மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

சிறப்புக் கட்டுரை: கட்சியும், தலைமையும்: மக்களாட்சியின் நுட்பங்கள்!

சிறப்புக் கட்டுரை: கட்சியும், தலைமையும்: மக்களாட்சியின் நுட்பங்கள்!

ராஜன் குறை

இந்த வார நிகழ்வுகள் சில தேர்தல் சார்ந்த மக்களாட்சி அரசியலில் அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் தலைவர்களான தனிநபர்களுக்கும் உள்ள தொடர்புகளைக் குறித்து சிந்திக்க வைக்கின்றன. உலகின் முழுமையான மக்களாட்சி குடியரசுகளில் அதிக பழைமையான, 1776ஆம் ஆண்டு தோன்றிய, அமெரிக்க ஐக்கிய மாகாணத்தில் உலகமே வெட்கும்படியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, நான்காண்டு சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளிவந்துள்ள சசிகலாவை எப்படி அணுகுவது என்பதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன. மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் அமைப்பு கமல்ஹாசனை நிரந்தர தலைவராகத் தேர்ந்தெடுக்கிறது. இவற்றுக்கிடையில் சித்தாந்த ரீதியாக என்ன தொடர்பு என்பதை புரிந்துகொள்ள முயற்சி செய்வதே இந்த கட்டுரை.

அரசியல் கட்சியும், தலைவரும்

ஒரு அரசியல் கட்சிக்கு மூன்று முக்கிய பரிமாணங்கள் இருக்கின்றன. ஒன்று அதன் உறுப்பினர்கள், கிளைகள், கிளைச்செயலர்கள், தலமட்ட நிர்வாகிகள், முழு நேர, பகுதி நேர செயற்பாட்டாளர்கள், தேர்தல் கால பூத் ஏஜெண்ட்டுகள் என்ற கட்டமைப்பு.

இரண்டு அதன் கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள், கருத்தியல் ஆகியவை.

மூன்றாவது, அந்த கொள்கைகளின் அடிப்படையில் கட்சியை ஒன்றுபடுத்தி, பொதுமக்களிடையே அதற்கு வாக்குகளை பெற்றுத் தரக்கூடிய தலைவர்.

பாரதீய ஜனதா கட்சியை எடுத்துக்கொண்டால் ஆர்.எஸ்.எஸ் என்ற தொண்டர் படை அதன் அடிப்படை கட்டுமானமாக இருக்கிறது. அதைத்தான் சுருக்கமாக சங் (சங்கம் என்பதன் இந்தி மொழி சுருக்கம்) என்றும், அதன் உறுப்பினர்களை சங்கி என்றும் கூறுகிறோம். இந்துத்துவம் என்ற இந்து மத அடையாளவாதம் அதன் அரசியல் கொள்கை (இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் மீதான வெறுப்பு, விலக்கம் அதன் மறுபக்கம்). அது அனைத்து மக்களையும் கவரும் வெகுஜன தலைவராக நரேந்திர மோடியை இன்று முன்னிறுத்துகிறது. இதற்கு முன்னர் அடல் பிஹாரி வாஜ்பேயியை முன்னிறுத்தியது. அவருக்கு அடுத்த தலைவரான அத்வானி பிரதமராக வருவதற்கு முன் மோடி முந்திக்கொண்டு விட்டார். மோடி என்னதான் தவறுகள் செய்து தேர்தலில் தோற்றாலும் பாரதீய ஜனதா கட்சியின் கட்டுமானமும், கொள்கையும் தொடரும். இதனை கருத்தியல்-கட்டுமானம்-தலைமை என்று குறிக்கலாம். அருவமான அடையாளம், கருத்தியலே முதன்மையானது. இது பாசிச தன்மைகொண்டு செயல்படும்.

