மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

கொள்ளையோ கொள்ளை:  பெரம்பலூரில் பறிபோன நிம்மதி!

கொள்ளையோ கொள்ளை:  பெரம்பலூரில் பறிபோன நிம்மதி!

பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், தனிமையாக இருக்கும் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று இரவு மட்டும் இருவேறு இடங்களில் கொள்ளை கும்பல் கைவரிசையைக் காட்டியிருக்கிறது.

பெரம்பலூர் அருகே, மங்களமேடு காவல் நிலையம் ரஞ்சன்குடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 50 மீட்டர் மேற்கே உள்ள காட்டுக்கொட்டாயில் மீனவர் மருதமுத்து என்பவரது மகன் வீரபத்திரன் வசித்து வருகிறார். இவரது மனைவி  லட்சுமி(38). மாமனார் பாவாடை(66). மகன் தொட்டியதான் (16).

இவர்கள் நான்கு பேரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு (23/2/2021) 2.30 மணியளவில்,   நாய் குரைத்திருக்கிறது.   சத்தம் கேட்டு எழுந்து வந்த வீரபத்திரன் வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வீட்டின் முன்புறமுள்ள கொட்டகையில் கட்டிலில் படுத்திருக்கிறார்.  அப்போது, 25வயது மதிக்கத்தக்க 5 நபர்கள் வந்திருக்கின்றனர். அவர்களைக் கண்டு வீரபத்திரன் தப்பித்து  ஓட முயற்சி செய்த போது, அவரை வீட்டின் முன்பு, அடுக்கி வைத்திருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் முனையில்  தள்ளியதில் நிலைகுலைந்து விழுந்துள்ளார். இதில் அவருக்கு இடது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் வீரபத்திரனைக் கட்டிப்போட்டுவிட்டு வீட்டினுள் நுழைந்துள்ளனர்.  முகமூடி அணிந்திருந்த அவர்கள்,   வீரபத்திரன் மனைவி லட்சுமியை மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடு, அரை பவுன் மோதிரம், கொலுசு மற்றும் அலமாரிகளை உடைத்து அதிலிருந்த ரூ.20 ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு அனைவரையும் வீட்டுக்குள் விட்டு வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் தப்பித்துள்ளனர். இன்று காலை 7 மணிக்குத் தகவல் தெரிந்து வந்த,  மங்களமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுபோன்று அதேபகுதியில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.  மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே தங்கராசு பட்டினம் நகரில்  தனியாக அமைந்துள்ள வீட்டில் நவநீத பாலு என்பவர் வசித்து வருகிறார்.

இரு மகன்களான நித்திஷ் (18 ), தினேஷ் (18 ) ஆகியோருடன் வீட்டில் தனியாக இருந்த போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க நான்கு ஆண்கள் வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து முன் கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்துள்ளனர். வீட்டிலிருந்தவர்களை கத்தி, கட்டைகளைக் காட்டி மிரட்டி 10 பவுன் நகை , மற்றும் சோனி டிவி ஆகியவற்றைத் திருடிக் கொண்டு மேற்படி நபர்களை வீட்டுக்குள் வைத்து தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலை ஆறு மணி அளவில் வீட்டுக்குள் இருந்தபடியே மூவரும் கூச்சலிட்டுள்ளனர்.  இதையடுத்து தகவல் அறிந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரின் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அரும்பாவூர் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.  கடந்த வாரம் வேப்பந்தட்டை பகுதியில் உள்ள ஐஓபி வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.  இவ்வாறு அந்த பகுதியில் தொடர் கொள்ளை சம்பவம் நடப்பதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இரவு நேரங்களில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களால் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அச்சம் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், உரியப் பாதுகாப்பு நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், 2018 முதல்  2020 இறுதி வரை நடந்த கொள்ளை வழக்குகளின் புள்ளிவிவரங்கள் தெரியவந்துள்ளன. அதில்,  ஆதாயக் கொலை, 5 நபர்களுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுவது, வழிபறி,  பகல் திருட்டு, இரவு நேர திருட்டு, பெரிய திருட்டு,  சின்ன திருட்டு, கால்நடை திருட்டு ஆகியவற்றின் வழக்கு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில், 2018ல், 103புகார்கள் வந்துள்ள நிலையில் இது, 2019ல் 136ஆகவும், 2020ல் 201ஆகவும் அதிகரித்துள்ளது. 2018ஐ காட்டிலும் 2020ல் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது.  இதிலும், 2018ல் நடைபெற்ற கொள்ளை குற்றங்கள் 83 சதவிகிதம் கண்டறியப்பட்டு அதில், திருடு போன பொருட்களில்  75சதவிகிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது 2019ல்  குற்றம் கண்டறிதல் விகிதம் 62 சதவிகிதமாகவும், இதில் மீட்பு 68 சதவிகிதமாகவும் உள்ளது.  2020ல்  புகார்கள் அதிகரித்துள்ள போதிலும், அதில் குற்றம் கண்டறிந்தது 36சதவிகிதம், மீட்பு 28 சதவிகிதம் எனக் குறைவாக உள்ளது.

விலை மதிப்பில், 2018ல் ரூ, 67,74,716 மதிப்பிலான பொருட்களும், 2019ல் ரூ.1,94,07,606 மதிப்பிலான பொருட்களும், 2020ல் ரூ.1,08,59,980 மதிப்பிலான பொருட்களும் திருடுபோயுள்ளன. இதில் 2018ல் ரூ.50,83,698 மதிப்பிலான பொருட்களும், 2019ல் ரூ.1,31,67,995 மதிப்பிலான பொருட்களும்,  2020ல் ரூ.38,58,470 மதிப்பிலான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு குற்றங்களை கண்டறிய ஒரு க்ரைம் இன்ஸ்பெக்டர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

3 நிமிட வாசிப்பு

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

3 நிமிட வாசிப்பு

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

3 நிமிட வாசிப்பு

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

செவ்வாய் 23 பிப் 2021