கிச்சன் கீர்த்தனா: குடமிளகாய் சாம்பார்

சிலருக்கு வீட்டில் செய்யும் சாம்பாரைவிட, வெளியிடங்களில் சாப்பிடும் சாம்பார் ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த குடமிளகாய் சாம்பார் செய்து கொடுங்கள். விரும்பி உண்பார்கள்; இன்னும் கொஞ்சம் ஊற்று என்று கேட்பார்கள்.
என்ன தேவை?
குடமிளகாய் – 2
சாம்பார் பொடி - அரை டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
புளி பேஸ்ட் - கால் டீஸ்பூன்
துவரம் பருப்பு - அரை கப்
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - ஐந்து
உப்பு - தேவைக்கேற்ப
நெய் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, குடமிளகாய், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒன்றரை கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கரைத்துக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். அடுத்து அதில் குடமிளகாயைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலை ஊற்றி பொடி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அடுத்து வேகவைத்த துவரம் பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக மல்லித்தழை சேர்த்து ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்க சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும்.