மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை!

தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை!

மத்திய அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தாது மணல் தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சிறை தண்டனையும் அபராதமும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலுள்ள திருவேம்பாலபுரம் கிராமத்தில் 166 ஹெக்டேர் பரப்புள்ள இடத்தில் விவி மினரல்ஸ் நிறுவனத்தின் கனிம அடிப்படையிலான ஒரு பிளான்ட்டுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறையின் க்ளியரன்ஸ் தேவைப்பட்டது. இதை வழங்கிய அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் துறை துணை இயக்குநர் நீரஜ் கத்ரி, லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாக சிபிஐக்கு அப்போது புகார்கள் சென்றன.

இதன் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியது. சில ஆண்டுகள் நீடித்த இந்த விசாரணையின் முடிவில் டெல்லி சிறப்பு நீதிமன்றம், ‘விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் மத்திய அரசு அதிகாரிக்கு 4 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தது உண்மை என சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் லஞ்சம் வாங்கிய அதிகாரி நீரஜ் கத்ரி, லஞ்சம் கொடுத்த விவி மினரல்ஸ் வைகுண்டராஜன், லஞ்சம் கொடுக்க துணைபுரிந்த விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமி, லஞ்சத்தால் பொதுப் பயன் அடைந்த விவி மினரல்ஸ் நிறுவனம் ஆகியோர் குற்றவாளிகள்” என்று கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இவர்களூக்கான தண்டனை விவரங்களை பிப்ரவரி 22ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. அதன்படி நேற்று தண்டனை விவரங்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

இதன்படி இவ்வழக்கில் ஏ1 குற்றவாளியான சுற்றுச்சூழல் அதிகாரி நீரஜ் கத்ரிக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியான விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ஐந்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

லஞ்சப் பரிமாற்றத்துக்கு உதவி புரிந்ததாக மூன்றாவது குற்றவாளியாக இவ்வழக்கில் இருக்கும் விவி மினரல்ஸில் தமிழகத்திற்கு வெளியே அமைந்துள்ள அரசு நிறுவனங்களிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதற்கான தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய சுப்புலட்சுமிக்கு மூன்று வருட சிறை தண்டனை, இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம். மேலும் விவி மினரல்ஸ் நிறுவனத்துக்கு பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அறிவித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளில் வைகுண்டராஜன் தரப்பினர் தீவிரமாக இருக்கின்றனர் என்று தகவல்கள் வருகின்றன. தேர்தல் வரும்போதெல்லாம் வைகுண்டராஜன் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியும் பெரிதாக எழும். இப்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் வைகுண்டராஜன் மீதான குற்றவியல் வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதால் தென்மாவட்டங்களில் இது பரபரப்பான விவாதப் பொருளாகியுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 23 பிப் 2021