மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர்!

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர்!

முதல் பெண்கள் - 3 கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் முதல் பெண் தலைமை அதிகாரி டாக்டர் சாரதா மேனன்

பகுதி 3

குணமடைந்த நோயாளி ஒவ்வொருவரும் மனநல மருத்துவமனையிலிருந்து வெளியே செல்ல ஏதோ ஒரு வழியை ஏற்படுத்த முயன்றார் சாரதா மேனன்.

“ஒவ்வொரு செக்‌ஷனிலும் சிறப்பாக பணியாற்றியவர்களை தேர்ந்தெடுத்து தினமும் தொழில் பயிற்சி மையத்துக்கு வரச்சொன்னேன். அவர்களுக்குள் உரையாடலைத் தொடக்க முயன்றோம். அவர்கள் எங்கே அமர வேண்டும், அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று எப்படி அடுத்தவரிடம் பேச்சைத் தொடங்க வேண்டும் என்று சொல்லித்தந்தேன்.

அவர்களுக்குள் தகவல் தொடர்பை, ஓர் அந்நியோன்யத்தை உணரச்செய்தேன். அவர்களுக்கு பேப்பர் கவர் செய்ய கற்றுத் தந்தோம். அவர்களில் ஒருவரையே அனுப்பி சின்னக் கடைகளில் ஆர்டர் எடுத்து வரப் பயிற்சி தந்தோம். ஆர்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைக்கத் தொடங்கின. சைக்கியாட்ரிஸ்ட் நண்பர் ஒருவரும் எங்களுடன் துணை நின்று அவர்களுக்கு பேப்பர் கட்டிங் மிஷின் ஒன்றை வாங்கித் தந்தார். பேப்பர் கவர், டிடர்ஜென்ட், பினாயில் என்று செய்யத் தொடங்கினார்கள். செய்யும் பணிக்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஊதியமும் கொடுத்தோம். அவர்களது வங்கிக் கணக்குகளில் ஊதியம் வரவு வைக்கப்பட்டது.

நாவல் பேக்கர்ஸ் நிறுவனம் நோயாளிகளுக்கு பிரெட் செய்ய சொல்லித்தர முன்வந்தார்கள். எங்கள் மருத்துவமனைக்கான பிரெட்டை நாங்களே செய்யத் தொடங்கினோம். அக்கம்பக்கத்து மருத்துவமனைகளில் விற்பனையும் செய்யத் தொடங்கினோம். ஒப்பந்தத்தின்பேரில் ரொட்டி வாங்குவதாக அறிவிக்கும் மருத்துவமனைகளில் டீன்களிடம் நானே நேரில் சென்று பேசினேன். ‘எங்கள் விற்பனை விலை மற்றவர்களைப் போல அல்லாமல் சற்றே கூடுதலாக ஒருவேளை இருக்கலாம். எங்கள் மருத்துவமனையில் அதைச் செய்பவர்கள் மன நோயாளிகளாக இருந்து ஓரளவுக்கு குணமடைந்திருப்பவர்கள். அதை மனதில்கொண்டு எங்கள் கொட்டேஷனை கருணையுடன் பாருங்கள்’ என்று வேண்டுகோள் வைத்தேன்.

ஒன்றிரண்டு மருத்துவமனைகளுக்கு பிரெட் விநியோகம் செய்யும் வேலை எங்களுக்குக் கிடைத்தது. ஹாட் பிரெட்ஸ் மகாதேவனை எங்கள் பணிமனைக்கு அழைத்தோம். பிரெட் தயாரிப்பில், மார்க்கெட்டிங்கில் இன்னும் என்னென்ன மாறுதல்கள் செய்யலாம் என்று எங்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்தத் தொழில் பயிற்சி மையம் அவர்களுக்கு வேலை தருவதோடு மட்டுமல்லாமல், அதன் மூலம் அவர்கள் சொந்தமாக வருமானம் ஈட்டவும், மருத்துவமனைக்கும் பணம் கிடைக்கவும் வழிசெய்தது” என்கிறார்.

பெண்களை அதிகம் பாதிக்கும் மனநோய்களைப் பற்றிய கேள்விக்குத் தெளிவாகவே பதில் சொல்கிறார்... “சராசரி இந்தியப் பெண் பிறப்பு, படிப்பு, திருமணம், குழந்தை என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றுகிறாள். இதில் மனநோய் சிகிச்சை பெற்ற பெண்களின் நிலையை நினைத்துப்பாருங்கள். சிகிச்சை எடுத்ததாக வெளியே சொன்னாலும் சிக்கல், சொல்லவில்லை என்றாலும் மறைத்துவிட்டீர்கள் என்று பிரச்னை. என்ன செய்வார்கள், சொல்லுங்கள். குணமானபின் வெளியே அவர்களைத் தனியே அனுப்பினாலும் பாதுகாப்பு இல்லை, ஆபத்து. அவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் சமூகம் இது.

