மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர்!

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர்!

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் முதல் பெண் தலைமை அதிகாரி டாக்டர் சாரதா மேனன்

பகுதி 2

“மருத்துவம் படிக்க உங்கள் வீட்டில் வரவேற்பு இல்லையே... எப்படி அவர்களை கன்வின்ஸ் செய்தீர்கள்...” என்று கேட்டால் சிரிக்கிறார்.

“I never convinced them. I just did it” என்று சொல்கிறார்... “சீனியர் கேம்பிரிட்ஜ் முடித்ததும், மாநிலக் கல்லூரியில் விலங்கியல் ஹானர்ஸ் படிப்பில் என்னை சேர்க்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். அங்கு அட்மிஷனும் வாங்கிவிட்டார். நான் போக முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் வேறு திட்டங்கள் வைத்திருந்தேன்.

1951ஆம் ஆண்டு மருத்துவப் பணிகளில் சேர்ந்தேன். 1978ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்து, எம்.டி பொது மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். அதன்பின் மனநோய் மருத்துவம் படிக்கும் ஆசை வந்தது. மனநோய் மருத்துவப் படிப்புக்காக அரசுப் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு இங்கிலாந்து சென்றேன். இரண்டே மாதங்களில் அப்பாவின் உடல்நலம் குன்ற, நான் திரும்பும் சூழல் ஏற்பட்டது. நாடு திரும்பி மீண்டும் அரசுப் பணியில் சேர்ந்தேன்.

பெங்களூரில் தொடங்கப்பட்ட அனைத்திந்திய மனநல நிறுவனத்தில் (All India Institute of Mental Health) டெபுடேஷன் பயிற்சி பெறும் வாய்ப்பை தமிழக அரசு அறிவித்தது. மனநல மருத்துவத்தில் ஈராண்டு பட்டயப்படிப்பு படிக்கும் வாய்ப்பு அது. அங்கு 1957 முதல் 1959 வரை மனநல மருத்துவம் கற்று டிப்ளமோ பெற்றேன்.”

“பெங்களூரு கல்லூரியில் மனநல மருத்துவம் படித்தபோது நாட்டின் முதல் பெண் சைக்கியாட்ரிஸ்ட் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா?” என்று கேட்டால், “அப்படி எதுவும் இல்லை” என்று பதில் சொல்கிறார்.

“நிம்ஹன்ஸ் பெங்களூரில் முன்பே தொடங்கிவிட்டது. அங்கே படிக்கும் முதல் பெண் நான் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. சொல்லப்போனால் எனக்கு எதுவுமே தெரியாது. நான் மூன்றாவது பேட்சில் படித்தேன். முதல் பேட்சில் ஒரே ஒரு பெண் படித்தார். அவரும் படிப்பை முடித்த உடன் நோவா ஸ்கோஷியாவுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டார். அதற்குப்பின் வேறு பெண்கள் அங்கு படித்திருக்கவில்லை. நான் படிக்கும்போது நாட்டில் முதல் பெண் என்றெல்லாம் எதுவும் யோசிக்கவில்லை. எனக்கு அந்தப் படிப்பின் மேல் ஆர்வம் இருந்தது. நான் அதைக் கற்றுக்கொண்டேன். அவ்வளவுதான்.

இறுதியாண்டு மருத்துவப் படிப்பு படிக்கும்போது எங்களைப் பணி நிமித்தம் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். அங்கே மனநலம் குன்றிய பலரைப் பார்த்தேன். என்னவெல்லாமோ செய்துகொண்டு, அழுக்கான ஆடைகளுடன் கத்திக்கொண்டு, தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த மனநோயாளிகளைப் பார்த்தேன். அவர்களுக்குக் கிடைத்த ஒரே மருந்து ‘செடேஷன்’ மயக்க மருந்துதான். அப்போது வேறு மருத்துவமும் கிடையாது. மருந்துகள் கண்டுபிடிக்கப்படவும் இல்லை. உணவு உண்ணவைப்பது முதல் அவர்களை கவனித்துக்கொள்வது எல்லாமே சிக்கல்தான்.