இப்படி கட்சியின் கட்டுமானம் ராணுவத் தன்மையோடும், கொள்கை அடையாளவாதமும், வெறுப்பரசியலும் கொண்ட பாசிசமாகவும் இல்லாத போது, கட்சி தலைமையின் வேலை அதிகமாகிறது. அப்போது தலைவரே கட்சியின் முக்கிய அடையாளமாக, கட்சியினை ஒருங்கிணைக்கும் பிம்பமாக மாறுகிறார். கட்சியில் உள்ள பல பிரிவினரது நலன்களையும், கருத்தியல் போக்குகளையும் சமரசம் செய்து நடத்திச் செல்லவேண்டும். இது வெகுஜன அரசியலில் தவிர்க்க முடியாத அம்சம். நல்ல தலைவர்கள் அப்படி தாங்கள் ஒரு ஒருங்கிணைக்கும் பிம்பமாக மாறிய பிறகும் பலரது கருத்துக்களை கேட்டு, அவர்களை அனுசரித்து கட்சியை நடத்துவார்கள். காந்தி, நேரு, அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பலர் இப்படியான மக்களாட்சி பண்புள்ள வெகுஜன தலைவர்களாக உருவானார்கள். இதனை கட்டுமானம்-கருத்தியல்-தலைமை என்று குறிக்கலாம். கட்சி அணிகளின் செயல்பாடே, மக்கள் நலனே முதன்மையானது. காங்கிரஸ், தி.மு.க கட்சிகள் இதற்கு உதாரணம். இது மக்களாட்சியின் வெகுஜன அரசியல் வடிவம்.

இதற்கு மாறாக ஒரு தலைவர் தன்னுடைய பிம்பத்தை மட்டுமே முக்கிய முதலீடாக மாற்றி, கட்சியில் அனைவரும் தலைவரை தொழுவதன் மூலமே அடையாளம் பெற முடியும் என்ற எதேச்சதிகார நிலையை உருவாக்குவது மூன்றாவது போக்கு. இவர்கள் எந்த கொள்கை, கோட்பாடு பேசினாலும் தனிநபர் கவர்ச்சியே மூலாதாரம். வெகுஜன அரசியலின் மலிவான வடிவம் இது. தலைவரின் பிம்பமே முதன்மையானது. அ.இ.அ.தி.மு.க இதற்கு நல்ல உதாரணம். எம்.ஜி.ஆர், அவருக்கு பிறகு ஜெயலலிதா ஆகியோர் தவிர பிறர் எல்லோரும் பூஜ்யங்கள் என்றே தங்களை கூறிக்கொண்டு, அவர்கள் காலில் விழுந்து பூஜிப்பார்கள். இது வெகுஜன அரசியலின் எதேச்சதிகார வடிவம்.

டொனால்ட் டிரம்ப் உதாரணம்

அமெரிக்காவில் இருநூறு ஆண்டுகளாக இரு கட்சி அரசியல் அமைப்பே நிலவுகிறது. குடியரசு கட்சி என்பது ஒன்று, ஜனநாயக கட்சி என்பது மற்றொன்று. இரண்டிலுமே மக்களில் கணிசமானோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். அரசியலின் வேர்கள் குடிமை சமூகத்திலிருந்தே துவங்கும். பல்வேறு பிரச்சினைகளில் இந்த கட்சிகளின் அணுகுமுறைகள் சார்ந்த வேறுபாட்டினை பொறுத்து தேர்தல்களில் ஆதரவு கிடைக்கும். ஒவ்வொரு மட்டத்திலும் தேர்தல்களில் வேட்பாளர்களின் ஆளுமை, தலைமைப் பண்பு ஆகியவையும் அலசப்படும். தேர்தல் வெற்றி தோல்விகளில் வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கும். இதனால் வெகுஜன தன்மையற்ற குடிமை சமூக அரசியலே அமெரிக்காவில் நடைபெறுவதாக தோன்றும்.