சிறு வயதில் மன நோய் பாதிப்பு இருந்தால் அவர்களால் பெரிதாகப் படித்திருக்க முடியாது. படித்து வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் என்றால் அவர்களால் இப்போதைய சூழலில் பொருந்தி பணியாற்ற முடியாது. வேலை போய்விடும். திருமணம் செய்து கொண்டாலும் கணவர்கள் அவர்களை சரியாக நடத்துவதில்லை. எப்போதுமே நான் சொல்வதுதான். பெண்கள் Doubly Disadvantaged. அவர்களது பாலினமும், அவர்களது மனநோயும் அவர்களுக்கு இரட்டை சிக்கலை ஏற்படுத்துகிறது. நார்மலான பெண்கள் முழு குடும்பத்தை பராமரிக்கிறார்கள். இந்தப் பெண்களால் அதுவும் முடியாது. அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோரும் இந்தப் பெண்களைப் பற்றியே முணுமுணுப்பதுண்டு. இந்த சிக்கலால் அடிக்கடி வீடு மாறுவார்கள்; இடம் மாறுவார்கள். மனநோய்க்குத் தீர்வுண்டு; சமூக நோய்க்குத் தீர்வில்லை.

சோஷியலைசிங்... தனிமனிதத் தொடர்பு மனிதர்களுக்கு மிக முக்கியம்.

அதனால்தான் பள்ளிகளில் குழந்தைகளைக் குழுவாக விளையாடச் செய்கிறோம். உடன் விளையாடுபவர்களிடம் உரையாட வேண்டும், வெற்றியைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், தோல்வியையும் அதேபோல பார்க்கப் பழக்குகிறோம். குறைபாடுள்ள குழந்தைகள் இப்படி யாரிடமும் பழகுவதில்லை. தங்களுக்குள் சுருங்கிக்கொள்கிறார்கள். இளம் வயதிலேயே இப்படி குழந்தைகள் அறைகளுக்குள் முடங்கிக்கிடப்பதைப் பார்க்கிறோம். குழந்தை படிக்கிறது என்று அம்மாக்கள் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், குழந்தை தனிமையில் எந்த சமூகத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறது. எல்லாக் குடும்பங்களும் இரவு உணவுக்குத்தான் பெரும்பாலும் ஒன்றுகூடுகின்றன. குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும் என்று நானும் சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். சில நேரங்களில் நன்றாகப் படித்து வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் பிள்ளைகள்கூட சரியாக பேச, பழக வழியின்றி தனிமையில் வாடுகிறார்கள். குழந்தைகளுக்குப் பேச, பழக நல்ல சூழலை குடும்பம் அமைத்துத் தர வேண்டும்.

ஒருகட்டத்தில் நோயாளிகளுக்கு தொழில் கற்றுத் தருதல், மனநலம் பேணுதல் என்பதைத் தாண்டி அவர்கள் குணமடைந்து வெளியேறினால் சரியான வாழ்க்கை சூழலை அவர்களுக்கு அமைத்துத் தர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். சுதந்திரமாக சம்பாதித்து தங்கள் காலில் அவர்கள் நிற்க வேண்டும் என்று விரும்பினேன். முதலில் அவர்களை விடுதியில் தங்கவைக்கிறோம். வெளியே வேலைக்குச் சென்று பாதுகாப்பாகத் திரும்பிவிடுகிறார்கள் என்ற நம்பிக்கை வந்தபின், இந்த ‘மேனேஜபிலிட்டி’ நிலையைத் தாண்டி யாரும் சிந்திப்பதில்லை. அவர்கள் உணவை அவர்களே சாப்பிடுவது, தங்கள் அன்றாட வேலைகளைச் செய்துகொள்வது, அமைதியாக இருப்பது என்பதைத் தாண்டி அவர்கள் என்ன செய்கிறார்கள், அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று யாரும் சிந்திப்பதில்லை. அதைத் தான் வீடு செய்துவிடுமே... அது சரியல்ல என்பதை நான் சொல்கிறேன். நாம் உயிர்களை அப்படித்தான் வீணடித்துக் கொண்டிருக்கிறோம். அப்படிச் செய்யாமல் அவர்கள் வாழ்க்கைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

