மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

மீண்டும் கொரோனா... காரணம் என்ன?

மீண்டும் கொரோனா... காரணம் என்ன?

மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய ஆறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 10 நாள்களில் சராசரி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதால் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாகப் பல மாநிலங்களில் தொற்றுப்பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பியது.

தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அங்கு பிப்ரவரி 9ஆம் தேதி வரை தினசரி பாதிப்பு என்பது சராசரியாக 2,489 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால், பிப்ரவரி 10ஆம் தேதிக்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 10 நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தைத் தொடர்ந்து கேரளா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய ஆறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த மாநிலங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என்பது மருத்துவத்துறை நிபுணர்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா பரவல் மோசமாக இருப்பதாகச் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

‘‘சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தொற்று அதிக அளவு பரவுவதைக் காண முடிகிறது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 0.48 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தாலும் தற்போதைய நிலை அச்சம் தரும் வகையில் உள்ளது. மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டனர். அவற்றைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் மகாராஷ்டிரா மாநிலத்தின் நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும்” என எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியா முழுக்க மீண்டும் கொரோனா தாக்கத்துக்கான காரணத்தை மருத்துவத்துறை நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் விளக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரிப்பதில் அலட்சியம்; சட்டத்தை மீறுதல்!

கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்தில் அதனால் அதிகம் பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் குறித்து மிகவும் துரிதமாக சுகாதாரத்துறை கவனித்தது. ஆனால், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரிப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது. இதுவும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகிறது.

முழு வீச்சில் நடக்கும் விழாக்கள், திருமணங்கள்

நாட்டின் கோவிட் முடக்கத்தில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட பின்பு, ஊருக்குள் முழு வீச்சில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவற்றில் பங்கேற்க 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டாலும், அதையும் மீறி பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில் அந்த எண்ணிக்கை அதிகரிப்படுகிறது. இதுவும் கொரோனா அதிகரிக்க ஒரு காரணம்.

தேர்தல்கள்

வரவிருக்கின்ற தேர்தல்கள்கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பிரச்சாரங்கள் முழு வீச்சில் நடக்கின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று சேருகிறார்கள்; வெளியூர்களுக்குப் பயணம் செய்கின்றனர்.

முகக்கவசம் அணியாமல் இருப்பது

பொது இடங்களுக்கு வரும்போது, மக்கள் முகக்கவசத்தை முகத்துக்கு கீழேயோ, கழுத்தில் மாட்டியபடியோ, கையில் வைத்துக்கொண்டோதான் வருகிறார்கள். பலர் முகக்கவசம் இல்லாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது. மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பதும், கொரோனா பரவலுக்கான ஒரு காரணமாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

பருவநிலை மாற்றம்

கடந்த சில தினங்களாக மீண்டும் குளிர் அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் ஏற்பட்ட குளிர் காரணமாக, பனிக்காலத்தில் எதிர்கொண்ட குளிரைவிட இப்போது அதிக குளிரை மக்கள் சந்திக்கிறார்கள். இதுவும் நோய்த்தொற்றுக்கு காரணியாக அமைகிறது.

நோயின் தீவிரம் மக்களுக்குப் புரியவில்லை

மக்களுக்கு பயம் இல்லை. நோயின் தீவிரம் மக்களுக்குப் புரியவில்லை. முன்பு மக்கள் கவனமாக இருந்தனர். சட்டக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தனர். ஆனால், இப்போது மக்கள் விதிமுறைகளை மதிப்பதில்லை. நோயைப் பற்றி கவலையும்படுவதில்லை.

கொரோனா போய்விட்டது என்ற தவறான நம்பிக்கை

கொரோனா குறித்து மக்களுக்கு இப்போது நிறைய தவறான கருத்துகள் உள்ளன. இதில் முக்கியமானது, கொரோனா போய்விட்டது என்பதே. கொரோனா என்ற ஒன்று இல்லை என்ற பிரச்சாரத்தை மக்கள் சிலர் நம்புகிறார்கள். இது மேலும் பல தவறான நம்பிக்கைக்கு அவர்களை இட்டுச்செல்கிறது.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 24 பிப் 2021