ஆனால் அமெரிக்க சமூகத்தில் இன வேற்றுமை வேரூன்றியுள்ளது. பெரும்பான்மையான வெள்ளை நிறத்தவர்களுக்கும், கறுப்பினத்தவருக்கும், ஆசியர்/லத்தீனோக்களுக்கும் இடையே சமூக இடைவெளியும், முரண்பாடுகளும் உண்டு. அதனால் பொருளாதார சிக்கல் அதிகரிக்கும்போது வெள்ளை இனவெறியும், பெரும்பான்மைவாதமும் அதிகரிக்கிறது. அதன் விளைவாக டொனால்ட் டிரம்ப் என்ற அகந்தையும், சுயமோகமும் நிறைந்த பொறுப்பும், திறமையுமற்ற மனிதர் அமெரிக்க ஜனாதிபதியாக 2016-ஆம் ஆண்டு தேர்வானார். சர்வதேச அளவிலும், உள் நாட்டிலும் பல மோசமான கொள்கை முடிவுகளை எடுத்தார். இனவெறியை ஊக்குவித்தார். கொரோனா பெருந்தொற்றை முட்டாள்தனமாக கையாண்டார். இறுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தோற்றார். தோல்வியை ஏற்றுக்கொள்ள மனமின்றி தேர்தலில் மோசடி நடந்துவிட்டது என்று வாதிட்டார். தனது இனவெறி ஆதரவாளர்களை தூண்டிவிட்டு, ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்ய நாடாளுமன்றம் கூடிய போது அதை கலவரக்காரர்கள் தாக்க வகை செய்தார். அதாவது நாட்டின் அதிபரே கலவரத்தை தூண்டிவிட்டு, நாடாளுமன்ற கட்டடத்தை தாக்கச் செய்தார்.

டிரம்ப் செய்த குற்றம் தெளிவாக இருந்தாலும், இரு நாட்களுக்கு முன் அவர் மீதான விசாரணையில் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக வாக்களிக்க குடியரசு கட்சி உறுப்பினர்கள் மறுத்துவிட்டார்கள். காரணம் டிரம்பிற்கு மக்களிடையே செல்வாக்கு அதிகம் இருக்கலாம்; அது அடுத்த தேர்தலில் தங்கள் வெற்றி வாய்ப்பை பாதித்துவிடுமோ என்ற அச்சம்தான். சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் என்பதையெல்லாம் விட மக்களின் வாக்குகளை பெறுவது என்பதே மக்களாட்சியில் முக்கியம் என காட்டிவிட்டார்கள். நிறவெறியை கணிசமான மக்கள் ஆதரித்தால் அதற்கும் வால்பிடிப்பதே மக்களாட்சி அரசியல் என்ற நிலையை உருவாக்கியுள்ளார்கள். உலக அளவில் மக்களாட்சி விழுமியங்களுக்கு இது ஒரு மாபெரும் பின்னடைவு.

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும்

எம்.ஜி.ஆர் என்ற நடிகர் திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் மூலம் தன் திரைப்படக் கதையாடல்களுக்கும், கதாநாயக பிம்பத்திற்கும் கூடுதல் மதிப்பை உருவாக்கிக் கொண்டார். அவர் திரையில் பேசிய வசனங்களுக்கும், பாடிய பாடல்களுக்கும் கூடுதலான ஒரு அரசியல் பொருள் கிடைத்தது. அப்படி உருவான தன் கதாநாயக பிம்பத்தை மூலதனமாக வைத்து தி.மு.க கட்சியை பிளந்து ஒரு புதிய கட்சியை மறைந்த தலைவர் அண்ணாவின் பெயரால் அண்ணா தி.மு.க என்று துவக்கினார். அப்படி தி.மு.க-வின் கொள்கை கோட்பாடுகளை நகலெடுத்து, தன்னுடைய பிம்பத்தை மூலதனமாக்கி தொடங்கிய கட்சியில் “அகில இந்திய” என்ற அடைமொழியை சேர்த்தார். அதாவது தி.மு.க-வின் மாநில சுயாட்சி கோரிக்கைக்கு எதிராக அகில இந்திய ஒன்றியத்திற்கு ஆதரவான எதிர்புரட்சி சக்தியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். ஆனால் அதைக்கூட ஒரு கொள்கையாக மாற்றாமல், தன்னுடைய கதாநாயக பிம்பமும், தி.மு.க எதிர்ப்புமே கட்சியின் அரசியல் சாராம்சமாக விளங்கச் செய்தார். அதனால் அவர் மறைந்த பிறகு அவருடன் பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவே அவருடையே வழித்தோன்றலாக கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடிந்தது. அதாவது ஒரு திரைப்பிம்பத்தின் வாரிசாக மற்றொரு திரைப்பிம்பமே அமைந்தது.

