மத்திய அரசின் இட ஒதுக்கீடு: தமிழக பல்கலைக் கழகங்களுக்கு நிர்பந்தமா?


மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் படிப்புகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுமாறு தமிழக பல்கலைக் கழகங்கள் மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகின்றனவா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டேஷனல் ஆகிய இரு படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கிடையாது என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் நுழைவுத்தேர்வு எழுதி இந்த படிப்புகளில் சேர காத்திருந்த மாணவிகள் சித்ரா மற்றும் குழலி ஆகியோர் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
அதில் தமிழக அரசின் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறைக்கு பதில் மத்திய அரசின் 49.9 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற நிர்ப்பந்திப்பதன் காரணமாகவே அந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கிடையாது என்று அறிவித்திருப்பதாகவும், அதனால்தான் அந்த படிப்பு நிறுத்தப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில், 'மத்திய அரசு நிதி உதவி செய்யும் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள வேறு சில பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளதாகவும் அண்ணா பல்கலை மட்டுமே மாணவர் சேர்க்கையை நிறுத்தி உள்ளதாகவும்' தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, பல பல்கலைக்கழகங்கள் புதிய படிப்புகளை உருவாக்கும் போது சுமார் 25 ஆண்டாக நடக்கும் படிப்பை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளில் மாநில இட ஒதுக்கீட்டை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றும்படி தமிழக பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்பந்திக்கபடுகிறதா என கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு தரப்பில் அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றும்படி எழுதப்பட்ட கடிதம் தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற குழப்பங்களுக்கு காரணம் என்று குற்றம் சாட்டிய நீதிபதி நிறுத்தப்பட்ட படிப்புகள் மூலம், முன்னதாக பயின்று எத்தனை நிபுணர்கள் உருவாகியிருக்கின்றனர் என ஆய்வு செய்து தெரிவிக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினார்.
அதுபோன்று எம்.டெக் மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாகத் தெளிவான விளக்கத்துடன் வரும்படி மத்திய அரசுக்கு அறிவுறுத்தி, இவ்வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழுவை எதிர் மனுதாரராகச் சேர்த்து உத்தரவிட்டார்.
மேற்குறிப்பிட்ட இரு படிப்புகளில் தலா 45 மாணவர்களை அனுமதிப்பதற்கான பேச்சுவார்த்தையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுடன் உடனடியாக மேற்கொள்ளும்படி அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையைப் பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்