கிச்சன் கீர்த்தனா: உருளைக்கிழங்கு - குடமிளகாய் கிரேவி

கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமல் காக்கும் தன்மையும் கொண்டது குடமிளகாய். சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உருளைக்கிழங்கு - குடமிளகாய் கிரேவி உதவும்.
என்ன தேவை?
குடமிளகாய் – 3
உருளைக்கிழங்கு - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
இஞ்சி - சிறிதளவு
பட்டை - சிறிதளவு
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
எப்படி செய்வது?
குடமிளகாய், தக்காளியைத் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக்கவும்.
தக்காளி, பூண்டு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த விழுதை கொட்டி கிளறவும். அடுத்து குடமிளகாய், வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கிரேவி பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.