நான் புதிதாக எதுவும் அவர்களுக்காக எதுவும் கண்டுபிடிக்கப்போவது இல்லை. அவர்களது வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றம் நம்மால் வர வேண்டும் என்று மட்டும் நினைத்தேன். அப்போது நான் மருத்துவப் படிப்பைக்கூட முடித்திருக்கவில்லை. மனநோய் மருத்துவம் படிக்கும் என் ஆசை என் தம்பிக்குத் தெரியவர, அவர் இங்கிலாந்திலிருந்த அவர் நண்பரிடம் விசாரித்திருக்கிறார். ‘எம்.டி பொது மருத்துவம் படித்தபின் வேண்டுமானால் சைக்கியாட்ரி படிக்கட்டும்’ என்று அவர் அறிவுரை சொன்னதால்தான் எம்.டி பொது மருத்துவம் பயின்று, பின்னர் மனநலத்தில் பட்டயப் படிப்பு முடித்தேன்.

படிப்பை முடித்து சென்னை திரும்பியதும், கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனையில் நியமிக்கப்பட்டேன். அங்கேயே சூப்பிரென்டெண்ட்டாக 1961ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்றேன். 1978 வரை அதே பதவியில் அங்கேயே நீடித்தேன்” என்று சொல்கிறார்; மனநோய் மருத்துவமனையில் அவரது முதல் அனுபவங்களைப் பகிர்கிறார்...

“பெண்கள் பிரிவில்தான் முதலில் நான் பணியமர்த்தப்பட்டேன். 150 நோயாளிகள் அங்கே இருந்தார்கள். புதிய மருந்து அப்போதுதான் வந்திருந்தது. நிறைய நோயாளிகளுக்கு அது பலன் தந்தது. அவர்களை அமைதியாக வைத்திருக்க உதவியது. எனக்கு உதவியாக சில பணியாளர்களும் ஒரு செவிலியரும் இருந்தார்கள். வெறுமனே மருந்துகள் கொடுத்து அமைதியாக வைத்திருப்பது மட்டுமே நோயாளிகளுக்கு உதவாது என்று நினைத்தேன்.

ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு கேஸ் ஷீட் இருக்கும். அவற்றைப் பொறுமையாக வாசித்துப் புரிதலை உருவாக்கிக்கொண்டேன். கேஸ் ஷீட்களில் என் கருத்தைப் பதிவு செய்தேன். இப்படி என்ன நோய், அதற்கு என்ன மாதிரி சிகிச்சை தந்தோம் என ஒரு நாளைக்கு 15 பேரின் கேஸ் ஷீட்டைப் பொறுமையாக உட்கார்ந்து ஆய்வு செய்தேன். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அந்த நேரம் அழகாக ஆடை அணியும், தெளிவாகப் பேசும் ஒரு பெண் நோயாளியைப் பார்த்தேன். எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவார். அவரிடம், ‘நீ ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்?’ என்று கேட்டேன். ‘என் பிள்ளைகள் என்னைப் பார்க்க இங்கே வருவார்கள். தேவைப்படுவதை வாங்கித் தருவார்கள். எனக்கு இங்கே பிடித்திருக்கிறது’ என்று மட்டும் பதில் சொன்னார். நர்ஸிடம் சொல்லி அந்தக் குடும்பத்தினரை வந்து என்னைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினேன். அவர்களும் வந்தார்கள்.

‘குணமாகியும் அவரை ஏன் வீட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை?’ என்று கேட்டேன். ‘எங்கள் அம்மாவுக்கு எதுவும் நினைவில்லை’ என்று அவர்கள் சொன்னார்கள். `அப்படி என்னதான் அவருக்கு நினைவில்லை, நன்றாகத்தானே இருக்கிறார், பேசுகிறார்’ என்று கேட்டேன். ‘என் தங்கைக்கு திருமணம் ஆனது, எங்கள் குடும்பத்தில் நடந்த விசேஷங்கள் என்று பல விஷயங்கள் அவருக்கு நினைவில்லை’ என்று பதில் சொன்னார்கள்.

