பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிச் சென்ற குரங்குகள்: பதறவைத்த குழந்தையின் மரணம்!

வீட்டுக்குள் படுக்க வைத்திருந்த பிறந்து ஏழு நாட்களே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகளை வீட்டுக்குள் புகுந்து குரங்குகள் தூக்கி சென்றதில் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் நகர பகுதியில் உள்ள மேலவீதி கோட்டை அகழியைச் சேர்ந்த ராஜா (29) பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி புவனேஸ்வரி (26). இவர்களுக்குத் திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிற நிலையில், ஏற்கெனவே ஜீவிதா (5) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் புவனேஸ்வரிக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
புவனேஸ்வரி சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 13) மதியம் சுமார் 1.30 மணியளவில் இரண்டு குழந்தைகளுக்கும் பாலூட்டி, வீட்டின் நடுவே படுக்க வைத்து விட்டு வீட்டுக்கு வெளியே மற்ற வேலைகளை கவனித்து வந்துள்ளார் புவனேஸ்வரி.
அந்த நேரத்தில் வீட்டின் மேற்கூரையில் உள்ள ஓட்டை பிரித்து கொண்டு இரண்டு குரங்குகள் வீட்டுக்குள் இறங்கின. பின்னர் குழந்தைகள் படுத்திருந்ததை பார்த்த இரண்டு குரங்குகளும் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாகத் தூக்கி கொண்டு தாவி குதித்து ஓடின. இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் சப்தமிட்டனர். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாகவே இந்தப் பகுதியில் குரங்குகள் தொல்லை இருப்பதால் வழக்கம் போல் வீட்டுக்குள் இருந்த பொருள் எதையோ தூக்கி சென்று விட்டது என புவனேஸ்வரி நினைத்துள்ளார்.
ஆனால், வீட்டுக்குள் சென்ற புவனேஸ்வரி குழந்தைகள் காணாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பதறி துடித்து குழந்தைகளை குரங்கு தூக்கி சென்றதாகக் கதறியிருக்கிறார். மேலும் அங்கிருந்தவர்களும் பதைபதைப்புடன் கூச்சலிட்டபடியே குரங்குகளைத் தேடினர். அப்போது வீட்டின் மேற்கூரையில் ஒரு குரங்கு கையில் ஒரு குழந்தையை வைத்திருந்தது. குழந்தை அழுது கொண்டிருந்தது. பின்னர் புவனேஸ்வரி மற்றும் சிலர் குரங்கைப் பார்த்து கத்தினர். இதையடுத்து குழந்தையை அப்படியே போட்டுவிட்டு ஓடியது.
பின்னர் அந்தக் குழந்தையைப் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை. இது அவர்களுக்கு நிம்மதியைத் தந்தாலும் மற்றொரு குழந்தையைப் பரபரப்பும் தவிப்புமாக அப்பகுதி முழுவதும் தேடத் தொடங்கினர். பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள கோட்டை அகழி எனப்படும் குளத்து கரையில் மற்றொரு குழந்தையை விட்டு சென்றதைக் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்தக் குழந்தையை இராசா மிராசுதார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதை கேட்ட புவனேஸ்வரி அவரது கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக புவனேஸ்வரி, “எங்க ஏரியாவுல ஒரு வருடத்துக்கு மேலாக சுமார் 20 குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. அதை எங்களால தாங்க முடியலை. இதைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்க தெருக்காரங்க வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிங்க கிட்ட புகார் கொடுத்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிங்க அலட்சியத்தால் ஒரு பச்ச உசுரு பலியாகி விட்டது. ரெண்டு கண்ணைக் கொடுத்த ஆண்டவன் ஒரு கண்ணைப் பிடிங்கிட்டான். இத எப்படி நான் மறக்கப் போறேன். என் பவுனு முகம் அப்படியே நெஞ்சுக்குள்ளேயே இருக்கு” என அழத் தொடங்கினார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும்,பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.