மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 பிப் 2021

விலைவாசி உயர்வு, ஜெ. மரணத்தின் மர்மம், ஊழல் கரங்கள், ஸ்டாலின் பேச்சு... பாரதீய ஜனதாவுக்குள்ளும் பத்த வச்சிருச்சு!

விலைவாசி உயர்வு, ஜெ. மரணத்தின் மர்மம், ஊழல் கரங்கள், ஸ்டாலின் பேச்சு... பாரதீய ஜனதாவுக்குள்ளும் பத்த வச்சிருச்சு!

தேர்தல் நெருங்க நெருங்க எந்த விவகாரம், பிரச்சாரத்தில் பெரிதாகப் பேசப்படும், எது மக்களை ஈர்க்கும் என்பது பற்றி ஒவ்வொரு கட்சித் தலைமையும் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றன. வாரிசு அரசியல், 2ஜி ஊழல், நில அபகரிப்பு என பழைய விஷயங்களை வைத்தே திமுகவை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள் அதிமுக மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள். ஆனால், திமுகவுக்கு புதுப்புது மேட்டர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. யார் சொல்லிக் கொடுத்தபடி இந்த விஷயங்களை திமுக கையில் எடுத்திருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் மக்கள் மன்றத்தில் திமுக தலைவர் வைக்கும் பல குற்றச்சாட்டுகள் மக்களிடம் பெரிதும் கவனம் ஈர்க்கின்றன என்பதை உளவுத்துறையினரே ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் முக்கியமாக சுட்டிக்காட்டுவது மூன்று விஷயங்களை.

மாநில அரசின் உளவுத்துறை கணிப்புகளையும் சேகரிப்புகளையும் அறிந்த காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் இதுபற்றி நம்மிடம் விளக்கினார்...

‘‘திமுக ஆட்சியை இழந்து பத்தாண்டுகளாகிவிட்டது. இப்போதும் அந்தக் கட்சியின் ஊழல்களைப் பற்றியும், நில அபகரிப்பு பற்றியும் பேசுவதை பெரும்பாலான மக்கள் முக்கியமாக படித்தவர்கள் யாரும் ரசிக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் திமுக மாஜி அமைச்சர்கள் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்படவில்லை. அதைச் செய்திருக்க வேண்டியது, வழக்கு தொடுத்த அதிமுக அரசுதான். அதேபோல நில அபகரிப்புக்கென காவல்துறையில் தனிப்பிரிவை உண்டாக்கினார்கள். மொத்தம் 35,000 புகார்கள் வந்ததில் பத்தில் ஒரு பங்கு புகார்கள்தான் வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டன. அதிலும் பத்தில் ஒரு பங்கு வழக்குகள் கூட நிரூபிக்கப்படவில்லை. இதற்காக சிறப்புப் பிரிவும் சிறப்பு நீதிமன்றமும் அமைத்ததே தவறு என்று ஐகோர்ட் சொல்லிவிட்டது. அப்படியிருக்க அந்த விஷயத்தைப் பேசுவது மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை. வாரிசு அரசியல் பற்றிப் பேசுவதை கீழ்த்தட்டு மக்கள் எந்தளவுக்குப் புரிந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை. படித்தவர்களிடம் இது கொஞ்சம் நினைவில் நிற்கலாம்.

ஆனால் தேனியிலும், மதுரையிலும் ஸ்டாலின் பேசிய பேச்சுகள், மக்களிடம் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் ஏன் நான்காண்டுகள் ஆகியும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்றும், ஓபிஎஸ் ஏன் ஆஜராகவே இல்லை என்றும் அவர் கேட்ட கேள்விகள் நடுநிலையாளர்களை யோசிக்க வைக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணத்தின் மர்மங்களை விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வருவோம் என்று அவர் சொல்வதை அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களே பேசுகிறார்கள். ஜெயலலிதா மீது விசுவாசம் வைத்துள்ள நிர்வாகிகள் பலரும், இதற்காகவே அதிமுக தோற்க வேண்டுமென்றும் பகிரங்கமாகச் சொல்கிறார்கள்.

இந்த இரண்டு விஷயங்களை விட, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து வலுவான பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இது எல்லாத்தரப்பு மக்களிடமும் கவனம் பெற்றிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக தோற்பதற்கு மின்தடை காரணமாக இருந்ததைப் போல, இந்தத் தேர்தலில் இந்த விலைவாசி உயர்வு அதிமுக கூட்டணி தோல்விக்கு முக்கியப் பங்காற்றும் என்று நினைக்கிறோம்’’ என்று விலாவாரியாக விளக்கினார்.

அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சீனியர் வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‘‘அம்மாவின் (ஜெயலலிதா) மரணத்தின் மர்மம் குறித்து விசாரிக்கப்படும் என்று ஸ்டாலின் பேசுவது, எங்களுடைய கட்சிக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான். இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என மூன்று பேருக்குள்ளும் ஒரு முக்கோண அரசியல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஜெயலலிதாவின் மரணம் பற்றிய உண்மைகள் வெளியில் வரவேண்டுமென்றால், இவர்களைத் தவிர்த்து ஒருவர் அதிகாரத்துக்கு வர வேண்டுமென்று அடிமட்டத்தொண்டன் நினைப்பது இயல்பானதுதான். அதற்காக அதிமுக தொண்டன் யாரும் திமுகவை ஆதரிக்க வாய்ப்பில்லை. அது நடுநிலையாளர்கள், ஜெயலலிதாவின் அபிமானிகளிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமென்று எதிர்பார்க்கலாம்’’ என்றார்.

ஸ்டாலினின் பேச்சு குறித்து பாரதீய ஜனதாவின் பார்வை எப்படியிருக்கிறது என்று அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, அது அந்தக்கட்சிக்குள் இன்னொரு கோணத்தில் அலசப்படுகிற விஷயம் தெரியவந்தது.

‘‘மதுரையில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின் பேசும்போது ‘மோடியின் கரங்களில் ஒன்று காவிக்கரம், மற்றொன்று கார்ப்பரேட் கரம். அத்துடன் ஊழலையும் கரம் கோர்த்துள்ளார்’ என்று சென்னையில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரின் கரங்களை பிரதமர் மோடி உயர்த்திப் பிடித்தது பற்றிக் குறிவைத்துத் தாக்கிப் பேசியிருக்கிறார். ஆளுநரிடம் தமிழக அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி இரண்டு பட்டியல்களைக் கொடுத்துள்ள நிலையில் ஸ்டாலினின் இந்தப் பேச்சு, எங்களுடைய கட்சிக்குள்ளேயே பேசுபொருளாகி இருக்கிறது.

ஆர்எஸ்எஸ் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத், முன்னாள் கவர்னர் சண்முகநாதன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலரும் கோவைக்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்து பல தரப்பினரையும் சந்தித்துப் பேசிச் சென்றனர். அவர்களைச் சந்தித்த பலரும், இந்த அரசின் ஊழல்கள் பற்றியும், தமிழக அரசின் ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்திருப்பதையும், தொழில் செய்வதில் உள்ள சிரமங்களையும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவுக்குள் மோதல் ஏற்பட்டபோது, ஆட்சியைக் கலைத்து ஆளுநர் ஆட்சியைக் கொண்டு வந்திருந்தால் இந்நேரம் அதிமுக இருக்குமிடத்தில் பாரதீய ஜனதாவைக் கொண்டு வந்திருக்கலாம் என்றும் சிலர் கருத்துச் சொல்லியிருக்கின்றனர். லஞ்சமும் ஊழலும் அளவு கடந்து போயிருக்கும் அதிமுக ஆட்சியை பாரதீய ஜனதாதான் காப்பாற்றியிருக்கிறது என்ற எண்ணம், படித்தவர்கள் மத்தியில் இருப்பதையும் பலர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றனர். அதற்கு அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு திமுக ஆட்சியைப் பிடித்திருந்தால், இந்து அமைப்புகளுக்கும், அதன் கொள்கைக்கும் திட்டங்களுக்கும் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அவர்கள் விளக்கினர். தேர்தலுக்குப் பின், சில முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுக்கும். எந்த ஊழலுக்கும் பாரதீய ஜனதா துணை போகாது என்பது அப்போது நிரூபிக்கப்படும் என்று அந்தத் தலைவர்கள் சிலரிடம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்’’ என்றார்.

வேளாண் கடன்கள் தள்ளுபடி, ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் வாபஸ் என நாளொரு அறிவிப்பும் பொழுதொரு சலுகையுமாக அறிவித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. மாநில அரசின் சாதனைகளை தினமும் பட்டியல் போட்டு ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்று விளம்பரத்திலும் வெளுத்துக் கட்டுகிறது. ஆனால் திமுக எடுத்துள்ள இந்த புதிய அஸ்திரங்களை அதிமுகவும், பாரதீய ஜனதாவும் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாகவுள்ளது.

திமுகவுக்கு எதிராக ஆளும்கட்சிகளின் கூட்டணி அதிரடியாக ஏதோ செய்யப்போவது நிச்சயம்... அது தேர்தல் நேரத்தில் ஆதாயத்தை ஏற்படுத்தும் என்பதுதான் நிச்சயமில்லை!

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

திங்கள் 22 பிப் 2021