அதன் பிறகு ஜெயலலிதா தனக்கென புதிய “அம்மா” பிம்பத்தை கட்டமைத்துக் கொண்டு, தன் கட்சியின் அனைத்து தலைவர்களும், அமைச்சர்களும் பொது மேடையில் தன் காலில் விழுவதை நியதியாக்கினார். தனி நபர் வழிபாட்டின் உச்ச நிலையை எட்டினார். இன்று எம்.ஜி.ஆருக்கும். ஜெயலலிதாவுக்கும் “கோயில்” கட்டி கட்சியினர் வழிபடும் அளவுக்கு அவர்களே கட்சி, அவர்களே மக்கள் என்ற நிலையை அடைந்தார்கள். “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற ஜெயலலிதா சொல்லாமல் சொன்னது “நானே மக்கள்” என்பதைத்தான்.

எம்.ஜி.ஆர் மறைந்து 34 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று அவரது தனிப்பட்ட கவர்ச்சி அல்லது ஈர்ப்பு என்பது ஒரு பழைய நினைவுதான். இன்றைய அ.இ.அ.தி.மு.க என்பது ஜெயலலிதா வழிபாட்டில் வளர்ந்தது. அவர் “தி.மு.க ஒரு தீயசக்தி” என்று அலறியதை மூட நம்பிக்கையாக ஏற்றுக்கொண்டதுதான் அதற்குத் தெரிந்த ஒரே அரசியல். ஜெயலலிதா பிம்பத்தை விட்டால் இன்றைக்கு கட்சிக்கு வேறு எந்த கொள்கையோ, கட்டுமானமோ எதுவும் கிடையாது. “மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா” என்று மூச்சுக்கு முப்பது முறை உச்சரிப்பதைத் தவிர கட்சியில் யாருக்கும் எந்த அரசியல் கோட்பாடும் தெரியாது. அதனால்தான் ஜெயலலிதா பிம்பத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் தங்கள் உயிராக நினைக்கிறார்கள்.

ஜெயலலிதாவும், சசிகலாவும்

தன் அரசியல் வாழ்க்கை முழுவதிலும் சசிகலாவை இணைபிரியாத துணையாக வைத்துக்கொண்டார் ஜெயலலிதா. தன் உடன்பிறவா சகோதரி என்றார். சட்டமன்றத்திற்கு அழைத்துச் சென்று விதிமுறைகளை மீறி தன்னருகே அமரச்செய்தார். கும்பகோணம் மகாமக குளத்தில் தனக்கு நீராட்டச் செய்தார். கட்சியிலும், ஆட்சியிலும் தன் ஆலோசகர் என்பதை அனைவரும் அறியச் செய்தார். தன் நிழலாகவே இருந்தாலும் கட்சியிலோ, ஆட்சியிலோ பதவி எதுவும் தரவில்லை. ஆனால் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை குவிப்பதில் சசிகலாவையும், அவர் குடும்பத்தினரையும் பங்குதாரர்கள் ஆக்கினார்.

கட்சிக்காரர்களைப் பொறுத்தவரை அவர்கள் சந்தித்த எதேச்சதிகாரம் என்பது அம்மா-சின்னம்மா இருவரும் இணைந்து செய்த எதேச்சதிகாரம்தான். அதனால் ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் அவர்கள் விடுதலை உணர்வு பெற்று சசிகலாவை அப்புறப்படுத்த நினைத்திருந்தால் அது நியாயமானது. ஆனால், அவர்கள் அவரை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தார்கள். பின்னர் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தார்கள்.

