இன்னும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்குள்ளாக மற்றொரு உயர் அதிகாரி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவை காவல்துறையிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 24 பிப் 2021