பத்து வேலைகளை சாதாரண மனிதன் ஒருவன் செய்தால், அதில் எட்டை செய்பவனும் நன்றாக வாழ வேண்டும், ஒரே ஒரு வேலை செய்யத் தெரிந்தவனும் இங்கு வாழ வேண்டும். அந்த எண்ணத்தில்தான் மூன்று பேர் சேர்ந்து ஸ்கார்ஃப் (Schizophrenia Research Foundation) அமைப்பைத் தொடங்கினோம். அப்போது கையில் எங்களிடம் பணமோ, இடமோ எதுவும் இல்லை. எங்களோடு இணைந்து கொள்பவர்களிடம் 1,000 ரூபாய் சந்தா மட்டும் வாங்கினோம். என்னுடைய வீட்டில் ஒரு சிறு அறையில்தான் இந்த அமைப்பைத் தொடங்கினோம். அது இரண்டு பெட்ரூம் அப்பார்ட்மென்டாக விரிவடைந்தது. தனியே வெளிநோயாளிகளைப் பார்க்க கிளினிக் ஒன்றுக்கு இடம் ஒதுக்கினோம். பின்னர் தெரிந்த குடும்பங்கள், குணமடைந்தவர்களின் குடும்பங்கள், நலம் விரும்பிகள் என்று நிதி திரட்டத் தொடங்கினோம். இடம் வாங்கி, நான்கு இரண்டு பெட்ரூம் பிளாட்கள் கொண்ட அப்பார்ட்மென்ட் ஒன்றைக் கட்டினோம்.

வொர்க் சென்டர், கேர் சென்டர் அங்கே அமைத்தோம். அதன்பின் ‘ஆஃப்டர் கேர் ஹோம்கள்’ அமைத்தோம். செல்ல இடமின்றி தவித்த குணமான ஓரிருவருக்கு தங்க இடமின்றி போக, நண்பர் ஒருவரின் பழைய வீட்டை வாடகைக்கு எடுத்தோம்.

வீட்டைத் தந்ததோடு நில்லாமல் அன்றாட இல்லப் பணிகளையும் அதன் உரிமையாளர்களான நண்பர்களே பார்த்துக் கொண்டார்கள். என்னை அதிகம் எதிர்பார்க்கவில்லை. குணமானபின் போக இடமில்லாத ஆண்களையும் பெண்களையும் அங்கே தங்கவைத்தோம். பெண்கள் வீட்டு வேலையும், ஆண்கள் தோட்ட வேலை உள்ளிட்ட வெளிவேலைகளையும் செய்யட்டும் என்று சொன்னேன். அங்கு தங்கியிருந்தவர்களில் ஒருவரது உறவினர் கலர் சாக்பீஸ்கள் செய்து பள்ளிகள், கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். அவர் ஹோமில் தங்கி இருந்தவர்களுக்கு சாக்பீஸ் செய்ய கற்றுத் தந்தார். அப்படி ஒவ்வொருவரும் தாங்களே முன்வந்து இவர்களுக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தந்தார்கள். இந்த ஹோம்களுக்குச் சென்றவர்கள் சீக்கிரம் தங்களுக்கான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி நன்றாக இருப்பதைப் பார்த்தேன்” என்று சொல்கிறார்.

“ஊடகங்கள் மன நோயாளிகளை வெளிப்படுத்தும் முறை மாறியிருக்கிறதா, இல்லையென்றால் அதில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும்?” என்ற கேள்விக்கு, “சில நேரங்களில் சரியாக இருக்கிறது, சில நேரங்களில் தவறான கருத்துகளைச் சொல்கிறார்கள்” என்கிறார்.

“நெகட்டிவ் கருத்துகளை, குறிப்பாக அமைப்புகள் பற்றி பேசும்போது விவரம் அறிந்து கொள்ளாமல் தவறாகச் செய்தி பரப்புகிறார்கள். வரும் நோயாளிகள் எல்லோரும் குணமடைந்து வெளியே போக முடியாதே. அது மருத்துவர்கள் கையிலும் இல்லை.

இதைப் பற்றி பேசும் போது ஊடகங்கள் இன்னும் பொறுப்புடன் செய்தி வெளியிட வேண்டும். பலருக்கு மனநோய் என்றால் என்ன என்றே தெரியாத நிலைதான் உள்ளது. நான் அவர்களைக் குறை சொல்லவில்லை; அவர்களுக்கும் கொஞ்சம் கிளாமர் தேவைப்படுகிறது” என்று சொல்கிறார். “ஓய்வுபெற்ற பிறகும் இத்தனை ஆண்டுகள் ஏன் சென்னையிலேயே தங்கிவிட்டீர்கள்?” என்று கேட்டால், “நான் வளர்ந்தது, வாழ்ந்தது முழுக்க முழுக்க சென்னையில்தானே... நான் வசிக்காத ஒரு ஊருக்கு நான் எப்படி போய் வாழ்வது...” என்று கேட்கிறார். “கேரளா வெகேஷனுக்கு செல்லும் ஊர்தான். நான் பிறந்த ஊர். ஆனால், நான் வாழ்ந்த, வாழும் ஊர் சென்னை” என்கிறார்.