‘நீங்கள் சொல்லும் விசேஷங்களின்போது உங்கள் அம்மா எங்கே இருந்தார்? மருத்துவமனையில் இருந்தவரை நீங்கள் அழைத்துச் சென்றீர்களா... அவருக்கு அழைப்பு இருந்ததா?’ என்ற என் கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. பார்த்திராத குடும்ப நிகழ்ச்சிகளை அந்தத் தாய் எப்படி நினைவில் வைத்திருக்க முடியும், அதைக் கேட்கும் பிள்ளைகளின் பேச்சு நியாயமானது தானா...

‘அம்மா முழுக்க சரியாகிவிட்டார், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொல்லி அவர்களுடன் அந்தப் பெண்ணை அனுப்பினேன். அந்தப் பெண் என்னை இரவு விருந்துக்கு ஒரு நாள் அழைத்தார். அவரே அன்று எல்லா உணவு வகைகளையும் சமைத்திருந்தார். எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அன்று முதல் நோயாளிகளின் அன்றாட நிலையை செவிலியர், பணியாளர்களிடம் விசாரித்துக்கொண்டே இருப்பேன். ஓரளவுக்கு மனநலம் சரியாக இருப்பதை உணர்ந்தால், அவர்கள் வீடு திரும்ப ஏற்பாடு செய்துவிடுவேன். முழு குணமும் கிடைக்கும் வரை காத்திராமல், தங்களைத்தானே அவர்கள் பேணும் நிலைக்கு வந்தாலே வீட்டுக்கு அனுப்பச் சொல்லிவிடுவேன். வீட்டு சூழல் அவர்களுக்கு இன்னும் நல்ல மாற்றத்தைத் தரும். அவர்களுக்கான சிறந்த இடம் வீடு தான்.

“மனநலம் குறித்து வெளிப்படையாக இன்றைய சூழலில் பேசுவது சாத்தியம் தானா?” என்ற அடுத்த கேள்வியை முன்வைத்தேன்.

“முன்பு போல இல்லை என்றாலும் இன்றும் மனநோய் பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் சிக்கல்கள் உள்ளன. மனநோய் மருத்துவமனையில் ‘பேஷன்ட்ஸ் அட்மிஷன் கமிட்டி’ என்ற குழு ஒன்று உண்டு. மனநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை முதலில் சந்தித்து பேசி, அவரைப் பற்றிய ஆரம்பக்கட்ட கணிப்பை இவர்கள் செய்வார்கள். நோயாளியை சிகிச்சை முடிந்து நலமடைந்து வீட்டுக்கு அனுப்பும்போது இதே கமிட்டி அவர்களை ஆய்வு செய்யும். நலமாக இருக்கிறார் என்று கமிட்டிக்கு நம்பிக்கை வந்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பும்.

நோயாளிகளின் உறவினர்களுக்குத் தகவல் தருவோம். அவர்கள் யாரும் இவர்களை அழைத்துச் செல்ல வரவில்லை என்றால் அவர்களை மருத்துவமனையிலேயே தங்கவைப்போம். நான் அந்த கமிட்டியில் இருந்தபோது 20 வயது முதலான பல இளம்பெண்கள் குணமடைந்தும் அவர்களை அழைத்துச்செல்ல குடும்பம் தயாராக இல்லாததைக் கண்டேன். மருத்துவமனையிலேயே வாழ்நாள் முழுக்க இந்த இளம் பெண்களை வைத்துக்கொள்வது எவ்வளவு பெரிய கொடூரம்... ஒய்.டபிள்யூ.சி.ஏ அமைப்பை நானாகவே தொடர்பு கொண்டேன்.

