மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

சென்னை மெட்ரோவில் பணி: நெகிழும் திருநங்கைகள்!

சென்னை மெட்ரோவில் பணி: நெகிழும் திருநங்கைகள்!

புதிதாகத் திறக்கப்பட்ட புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் முன்னேறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் (பிப்ரவரி 14) தொடங்கி வைத்தார். இந்த மெட்ரோ ரெயில் சேவையால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தங்களது வாழ்வாதாரம் முன்னேறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதுவண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது மற்றும் பயணிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பணியில் 30 வயதான திருநங்கை வினித்ரா தேவி அமர்த்தப்பட்டுள்ளார். பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், “பல வருடங்களாக துன்பங்களை தாங்கிய பின்னர் இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்த விரும்புகிறோம். இருளில் மூழ்கி இருப்பதை உணர்ந்தவர்களுக்கு இது நம்பிக்கையின் ஒளியாக உணர்கிறோம்” என்று பெருமையாகக் கூறியுள்ளார்.

“மாநில அளவிலான கிரிக்கெட் வீரராகவும், தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட வீரராகவும் இருந்தேன். மக்கள் எங்களையும், எங்கள் வேலையையும் பார்க்கும்போது அதிக அளவில் ஊக்கம் அளிக்கிறார்கள்” என்கிறார் இங்கு பணியாற்றும் கஜகிருஷ்ணன்.

பொறியியல் பட்டதாரி அருண்கார்த்திக், “நான் பகுதி நேர வேலைகளை செய்து பல ஆண்டுகளாகப் போராடினேன். தனியாக உயிர் வாழ்வது முதல் எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்து போராடி இருக்கிறேன். இந்தப் பணியில் சேர்ந்ததால் நான் சாதித்து இருக்கிறேன். எங்களையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டமாட்டார்கள்” என்று நெகிழ்ந்துள்ளார்.

பவானி, கனிமொழி, பார்கவி ஆகியோர் கூறும்போது, “துன்புறுத்தலை எதிர்கொள்வது முதல் பாகுபாடு காண்பது வரை அனைத்தையும் பார்த்திருக்கிறோம். இப்போது மக்களுடன் நேரடியாக தொடர்புகொள்ள முடியும் என்பதால் இந்த வேலையை செய்ய பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

பொதுமக்களுடன் நல்ல தொடர்பு கொண்டுள்ளதால் நாங்கள் முழு திருப்தியுடன் உள்ளோம். எங்களை வேலைக்கு அமர்த்திய சென்னை மெட்ரோ ரெயில் நிலைய நிர்வாகத்தினருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று அவர்கள் நன்றியும் கூறுகிறார்கள்.

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

செவ்வாய் 16 பிப் 2021