“சென்னைக்கும் கேரளாவுக்கும் பெரும் வேறுபாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. தென்னிந்தியா - ஆந்திரா, கேரளா, தமிழகம் எல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒன்றுதான்.

திருவேற்காட்டில் பவிஷ்ய பவன் ஆஃப்டர் கேர் ஹோமில் ஆரம்பக்கட்ட மனநோய் சிகிச்சை பெறும் பெண்கள், முதியோர் தங்கியிருக்கிறார்கள். ஓரளவுக்கு சிகிச்சை பலனளித்து நலம் பெற்றால், வீடுகளுக்கு அவர்களைத் திருப்பியனுப்புகிறோம். அப்படிச் செல்பவர்களை யாரும் வீடுகளில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்குத் தொழில் பயிற்சி தந்து நாங்களே எதாவது வேலையில் சேர்த்துவிடுகிறோம்” என்றும் சொல்கிறார்.

சிறைத்துறை சீர்திருத்த ஆலோசனைக் குழுவில் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி சொல்லும்போது ஜஸ்டிஸ் முல்லாவுடன் பணியாற்றியதை நினைவுகூர்கிறார். அந்தமான், மும்பை, சென்னை, கொல்கத்தா, ஆந்திரா என இந்தியாவின் பல்வேறு சிறைகளை நேரில் ஆய்வு செய்ததைச் சொல்கிறார்.

“மத்திய அரசின் சமூக மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்களும் எங்களோடு வந்தார்கள். அங்கிருந்த சிக்கல்களைப் பதிவு செய்து மாற்றங்கள் பரிந்துரைத்தோம்” என்கிறார்.

வாழ்க்கையின் ‘பெஸ்ட் மொமென்ட்’ என்ன என்ற கேள்விக்கு “பத்மவிருது வாங்கியபோது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். வாழ்க்கையில் நான் செய்த பணிகள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதியதால் அந்த மகிழ்ச்சி. மோசமான அனுபவங்கள் என்றால் என் அன்றாடப் பணிகள் முடக்கப்படும்போதெல்லாம் சங்கடத்தை உணர்கிறேன். மருத்துவமனையில் சமையற்காரர்கள் மொத்தமாக வேலைநிறுத்தம் செய்தால் சிக்கல்தான். அது என்னை மட்டும் பாதிக்காது. அங்குள்ள அனைவரையும் பாதிக்கும் இல்லையா?” என்று வினவுகிறார்.

“மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கான பதிலை மருத்துவர்களுக்கே சொல்கிறார்.

“நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேறலாம், படிக்கலாம், தொழில்நுட்ப முன்னேற்றம் பெறலாம். ஆனால், எல்லாவற்றையும்விட நோயாளி முக்கியம் என்பதை உணருங்கள். புத்தகங்கள் எப்போதும் உங்களுக்குக் கைகொடுக்காது. உங்கள் முதல் நூல் உங்கள் நோயாளி. உங்கள் முதல் லெக்சர் உங்கள் நோயாளிதான்.

அவரை எப்போதும் மதியுங்கள். அவரைத் தாண்டி எதுவுமில்லை. ஒவ்வொரு நோயாளியையும் அன்புடன் அணுகுங்கள். அவர்களிடம் கனிவைக் காட்டுங்கள். மருத்துவருக்கும் நோயாளிக்குமிடையே நல்லுறவைத் தொடருங்கள். முகம் சுளிக்காதீர்கள், கடுமையைக் காட்டாதீர்கள். ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளாததால்தான் இன்று நம்மிடையே இத்தனை பிரச்சினைகள். பொறுமையாக ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ள முயலுங்கள்” என்று சொல்லி முடிக்கிறார். 97 வயதிலும் சமூகத்துக்கான தன் பங்களிப்பை எந்த கைமாறும் எதிர்பாராமல் செய்து கொண்டிருக்கும் முதல் பெண்ணுடன் உரையாடிய மகிழ்வில் நன்றி சொல்லி விடை பெற்றேன்.

முற்றும்

கட்டுரையாளர் குறிப்பு: நிவேதிதா லூயிஸ்

சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத்தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும்போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொலிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவைத் தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

பகுதி -2 ..இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர்!

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

சனி 13 பிப் 2021