‘இங்கிருந்து 10 குணமான பெண் நோயாளிகளை நீங்கள் உங்கள் இல்லத்தில் ஏதாவது பணிக்கு சேர்த்துக்கொள்ளுங்கள். உண்ண உணவும், தங்க இடமும் மட்டும் கொடுங்கள் போதும். ஒவ்வொரு வாரமும் அவர்களுக்கு மருந்தை என் சமூகப் பணியாளர்கள் மூலம் கொடுத்தனுப்புகிறேன். அவர்களைப் பார்த்து, பேசி, மருந்துகள் தருவார்கள். ஒருவேளை ‘ரிலாப்ஸ்’ இருந்தால் அவர்களை நானே திரும்ப அழைத்துக்கொள்கிறேன்’ என்று உத்தரவாதம் கொடுத்து அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். அவர்களும் நல்லவேளையாக ஏற்றுக்கொண்டார்கள்.

இரண்டு பெட்ரூம் வீடாக அப்போது அவர்களுக்கு ஒய்.டபிள்யூ.சி.ஏ ஒதுக்கிய இடம், இப்போது இரண்டடுக்குக் குடியிருப்பாக மாறியிருக்கிறது. அங்கே எங்கள் நோயாளிகள் தங்குகிறார்கள், உள்ள நலன் பெறுகிறார்கள். அங்கிருந்து பணியாற்ற வெளியே செல்கிறார்கள்.

குணமாகும் நோயாளிகளை எப்படிக் கையாள்வது என்பதை எனக்கு புரியத் தொடங்கியது. அவர்களிடம் கொஞ்சம் மாறுதல் தெரிந்தாலும் வேடிக்கை நிகழ்ச்சிகள், சமூகத்துடன் உரையாடல், நட்பு என்று அவர்களுக்கு ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வைப்போம். உயிர் வாழ, அதுவும் மதிப்புடன் வாழ ஏதோ ஒரு தொழில் அவர்களுக்கு அவசியம் தேவை; அவர்களுக்குத் தொழில் தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். சிகிச்சைக்கும் தொழிலில் அவர்கள் செலுத்தும் கவனம் பெருமளவில் உதவியது. ஆனால், அதைச் செய்யும் நிலையில் அவர்கள் இருக்க வேண்டும். தையல், மெத்தை செய்வது, நெசவு, புத்தகம் பைண்டிங் செய்வது, மரத்தச்சுத் தொழில் என்று எதோ ஒரு தொழிலை அவர்களுக்குக் கற்றுத் தந்தோம்.

காலை உணவு முடிந்ததும் அவர்கள் வேலை செய்யத் தொடங்கிவிடுவார்கள். எந்த பேச்சு வார்த்தையும் இருக்காது. ஒருநாள் நான் நெசவுப் பிரிவுக்குச் சென்றேன். வீவிங் மாஸ்டர் என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கே அமைதியாக நெய்து கொண்டிருந்த நோயாளி ஒருவரைப் பார்த்தேன். 20 மீட்டர் துணியைச் சீராக அவர் நெய்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ஆனால் அவர் என்னிடம் எதுவும் பேசாமல் வேலைக்குத் திரும்பிவிட்டார். அவர் நெய்ததில் ஏதோ தவறு இருந்தது போல. மாஸ்டர் அவரிடம் சென்று அதைச் சரி செய்யச் சொன்னார். அடுத்த நொடி அவர் வேலையைத் தொடங்கிவிட்டார். அவரால் சீராக வேலை செய்ய முடியும். ஆனால், யாரிடமும் பேச முடியாது என்று புரிந்துகொண்டேன். தயக்கமோ வேறு ஏதோ காரணமாக இருக்கலாம். இதை எப்படி உடைத்து அவர்களை உரையாட வைப்பது என்று சிந்திக்கத் தொடங்கினேன்.”

அடுத்த பகுதி நாளை தொடரும்...

கட்டுரையாளர் குறிப்பு: நிவேதிதா லூயிஸ்

சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத்தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும்போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொலிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவைத் தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

பகுதி 1

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

வெள்ளி 12 பிப் 2021