அந்த நேரத்தில் பாரதீய ஜனதா கட்சி குறுக்கிட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை ச சிகலாவிற்கு எதிராக பேசச் சொன்னது. சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி சசிகலா சிறை சென்றார். பின்னர் முதல்வரான எடப்பாடி பழனிசாமியையும் பாஜக தன் வசப்படுத்தியது. சசிகலா மருமகன் தினகரனை தனிமைப்படுத்தியது. அவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துவங்கினார்.

இப்போது தண்டனைக் காலம் முடிந்து சசிகலா வெளியே வந்துவிட்டார். இப்போது ஒரு வினோதமான நிலை உருவாகியுள்ளது. ஒ.பன்னீர்செல்வத்திற்கோ, எடப்பாடி பழனிசாமிக்கோ எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிம்பங்களை விட்டால் வேறு அரசியல் பாரம்பர்யம் எதுவும் கிடையாது. அதிலும் குறிப்பாக அம்மா ஜெயலலிதா. உண்மையில் சொல்லப்போனால் அவர்களும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதைத் தவிர “அண்ணா” என்ற சொல்லுக்கோ, “திராவிடம்” என்ற சொல்லுக்கோ அவர்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது.

அந்த அம்மா ஜெயலலிதா என்ற பிம்பத்திற்கு சொந்தம் கொண்டாட முழு உரிமையும் உள்ளவர் சசிகலா. ஜெயலலிதா பிம்பத்திலிருந்து பிரித்தெடுத்து சசிகலாவை மட்டும் தாக்குவது கடினம். இப்போது பாஜக சசிகலாவையும் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறது பழனிசாமியிடம். மலைப்பாம்பு தன் இரையைச் சுற்றி வளைத்து நெருக்கி பின்னர் விழுங்குவது போல அ.இஅ.தி.மு.க-வை சுற்றி வளைத்துள்ளது பாஜக. அரசியல் உள்ளீடில்லாத ஒரு பிம்பங்களின் கட்சி அதை எதிர்த்து நிற்பது கடினம் என்றுதான் தோன்றுகிறது.

கமல்ஹாசன்: முளையிலே தெரியும் பயிர்

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய தனிநபர் வழிபாட்டுக் கலாசாரத்தினால் அரசியல் என்றாலே அதுதான் வழி என்ற எண்ணம் உருவாகிவிட்டதாகவே தோன்றுகிறது. ஒன்று ஜாதி மத அடையாள வாதம். இல்லாவிட்டால் தனி நபர் பிம்ப வழிபாடு. இவற்றைக் கடந்த ஒரு கட்சி அணி சேர்க்கையோ, வேர் மட்ட த்திலிருந்து கொள்கை, கோட்பாடுகளால் கட்டியெழுப்பப் படும் கட்சியோ உருவாகலாம் என்ற எண்ணமே யாருக்கும் தோன்றுவதில்லை. எந்த அளவு கோட்பாட்டு வறுமை இருந்தால் மக்கள் நீதி மய்யம் தன் நிரந்தர தலைவராக கமல்ஹாசனை தேர்ந்தெடுக்கும் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. எவ்வளவுதான், நல்லவர் வல்லவராக இருந்தாலும் மக்களாட்சியில் ஒரு அரசியல் கட்சி இப்படி முழுவதும் ஒரு தனி நபரை நிறுவன விதிமுறையாகவே முன்னிலைப்படுத்துவது தேவையா என்பதே கேள்வி. உலகெங்கும் மக்களாட்சி விழுமியங்கள் சந்திக்கும் நெருக்கடிகளையே இவையெல்லாம் சுட்டிக்காட்டுகின்றன என்றால் மிகையாகாது.

கட்டுரையாளர் குறிப்பு

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 15 பிப் 2021