மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

கனிமவளங்கள் திருட்டு: சோதனை சாவடி அமைக்க உத்தரவு!

கனிமவளங்கள் திருட்டு: சோதனை சாவடி அமைக்க உத்தரவு!

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளில் கனிமவளத் துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய கனிமங்களின் அளவை பரிசோதிக்க எல்லைகளில் எடைநிலையம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "கன்னியாகுமரி மாவட்டம், கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. கேரள மாநிலம் அதன் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் மிகுந்த கருத்தோடும், கவனத்தோடும் இருக்கும் நிலையில், கேரளாவில் மணல் எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எம் சாண்டையும் குறிப்பிட்ட அளவிலே உற்பத்தி செய்யலாமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து அதிகளவில் எம்.சாண்ட் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இருந்து பாறைகளை உடைத்து எம். சாண்ட் தயாரிக்கப்படுகிறது. எம்.சாண்ட் என்பதும் ஒரு வகையான மணலே ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 2019ஆம் ஆண்டு கேரளாவிற்கு விற்பனைக்காக எம்.சாண்ட் எடுத்துச் செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், அதனை மீறும் வகையில் நெல்லை மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு எம்.சாண்ட் எடுத்துச் செல்லப்படுகிறது. மேலும், பொடி செய்யப்படாத பெரும் கற்கள், ஜல்லிகள் போன்றவற்றை எடுத்துச் சென்று, கேரளாவில் எம்.சாண்டாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சிதைந்து, சுற்றுச்சூழல் சமநிலையில் மாற்றம் ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, பெரும் கற்கள், ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றை தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் கேரளாவிற்கு விற்பனைக்காக கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு இன்று (பிப்,11) விசாரணைக்கு வந்தது.

எதிர் மனுதாரர் தரப்பில் கனிம வளங்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு கொண்டு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லும் கனிமங்கள் குறிப்பிட்ட அளவைவிட சட்டவிரோதமாக அதிக அளவு கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளில் கனிம வளத்துறை சார்பில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும், சட்டவிரோதமாக கனிமவளங்கள் திருடப்படுவதை தடுக்க கனிமங்களின் அளவை கணக்கிட எடை நிலையங்கள் அமைக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வியாழன் 11 பிப் 2021