மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

வடசென்னை: நிலத்தடி நீரில் உப்பு அதிகரிப்பு!

வடசென்னை: நிலத்தடி நீரில் உப்பு அதிகரிப்பு!

வடசென்னை கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இந்தப் பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

ஆரணியாறு - கொசஸ்தலையாறு ஓரத்தில் அமைந்துள்ள பொன்னேரி, பஞ்செட்டி, மீஞ்சூர் கடலோரப் பகுதியில் நிலத்தடி நீரில் கடல்நீர் பாதிப்பு மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடல்நீர் பரவல் காரணமாக இங்கு நிலத்தடி நீரில் உப்புதன்மை அதிகமாகி உள்ளது.

1969ஆம் ஆண்டு அத்திப்பட்டு அருகே கடற்கரையில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்துக்கு உள் நிலத்தில் கடல்நீரின் பரவல் இருந்தது. இதனால் அங்கு நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்தது.

2019ஆம் ஆண்டு சுமார் 18 கிலோமீட்டர் தூரம் உள் நிலத்தில் கடல்நீரின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதனால் வடசென்னை கடலோரப் பகுதிகளில் நீண்ட தூரம் நிலத்தடி நீரில் உப்பு தன்மை அதிகமாகி இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகமும், ஜெர்மன் ஆய்வு நிறுவனமும் சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வடசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டக் கடலோரப் பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை 10 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு ஒரு லிட்டர் தண்ணீரில் 2,000 மில்லிகிராம் உப்புத்தன்மை இருந்தது. தற்போது இது 8,000 மில்லிகிராமாக அதிகரித்துள்ளது. காட்டூர், மவுத்தான்பேடு, செங்கனிமேடு பகுதியில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

1988இல் நடந்த ஆய்வுடன் ஒப்பிடும்போது கடல் அருகில் உள்ள சில பகுதிகளில் குளோரைடு அளவு 200 மில்லிகிராமில் இருந்து 7,000 மில்லிகிராமாக அதிகரித்துள்ளது. அருகிலுள்ள ஏரிகளில் மழைநீர் சேமிக்கப்பட்டதால் 2015-க்குப் பிறகு பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் நிலத்தடி நீர் மேம்பட்டது.

எனவே, உப்புத்தன்மையை குறைக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் சேமிப்பு நீர்நிலைகளை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (BIS - Bearau of Indian Standards) மற்றும் உலக நல்வாழ்வு அமைப்பு (WHO) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி குடிநீர், விவசாயம், தொழிற்சாலைகள், பண்ணைகள் போன்றவற்றுக்குத் தனிப்பட்ட முறையில் தண்ணீரின் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குடிநீருக்கு 500 பி.பி.எம் என்ற அளவு வரையறையாக அமைந்துள்ளது. அதாவது, அரசால் தர நிர்ணயம் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகமான மினரல்கள் தண்ணீரில் இருந்தால் அது கடினநீர் ஆகும். குறிப்பாக, கால்சியம், மெக்னீசியம் ஆகியவை அதிகமாக கலந்திருந்தால் அவை மற்ற தாது உப்புகளுடன் சேர்ந்து நீரின் தன்மையை மேலும் கடினமாக மாற்றுகிறது.

மேற்கண்ட நிலையில் அளவுக்கு அதிகமாக நீரில் பிற உப்புகள் சேரும்போது ஆக்சிஜன் அளவு படிப்படியாக குறைந்து, அன்ரோபிக் மற்றும் ஏரோபிக் (Anaerobic And Aerobic) தண்ணீராக நீர் மூலக்கூறுகள் மாறி அமைந்து விடுகின்றன. அத்துடன் ஆக்சிஜன் அளவும் குறைந்து விடும் நிலையில் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம்.

இ–கோலி மற்றும் கோலிஃபோம் (E-coli and Coliform) பாக்டீரியாக்கள், பாராசைட் (Perasite) போன்ற நுண்ணியிரிகள் அதிகரித்து விடுவதாலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாசடைந்ததாக நிலத்தடி நீர் மாறிவிடுகிறது. அதன் அடிப்படையில் சென்னை போன்ற பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீரை தக்க முறையில் வடிகட்டப்பட்டு பயன்படுத்துவதை மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

வெள்ளி 12 பிப் 2021