மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

குடுமியுடன் திருவள்ளுவர் : மன்னிப்பு கேட்ட பதிப்பகம்!

குடுமியுடன் திருவள்ளுவர் : மன்னிப்பு கேட்ட பதிப்பகம்!

தமிழர்களின் பெருமையை உலகிற்கு உணர்த்திய முக்கிய நூல்களில் ஒன்று திருக்குறள். உலக அளவில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிலை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. 2019ஆம் ஆண்டு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்று சித்தரித்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

2020 ஆம் ஆண்டு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதற்கும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த பதிவை அவர் மாற்றிவிட்டார்.

இந்த சூழலில் இந்த ஆண்டு சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு , மதூர் ஹிந்தி பத்மா லா என்ற பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த திருவள்ளுவரின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வெண்ணிற ஆடையில் தலையில் கொண்டை, தாடியுடன் ஒரு கையில் எழுத்தாணி மற்றொரு கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கும் படமே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரின் படமாகும். ஓவியர் வேணுகோபால் சர்மாவால் இந்தப்படம் வரையப்பட்டது. ஆனால் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில், வள்ளுவர் வாசுகி கதையில், திருவள்ளுவர் காவி உடை அணிந்து தலையில் முடி இல்லாமல் ஒரு சிறிய குடுமியுடன் நெற்றி, கையில் திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பது போல இடம்பெற்றிருக்கிறது. இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வந்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், “சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகத்தில், அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால், தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது” என எச்சரிக்கை தெரிவித்திருந்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவக் கோட்பாட்டை உலகிற்கு அளித்த திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது. ஆனால், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் மனு தருமத்தை நிலைநிறுத்தி, மனித நீதியைக் குழிதோண்டிப் புதைத்து வரும் சனாதனக் கூட்டம், திருவள்ளுவரை தம்வயப்படுத்த முனைந்து நிற்கின்றது.

முப்பால் வழங்கிய செந்நாப் போதார் திருவள்ளுவரை, ‘சீவலப்பர்’ என்று பெயர் சூட்டிய இக்கூட்டம், திருக்குறளையே ‘ஆரியச் சித்தாந்தச்’ சிமிழுக்குள் அடக்கிவிட ஆயிரம் ஆண்டுகளாக முயற்சி செய்தது.

சமஸ்கிருத தர்ம சாத்திரம்தான், முப்பாலில் ஒன்றாகிய அறத்துப்பால் என்றும், அர்த்தசாஸ்திரம்தான் பொருட்பால் என்றும், காம சூத்திரம்தான் இன்பத்துப்பால் என்றும் கதை கட்டிப் பார்த்தது. திருக்குறள் உரை ஆசிரியர்களுள் ஒருவரான பரிமேலழகர் தம் ஆரியக் கருத்துகளைத் திணித்தார்.

ஆனால், சனாதனக் கூட்டம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், காலப்போக்கில் முனை மழுங்கிப் போய்விட்டன.

புகழ்பெற்ற ஓவியர் கே.ஆர். வேணுகோபால் சர்மா வரைந்து வெளியிட்ட திருவள்ளுவரின் உருவப் படத்திற்குத்தான், தமிழக அரசு ஏற்பு அளித்து இருக்கின்றது. அந்தப் படம் வரைந்ததற்கான விளக்கம் அளித்து, வேணுகோபால் சர்மா வழங்கிய கருத்தை, சென்னை பல்கலைக் கழகம் ஒரு சிறிய வெளியீடாகக் கொண்டு வந்தது.

“திருவள்ளுவர் கருத்து உலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரைச் சுற்றி, அறிவு ஒளி மட்டும் இருக்குமாறு உருவம் வரையப்பட்டது. தூய்மை நிறைந்த உள்ளம், தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு ஆகியவற்றைக் கொண்டு இருப்பதால் திருவள்ளுவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தப்பட்டது. உச்சிக்குடுமியும், வெட்டப்பட்ட சிகையும் பல இனக்குழுக்களுக்கு அடையாளம் ஆகி விட்டதால், திருமுடியும் நீவப்படாத தாடியும் இருப்பது போல வரையப்பட்டது” என்று, ஓவியர் வேணுகோபால் சர்மா அவர்கள் விளக்கம் அளித்து இருக்கின்றார்.

