மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 பிப் 2021

ஐந்து மாதக் குழந்தையின் சிகிச்சைக்குக் கிடைத்த ரூ.17 கோடி!

ஐந்து மாதக் குழந்தையின் சிகிச்சைக்குக் கிடைத்த ரூ.17 கோடி!

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட மும்பையைச் சேர்ந்த ஐந்து மாதக் குழந்தையைக் காப்பாற்ற இந்தியா உட்பட உலகம் முழுவதும் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் மூலம் 17 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளனர்.

மும்பையில் ஐடி கம்பெனியில் பணியாற்றும் மிஹிர் காமத்துக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. டீரா என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை பிறந்து சில மாதங்களில் குழந்தையின் உடலில் ஏதோ மிகப்பெரிய கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது குழந்தையால் தலையைத் தூக்க முடியவில்லை. குடித்த பால் முழுவதையும் கக்கிக்கொண்டிருந்தது. அதோடு குழந்தையால் உட்காரவும் முடியவில்லை. குழந்தையை டாக்டர்களிடம் காண்பித்தபோது குழந்தைக்கு மிகவும் அபூர்வமான ஸ்பைனல் மஸ்குலர் அட்ரொபி எனப்படும் ஒரு வகை நரம்பியல் கோளாறு நோய் இருப்பது தெரியவந்தது.

இந்த நோயை குணப்படுத்த இந்தியாவில் மருந்து இல்லை. ஒரே ஒரு மருந்து மட்டும்தான் இதற்கு இருக்கிறது. அதுவும் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது. சிகிச்சைக்கு மட்டும் 16 கோடி ரூபாய் செலவாகும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். மிஹிர் தம்பதியிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை.

உடனே மருத்துவ சிகிச்சைக்கு ஆன்லைனில் நிதி திரட்டும் இம்பேக்ட் குரு மற்றும் கோ-ஃபண்ட்மி ஆகிய ஆன்லைன் கம்பெனிகளின் உதவியை நாடினர். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்து நல்லுள்ளம் படைத்தவர்கள் தாராளமாக நிதியுதவி செய்தனர். சிகிச்சைக்குத் தேவையான 16 கோடிக்கு, 1 கோடி அதிகமாக 17 கோடி ரூபாய் அளவுக்குப் போராடி திரட்டிவிட்டனர்.

இந்த நிதியை உலகம் முழுவதுமிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வெறும் 90 நாள்களில் நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஆனால் இதில் மேலும் ஒரு சிக்கல் இருந்தது.

அமெரிக்காவில் இருந்து மருந்தை இறக்குமதி செய்வதாக இருந்தால் அதற்கு 6 கோடி ரூபாய் இறக்குமதி வரி கட்ட வேண்டும். உடனே குழந்தையின் பெற்றோர் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உதவியை நாடினர். அவர் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதால் ஓரிரு நாட்களில் அம்மருந்தை இறக்குமதி செய்ய பிரதமர் அலுவலகம் கட்டணச் சலுகை வழங்கியது.

இப்போது அந்த மருந்து வரும் 24 அல்லது 25ஆம் தேதி இந்தியா வந்து சேர இருக்கிறது. ஒரு முறை ஊசி போடுவதற்கான மருந்து மட்டும் 2.1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 15,28,46,190) ஆகும். இம்மருந்தை செலுத்திய பிறகு டீராவுக்கு வழக்கமாகச் செய்யப்படும் பிசியோதெரபி சிகிச்சையளிக்கப்படும். அதன் பிறகுதான் டீரா எழுந்து உட்காருவாள்.

அந்த நன்னாளை அவளுக்கு நிதியுதவி செய்த அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வியாழன் 18 பிப் 2021