மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

ஒரு முதல்வரைப் பதவி இறக்கிய வழக்கு: 22 ஆண்டுகள் கழித்து குற்றவாளி கைது!

ஒரு முதல்வரைப் பதவி இறக்கிய வழக்கு: 22 ஆண்டுகள் கழித்து  குற்றவாளி கைது!

அஞ்சனா மிஸ்ரா வழக்கு என்றால் இன்றைய ஐம்பது வயதுகளில் இருப்பவர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள். 22 ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிசா முதலமைச்சரையே பதவிவிலக வைத்த கும்பல் வன்கொடுமை வழக்கு, அது!

1999ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வருக்கும் கட்டாக்குக்கும் இடையிலான நெடுஞ்சாலையில், அஞ்சனா மிஸ்ரா (அப்போது வயது 29) பத்திரிகையாளரான தன் நண்பருடன் சென்றுகொண்டிருந்தார். பராங் என்னும் இடத்தில் இருந்த சாலையோர உணவகத்தில் இருந்தபோது, அங்கு வந்த ஒரு கும்பல் அந்தப் பத்திரிகையாளரை துப்பாக்கி முனையில் பிடித்துவைத்து, அஞ்னாவை பாலின வன்கொடுமைக்கு ஆளாக்கியது. மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தக் கொடுமைக்கு முன்னர், அஞ்சனா வைத்த குற்றச்சாட்டும் நாடளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இந்திய வனத்துறைப் பணி அதிகாரியின் மனைவியான அஞ்சனா, அப்போதைய ஒடிசாவின் அட்வகேட் ஜெனரல் இந்திரஜித் ராய், அவருடைய அலுவலகத்தில் தன்னை மானபங்கம் செய்ய முயன்றதாக குற்றம்சாட்டியிருந்தார். அதையடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்திரஜித் மீதான விவகாரத்தில் தன்னை வாயடைக்க அரசு உயரதிகாரிகளே இந்தக் கொடுமையில் ஈடுபட்டதாக அஞ்சனா, முதல் தகவல் அறிக்கையில் புகார் கூறியிருந்தார்.

உயர்மட்ட அரசதிகாரம் தொடர்புடைய விவகாரம் என்பதால், அரசாங்கத்துக்கும் நெருக்கடியாக உருவெடுத்தது. ஒருகட்டத்தில் முதலமைச்சர் ஜே.பி.பட்நாயக்கை பதவியிலிருந்து விலகுமாறு அவருடைய காங்கிரஸ் கட்சித் தலைமையே பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டது. அவரும் பதவி விலகினார்.

இந்தப் பாலின வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் (அப்போது) 26 வயது பாடியா சாகு, 25 வயது திரேந்திர மொகந்தி, தற்போது பிடிபட்டுள்ள பிரேந்திர பிஸ்வால் (50 வயது) ஆகியோரே என போலீஸார் உறுதிப்படுத்தினர். சம்பவத்தை அடுத்த சில நாள்களுக்குள் முதல் இருவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, 2002 ஏப்ரலில் புவனேஸ்வர் சிபிஐ நீதிமன்றம் இதில் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு, 2010இல் உயர் நீதிமன்றத்திலும் அது உறுதிசெய்யப்பட்டது. கடந்த ஆண்டு சாகு இறந்துபோக, மொகந்தி மட்டும் புவனேஸ்வர் தனிச் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறான்.

இதற்கிடையே, இதில் தலைமறைவான குற்றவாளி பிரேந்திர பிஸ்வால் பற்றிய தகவல்கள் மாநில காவல்துறைக்குக் கிடைத்தன. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆம்பி வேலி நகரியப் பகுதியில் பிளம்பர் வேலைசெய்துவந்த அவனை, கடந்த ஞாயிறன்று ஒடிசா காவல்துறையினர் கைது செய்தனர்.

பிஸ்வால், வேறொரு பெயரில் வாக்காளர் அட்டையை வாங்கி, ஆதார் அட்டையையும் பெற்றிருக்கிறான். அவனுடைய குடும்பத்துக்கு தொடர்ச்சியாகப் பணம் அனுப்பியும் இருக்கிறான். அவனுடைய குடும்பத்தினரைக் கண்காணித்து வந்ததில் அவன் உயிருடன் இருப்பது தெரியவந்தது. தன்னுடைய குடும்பத்தாரிடம் தனக்கு இறப்புச் சான்றிதழ் வாங்குமாறு பிஸ்வால் கூறியிருக்கிறான். அதைக் காட்டி போலீஸ் வழக்கு ஆவணத்தில் இறந்துவிட்டதாகக் காட்டி வழக்கை முடித்துவிடலாம் என்பது அவனுடைய திட்டம். ஆனாலும் அவனுடைய சாமர்த்தியம் இயற்கை நீதியிடம் தோற்றுப்போனது.

பிஸ்வாலின் கைதை அறிந்த அஞ்சனா மிஸ்ரா, அவனை சாகும்வரை தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார்.

கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையான நரகத்தில் சிக்கியிருந்தேன்; இடையில் எத்தனையோ முறை என்னை இல்லாமல் ஆக்கப் பார்த்தார்கள்; என்னுடைய வீட்டில் வசிக்கவிடாமல் செய்தார்கள்; என் வீடு சூறையாடப்பட்டது; காவல்துறைக்கு நன்றி என்றும் அஞ்சனா கூறியிருக்கிறார்.

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

புதன் 24 பிப் 2021