இன்று அரசியல் அதிகாரத்தைக் கைக்கொண்டு இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் தமிழ்நாட்டில் கால் ஊன்ற திருவள்ளுவரை ஒரு கருவி ஆக்கத் துடிக்கின்றன.

இந்துத்துவ சனாதனக் கூட்டத்தின் கைப்பாவை ஆகிப்போன அ.தி.மு.க. அரசு, கடந்த 2020, டிசம்பரில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வித் தொலைக்காட்சியில், திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, அவருக்குக் காவி வண்ணம் பூசும் திருப்பணியைச் செய்தது. பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நஞ்சை விதைக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்குத் தமிழகமே கொந்தளித்துக் கண்டனம் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சி.பி.எஸ்.இ. 8 ஆம் வகுப்பு பாட நூலில் திருவள்ளுவரை ‘உச்சிக் குடுமி’யுடன் சித்தரித்து படம் வெளியிட்டு, இழிவுபடுத்தி உள்ளனர். இச்செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது.

திருவள்ளுவர் படம் வரைந்து, நாகேஸ்வரபுரத்தில் ஒரு இல்லத்தில் வேணுகோபால் சர்மா வைத்து இருந்தபோது, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டுப் பாராட்டினார்கள். அந்த உருவப்படம், 1964 மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் பக்தவசலம் முன்னிலையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் உசைன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் ஏற்பு அளிக்கப்பட்ட திருவள்ளுவரின் உருவப்படம், தமிழக அரசு அலுவலகங்களிலும், அரசுப் பேருந்துகளிலும் இடம் பெறச் செய்யப்பட்டது என்பதுதான் வரலாறு. திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சிந்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும்.

மத்திய அரசு உடனடியாக சி.பி.எஸ்.இ. பாட நூலில் வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்தை அகற்றி, தமிழக அரசு ஏற்பு அளித்த திருவள்ளுவரின் திருஉருவப் படத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இவ்வாறு தமிழகத்திலிருந்து அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் இப்படத்துக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்த புத்தகத்தை, 175ஆண்டுகள் பழமையான macmillan publishers எனும் பதிப்பகம் அச்சடித்திருக்கிறது. சிபிஎஸ்இ பாட புத்தகங்களை அச்சிட்டு வரும் இந்த பதிப்பகத்துக்கு, திருவள்ளுவர் படத்தை வரைந்த வேணுகோபால் சர்மாவின் மகன், ஸ்ரீராம் சர்மா, ‘வள்ளுவர் குறித்த வரலாறு தகவல்கள் பல உள்ள நிலையில், இந்த புகைப்படத்தை எவ்வாறு அச்சடித்தீர்கள்” என்று கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்.

இதற்கு, macmillan சார்பில், ‘ எங்களுடைய நூலாசிரியர் குழுவிடம் ஆலோசித்துவிட்டுத் தெரிவிக்கிறோம்’ என பதிலளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த புகைப்படம் தமிழகத்தில் உணர்ச்சி கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குடுமியுடன் இருக்கக் கூடிய படத்தை எடுத்துவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட படத்தை அச்சிடுவதாக ஸ்ரீ ராம் சர்மாவுக்கு மெயில் அனுப்பியுள்ளது macmillan பதிப்பகம்.

அதில், “திருவள்ளுவர் மீதும் அவருடைய சித்தாந்தங்கள் மீதும் எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. வள்ளுவரின் சித்தாங்கள், நூல்கள் மூலம் புதிய தலைமுறையினரின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள இந்த அத்தியாயத்தை கொண்டு வந்துள்ளோம், வள்ளுவரை அவமானப்படுத்தும் நோக்கிலோ அல்லது வேறு எந்த உள் நோக்கத்திலோ நெற்றியில் மற்றும் கைகளில் திருநீறு பூசப்பட்ட அவரது உருவத்தை அச்சிடவில்லை. இது முழுக்க முழுக்க கவனக்குறைவால் ஏற்பட்டது. அதை தவிர எந்த மதத்தையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

இந்த தவறு குறித்துத் தெரியவந்தவுடன், அதனைத் திருத்த உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த படத்தை மாற்றி, திருவள்ளுவரின் அங்கீகரிக்கப்பட்ட படத்துடன் அந்த பக்கத்தை மாற்றி வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளது.

-பிரியா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 24 பிப் 2021