மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

அவதூறு தகவல்கள்: ட்விட்டர் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

அவதூறு தகவல்கள்: ட்விட்டர் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறான மற்றும் ஆபாசமான தகவல்கள், பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது சம்பந்தமாக ட்விட்டர் நிறுவனமும், மத்திய அரசும் விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், லிங்டு இன் போன்ற சமூக வலைதளங்கள் முன்னணி இடத்தில் இருக்கின்றன. இவற்றின் மூலம் பொதுமக்கள் தங்கள் தகவல்களையும், கருத்துகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் மூலமாக இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைச் சிலர் பரப்பி வந்தனர். காலிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானும் இதன் பின்னணியில் இருந்தது. இதுபோன்ற தகவல்களைப் பரப்பிய 1,178 கணக்குகளை முடக்கும்படி ட்விட்டர் தளத்துக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.

ஆனால், முழுமையாக அகற்றாமல் 583 கணக்குகளை மட்டும் அகற்றியது. தகவல் தொடர்பு சட்டப்படி சமூக வலைதளங்கள் விதி மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இடம் உள்ளது. எனவே, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்தது. ஆனாலும் அந்த நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக இருக்கின்றன. வருங்காலத்தில் அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தனி ஒழுங்கு முறை அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும். அதற்கு தலைமை தீர்வு அதிகாரி நியமிக்கப்படுவார். மேலும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்படும். அதில் செயலாளர் மட்டத்தில் அந்தஸ்து கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். புகார்கள் இருந்தால் இவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். செயலாளர் மட்ட அதிகாரி 36 மணி நேரத்தில் நடவடிக்கை எடுப்பார். அதன்பிறகு இந்த விவகாரம் கண்காணிப்பு குழுவுக்குக் கொண்டு செல்லப்படும். அந்தக் குழு விசாரணை நடத்தி இறுதி முடிவை எடுக்கும். இதற்காக புதிய விதிகளை மத்திய அரசு உருவாக்க உள்ளது. அதன் மூலமாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு செய்திகள் வெளிவருவது தொடர்பாக பாஜக நிர்வாகி வினித் கோயங்கா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.

அதில், ‘ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக அவதூறான மற்றும் ஆபாசமான தகவல்கள், பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய அமைப்புகள், தொழில் நுட்பங்கள் இல்லை. எனவே அது சம்பந்தமாக அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் சமூக வலைதள நிறுவனங்களுக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்டே, தலைமையிலான பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இது சம்பந்தமாக ட்விட்டர் நிறுவனமும், மத்திய அரசும் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

சனி 13 பிப் 2021