மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 பிப் 2021

நாசாவின் செவ்வாய்ப் பயணம்: வெற்றிக்கு வித்திட்ட இந்தியப் பெண்!

நாசாவின் செவ்வாய்ப் பயணம்:  வெற்றிக்கு வித்திட்ட இந்தியப் பெண்!

நாசாவின் ‘பெர்சிவியரன்ஸ் ரோவர்’ விண்வெளிக்குப் பயணம் செய்யும் பாதையில் தொடங்கி, வெற்றிகரமாகச் செவ்வாய்க்கிரகத்தில் நிலைகொள்வதுவரை அனைத்தையும் கையாளும் பொறுப்பை ஏற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகனை உலகமே பாராட்டி வருகிறது.

சமீபகாலமாக அமெரிக்காவில் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்வாதி மோகன் என்கிற இளம் பெண் விஞ்ஞானி, நாசா செவ்வாய்க்கு அனுப்பியிருக்கும் 'பெர்சிவியரன்ஸ் ரோவர்' விண்கலத்தின் விண்வெளிப் பயணத்தைத் துல்லியமாக வழிநடத்தி செவ்வாயில் வெற்றிகரமாகத் தரையிறங்க வைத்திருக்கிறார். ஸ்வாதியின் இந்தச் சாதனையை உலகமே பாராட்டி வருகிறது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செவ்வாய்க்கிரகம் குறித்து ஆராய்ச்சிக்காக மார்ஸ் 2020 என்கிற திட்டத்தை பல ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் என்கிற முக்கிய பொறுப்பைத்தான் (The Guidance, Navigation and Controls Operations) ஸ்வாதி மோகன் வகித்திருக்கிறார். அதாவது, பெர்சிவியரன்ஸ் ரோவர் விண்கலம் விண்வெளிக்குப் பயணம் செய்யும் பாதையில் தொடங்கி அது வெற்றிகரமாகச் செவ்வாய்க்கிரகத்தில் நிலைகொள்வதுவரை அனைத்தையும் கையாளும் பொறுப்பு இவருடையது.

இந்த வேலை, சாதாரணமானது அல்ல. செவ்வாய்க்கிரகத்தில் ஜெஸிரோ கிரேட்டர் (Jezero Grater) என்கிற ஒரு பள்ளம் காணப்படுகிறது. இந்தப் பள்ளம் இருக்கும் பகுதியில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும் இதன்மூலம் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா என்பதை கண்டறிவதற்காகவும் இந்த ரோவர் விண்கலம் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் 40 சதவிகித விண்கலங்கள் மட்டும்தான் செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி தன்னுடைய பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, பெர்சிவியரன்ஸ் ரோவர் விண்கலமானது செவ்வாயில் உள்ள ஜெஸிரோ கிரேட்டர் பள்ளத்தில் நுழைந்த பிறகும் உயிர்ப்புடன் இருக்குமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், செவ்வாய்க்கிரகத்தில் உள்ள இந்தப் பள்ளம் உள்ள பகுதியில் ரோவர் விண்கலத்தை உயிர்ப்புடன் வெற்றிகரமாக நிலைகொள்ள வைத்து அசத்தியிருக்கிறார் ஸ்வாதி மோகன்.

இந்தியாவில் பிறந்த ஸ்வாதி ஒரு வயதிலேயே அமெரிக்காவுக்குக் குடியேறிவிட்டார். ஒன்பது வயதுச் சிறுமியாக இருக்கும்போது ‘ஸ்டார் டிரெக்’ என்கிற அறிவியல் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்ததாகவும் அதிலிருந்து விண்வெளி குறித்து தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாகவும் இவர் கூறுகிறார். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் பட்டம் பெற்ற இவர் அதன் பின்னர் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பிரிவில் முதுகலை அறிவியல் மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக மார்ஸ் 2020 திட்டத்தில் வேலை பார்த்து வரும் இவர் படிக்கின்ற காலத்தில் ஒரு நல்ல இயற்பியல் ஆசிரியர் கிடைத்ததன் காரணமாகவே விண்வெளித்துறை பக்கம் தன்னுடைய கவனம் திரும்பியது என்றும் சொல்லியிருக்கிறார்.

பெர்சிவியரன்ஸ் ரோவர் வெற்றிகரமாகத் தரையிறங்கும் நேரம் நாசா கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி அதைக் கண்காணித்து வழிநடத்திய ஸ்வாதி, நெற்றியில் பொட்டு வைத்திருந்தார். தற்போதைய சாதனைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையென்றாலும், இந்திய கலாச்சாரம் என இதையும் குறிப்பிட்டு ஸ்வாதியை சில நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 21 பிப் 2021