மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

மூத்த குடிமக்களுக்குக் கட்டணம் இல்லா பயண டோக்கன்கள் - செய்ய வேண்டியது என்ன?

மூத்த குடிமக்களுக்குக் கட்டணம் இல்லா பயண டோக்கன்கள் -  செய்ய வேண்டியது என்ன?

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டு, ஜெயலலிதாவின் பிறந்த நாளான 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில், சென்னையில் மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், 60 வயது நிறைவு மற்றும் இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் மாநகர் போக்குவரத்துக் கழக பஸ் நிலையங்கள் மற்றும் பணிமனைகளை அணுகினால் அவர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்துகின்ற வகையில், கட்டணம் இல்லா பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.

மூத்த குடிமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்தத் திட்டத்தின் வாயிலாக, இதுவரை ஏறத்தாழ 3 லட்சத்து 51 ஆயிரத்து 617 பேர் பயனடைந்துள்ளார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று காரணமாக அத்தியாவசியப்பணிகள் தவிர, பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

நோய் தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அரசால் விதிக்கப்பட்டன. தற்போது நோய்த்தொற்று பெருமளவில் குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கட்டணம் இல்லா பஸ் பயண டோக்கன்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை பெற்றுள்ளோர் மற்றும் புதியதாக பெற விரும்பும் தகுதிவாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த டோக்கன்களை இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள பேருந்து மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

அலுவலக நாட்களில் காலை 8 மணி தொடங்கி இரவு 7.30 மணி வரையும், மாதம் ஒன்றுக்கு 10 வீதம் (பிப்ரவரி முதல் ஜூலை வரை) 6 மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லா பஸ் பயண டோக்கன்களை அடையாறு, திருவான்மியூர், வடபழனி, அண்ணாநகர், அயனாவரம், வியாசர்பாடி உள்பட 21 பணிமனைகளிலும், சென்டிரல் ரெயில் நிலையம், பிராட்வே, கோயம்பேடு உட்பட 19 பஸ் நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?

விண்ணப்பப்படிவம் அந்தந்த மையங்களில் வழங்கப்படும். மேலும் மாநகர் போக்குவரத்துக் கழக வலைத்தள முகவரியான https://mtcbus.tn.gov.in/Home/senior_citizen/18-ல் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அளிக்கும்போது வயது மற்றும் இருப்பிடப் சான்றுக்கான வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை அல்லது பள்ளி சான்றிதழ் போன்ற ஆவணங்களின் நகல் இணைக்கப்படவேண்டும்.

5 செ.மீ. மற்றும் 4 செ.மீ. அளவிலான பாஸ்போர்ட் அளவு தற்போதைய இரண்டு புகைப்படங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

கட்டணம் இல்லா டோக்கன்களில் அச்சடித்துள்ள மாதத்துக்கு மட்டுமே அந்தந்த டோக்கன்கள் செல்லுபடியாகும். குறிப்பிட்ட மாதம் கடந்துவிட்டால் அந்த டோக்கன்கள் காலாவதியானதாக கருதப்படும்.

மூத்த குடிமக்களுக்கான கட்டணம் இல்லா பஸ் வசதியை சென்னை மாநகர் பேருந்துகளில், இரவு நேர பஸ்கள் உள்பட அனைத்து பஸ்களிலும் (குளிர்சாதன பஸ் நீங்கலாக) பயணம் செய்யலாம்.

மேற்கண்ட தகவல்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

செவ்வாய் 16 பிப் 2021