மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

உலகின் பழமையான மொழி தமிழ்: பாரதியார் ஒளவையாரைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர்

உலகின் பழமையான மொழி தமிழ்: பாரதியார் ஒளவையாரைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர்

சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, உலகின் பழமையான மொழி தமிழ் என்று கூறியுள்ளார்.

இன்று (பிப்ரவரி 14) காலை 11 மணியளவில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை, சென்னை கடற்கரையிலிருந்து அத்திப்பட்டு வரையில் நான்காவது ரயில்வே தடம், மின் மயமாக்கப்பட்ட விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் வழித்தடத்தில் ரயில் சேவை ஆகியவற்றைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் சென்னை என தமிழில் பேசிய பிரதமர், சென்னை வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநகர் அறிவு மற்றும் படைப்புத் திறன் உடையது. சென்னையிலிருந்து முக்கிய கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்குகிறோம். கட்டமைப்புத் துறை திட்டங்கள், புதுமை, உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றின் அடையாளங்கள். இவை தமிழகத்தின் வளர்ச்சிக்கு மேலும் உதவிகரமாக இருக்கும் என்றார். 636கிமீ நீளம் கொண்ட கல்லணை கால்வாயை புனரமைக்கும் திட்டம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, ஔவையார் எழுதிய "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்" என்ற பாடலை மேற்கோள் காட்டினார்.

நீர் நிலைகளைத் தமிழக விவசாயிகள் சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். உணவு தானிய உற்பத்தியில் தமிழக விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர். வண்ணாரப்பேட்டை விம்கோநகர் மெட்ரோ ரயில் திட்டம் கொரோனா காலத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்றார். புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய அவர், இந்நாளை நம்மால் மறக்க முடியாது. பாதுகாப்புப் படைகள் குறித்துப் பெருமைப்படுவோம். அவர்களின் துணிச்சல் இந்த தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று குறிப்பிட்டார்.

உலகின் பழமையான மொழி தமிழ் என்று தெரிவித்த பிரதமர் மோடி, மகாகவி பாரதியார் எழுதிய, "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்" என்று பாடலை நினைவுகூர்ந்தார். இந்தியாவில் அமையவுள்ள இரண்டு பாதுகாப்புப் பெரு வழித்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் அமையவுள்ளது. அதற்கு ஏற்கனவே 8,100 கோடி ரூபாய் முதலீட்டு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரான அர்ஜுன் பீரங்கி மார்க் 1ஏ-வை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் பெருமை அடைகிறேன். தமிழகம் தற்போது பீரங்கியின் உற்பத்தியின் மையமாக இருப்பதை காண்கிறேன் என்றார்.

”இலங்கை தமிழர்கள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை எனக்கு உண்டு. இலங்கை தமிழர்கள் பிரச்சினை மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்க 50 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்ப்பட்டுள்ளது. மலையக தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை யாழ்பாணம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. யாழ்பாணத்துக்கும் மன்னாருக்கும் இடையே ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. இலங்கை தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினையை இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். தமிழர்கள், சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுக்கும். இலங்கையில் இந்திய மீனவர்கள் யாரும் இல்லை. நம் மீனவர்களின் உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்கும். 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள படகுகளை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று இறுதியாகத் தனது உரையில் பிரதமர் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 14 பிப் 2021