வெளிநாடு செல்லலாம்.. ஆனால்…: கார்த்தி சிதம்பரத்துக்கு கோர்ட் நிபந்தனை!

public

சிவகங்கை மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என்று அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம் 2 கோடி ரூபாய் நிபந்தனை தொகை செலுத்த உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல் மேக்சிஸ் ஆகிய வழக்குகளில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறையும், வருமான வரித் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தன் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில்,கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். சொந்த காரணங்களுக்காக அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று கூறி அனுமதி கேட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் ரூ.10 கோடி வைப்பு தொகை செலுத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஒரு எம்.பி ரூ.10 கோடி ஏன் செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அவர் ஒரு எம்.பி. அவர் ஒன்றும் ஓடப்போவதில்லை. வெளிநாட்டுப் பயணம் என்பது அடிப்படை உரிமை என்று வாதிட்டார்.

அவர் ஒன்றும் ஓடப்போவதில்லை என்ற வாதத்தை சுட்டிக்காட்டிப் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது இதற்கு முன்னாள் நடந்துள்ளது. கார்த்தி சிதம்பரம் எம்.பி.யாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்பட்டவர் என குறிப்பிட்டார்.

இதையடுத்து ஆஜரான கபில் சிபில், ’வழக்குகளில் ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பில்லை என்பதால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. 2020ஆம் ஆண்டு நீதிபதி கோகாய்தான் நிபந்தனை விதித்தார். 2017, 2018ஆம் ஆண்டுகளில் நிபந்தனை இல்லாமல் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்று வந்திருக்கிறார்’ என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிப்பதாகவும், இருப்பினும் அவர் வைப்புத் தொகையாக ரூ.2 கோடி செலுத்த வேண்டும். அவர் எந்த நாடு செல்கிறார். எங்குத் தங்குகிறார் உள்ளிட்ட விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

கடந்த ஆண்டு வெளிநாடு சென்ற போது ரூ.10 கோடியை வைப்புத் தொகையாக கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-பிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *