மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர்!

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர்!

முதல் பெண்கள் -3... கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் முதல் பெண் தலைமை அதிகாரி டாக்டர் சாரதா மேனன்

நிவேதிதா லூயிஸ்

பகுதி 1

“டாக்டரிடம் பேட்டி வேண்டும் என்றால் நீங்கள் அவருக்கு ஒரு இ-மெயில் அனுப்புங்களேன்” என்று அவரது உதவியாளர் சொல்லும்போது இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.

“இ-மெயிலை அவரே பார்ப்பாரா?” என்று நான் கேட்க, “ஆமாம், அவர் ஸ்கைப்பில் பேஷன்ட் பார்த்து சிகிச்சை தருகிறார்” என்று அசத்தலாகப் பதில் வந்தது.

அவருக்கு நான் அனுப்பிய இ-மெயிலுக்கு அடுத்த நாளே பதிலும் வந்தது, அவரது ஸ்கைப் ஐடியுடன். அவரது அலுவலகத்திலிருந்து அலைபேசியில் அழைத்த மற்றோர் உதவியாளர், பேட்டிக்கான நேரத்தை அறிவித்தார். அத்தனையும் கனகச்சிதமாகத் திட்டமிடப்பட்டு, குறிக்கப்பட்ட நாளன்று 10 மணிக்கு மிகச்சரியாக நான் அழைக்க, தயாராக புன்னகையுடன் வீடியோவில் தெரிந்த முகத்தில் அத்தனை அன்பு, கனிவு.

முதுமையின் எந்த அடையாளமும் இல்லாமல் துள்ளலுடன் 97 வயது மருத்துவர் டாக்டர் சாரதா மேனன் பேசத் தொடங்கினார்.

உடல்நலம் போல மனநலமும் முக்கியமானதே என்று நம்மை உணரவைத்த முன்னோடி மருத்துவர் சாரதா. 1923ஆம் ஆண்டு மங்களூரில் கே.சங்கர மேனன் - நாராயணி தம்பதியின் மகளாகப் பிறந்தார். தந்தை நீதிபதி என்பதால் அடிக்கடி மாறுதல்கள் காரணமாக குடும்பம் இடம் மாறிக்கொண்டே இருந்தது. படிப்பின் நிமித்தம் மகளை சென்னையில் பள்ளிப்படிப்பில் சேர்த்துவிட்டார் தந்தை.

குட் ஷெப்பர்ட் மற்றும் சர்ச் பர்க் பள்ளிகளில் கல்வி, அதன்பின் பெண்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை சாரதா முடித்தார். மருத்துவப் படிப்பு படித்தே தீருவேன் என்ற உறுதியுடன் படித்து மதராஸ் மருத்துவக் கல்லூரியில் 1951ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார். 1957ஆம் ஆண்டு மருத்துவப் பட்ட மேல்படிப்பை டெல்லியில் முடித்தார். பெங்களூரில் நிம்ஹன்ஸ் நிறுவனத்தில் ஈராண்டு மனநல சிகிச்சை படிப்பில் டிப்ளோமா படித்து முடித்தவரை, 1959ஆம் ஆண்டு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் கண்காணிப்பாளராக தமிழக அரசு நியமித்தது. அந்தப் பதவியில் அமர்ந்த முதல் பெண்ணானார். 1971ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியான ஸ்ரீகுமார மேனனை திருமணம் செய்து கொண்டார்.

1978ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறும் வரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னும் மனநலம் குன்றியவர்களுக்கான நலப்பணிகளை தன்னார்வமாகச் செய்து வருகிறார். மனநலம் குன்றியவர்களின் குடும்பங்களை ஒன்றிணைக்கும் ‘ஆஷா’ அமைப்பை நிறுவி, பயிற்சிகள் தருகிறார்.

மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அத்துறையில் ஆய்வுகள் தொடரவும் 1985ஆம் ஆண்டு `ஸ்கிசோஃப்ரெனியா ரிசர்ச் ஃபவுண்டேஷன்’ அமைப்பை நிறுவி பணியாற்றி வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி மத்திய அரசு 1992ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவித்தது. 2016ஆம் ஆண்டு தமிழக அரசு `அவ்வை விருது’ வழங்கி கௌரவித்தது. இந்த வயதிலும், லாக்டவுனை உற்சாகத்துடன் எதிர்கொண்டு, தொழில்நுட்பத்தின் உதவியுடன் கலகலவென இருக்கும் சாரதா அம்மாவுடன் இனி...

“என் அப்பா ஜட்ஜ். ஆறு அக்காக்கள், ஓர் அண்ணன், எனக்குப்பின் இரண்டு தங்கைகள், தம்பி என்று பெரிய குடும்பம். மங்களூரில் அப்பாவுக்கு வேலை என்பதால் முதலில் அங்குள்ள பள்ளியில் சேர்த்தார்கள். அக்காக்கள் எல்லோரும் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்வார்கள். நானோ விளையாட்டு விரும்பி. பள்ளிக்குச் செல்ல கொஞ்சம்கூடப் பிடிக்காது. ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து தப்பிக்க ஏதாவது சாக்குபோக்கு கண்டுபிடிப்பேன். கண் எரிச்சலாக இருக்கிறது, அது இதுவென்று ஏதோ சாக்கு சொல்வேன். அம்மாவும் அப்பாவிடம் என்னை அனுப்பி என்ன செய்வது என்று கேட்பார். அப்பாவுக்கு நான் மிகவும் செல்லம் என்பதால் அவரும் பள்ளிக்குப் போக வேண்டாம், வீட்டில் இருக்கட்டும் என்று சொல்லிவிடுவார். நாள் முழுக்க பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் விளையாடுவேன். இப்படித்தான் மங்களூர் செயின்ட் ஆக்னஸ் கான்வென்டில் என் குழந்தைப் பருவப் படிப்பு இருந்தது.

அப்பாவுக்கு செங்கல்பட்டுக்கு மாறுதலானது. அங்கே சென்றபின்தான் ஆங்கிலவழிக்கல்வி தரும் பள்ளிகள் எதுவும் இல்லை என்று தெரிந்தது. திருமணமான என் அக்காவின் வீடு சென்னையில் இருந்ததால், என்னை அங்கே அனுப்பினார்கள். வேப்பேரி பிரெசன்டேஷன் கான்வென்டில் சேர்க்கப்பட்டேன். அங்கு ஐந்தாண்டுகள் படித்தேன். அதன்பின் அப்பாவுக்கு கடலூருக்கு மாறுதலானது.

கடலூரில் சுப்பலட்சுமி அம்மாள் தொடங்கிய இந்திய இந்து முறையில் நடத்தப்பட்ட பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அதுவரை நான் படித்தவை எல்லாம் கான்வென்ட் பள்ளிகள். இங்கோ முழுக்க வேறு சூழல். தமிழும் சம்ஸ்கிருதமும் அங்கேதான் கற்றுக்கொண்டேன். ஐந்தாறு மாதங்கள்தான் அங்கு படித்தேன். அதன்பின் அப்பாவுக்கு மீண்டும் சென்னைக்கு பணியிட மாற்றம் கிடைத்தது. சென்னை வந்தோம்.

என் இரு சகோதரிகள், தம்பியுடன் என்னையும் குட் ஷெப்பர்ட் கான்வென்டில் சேர்த்தார்கள். பாந்தியன் சாலையிலுள்ள ஹாலவேஸ் கார்டன் என்ற பெரிய வீட்டில் குடியேறினோம். அங்கே இருந்தபோது இதயநோயால் அவதியுற்ற என் சகோதரி இறந்துபோனார். அந்த வீட்டிலிருந்து ஸ்லேடன்ஸ் கார்டன்ஸ் வீட்டுக்கு மாறினோம். அங்கே இப்போது மகரிஷி பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது.

இரண்டு தளங்கள் கொண்ட பிரமாண்ட வீடு அது. முதல் தளத்தில் எங்கள் வீடு. பெற்றோரின் அறை, உணவறை எல்லாம் அங்கே இருந்தன. தரை தளம் முழுக்க எங்களுடையது. குழந்தைகள் எல்லோரும் தரை தளத்தில் வசதியாகவே இருந்தோம். ஐந்து ஆண்டுகள் குட் ஷெப்பர்ட் பள்ளியில் படித்து ஜூனியர் கேம்பிரிட்ஜ் தேர்வை எழுதினேன்.

பள்ளியின் முதல் பேட்ச் நாங்கள் என்பதால், அப்போது நான்கைந்து பேர்தான் வகுப்பில் இருந்தோம். நாங்கள் ஒவ்வொரு வகுப்பாகத் தேர்வு எழுத, அதற்கடுத்த வகுப்பைப் பள்ளியில் தொடங்கினார்கள். ஜூனியர் கேம்பிரிட்ஜ் தேர்வுக்குப் பின் என்னுடன் படித்தவர்கள் யாரும் குட் ஷெப்பர்டில் படிப்பைத் தொடர விரும்பவில்லை. சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வு எழுத சர்ச் பார்க் பள்ளியில் சேர்ந்தேன். குட் ஷெப்பர்ட் விடுதியில் தங்கிதான் படித்துக் கொண்டிருந்தேன். சர்ச் பார்க்கில் படிப்பை தொடர்ந்தாலும், குட் ஷெப்பர்ட் ஹாஸ்டலில் இருந்தே பள்ளிக்குச் சென்றேன்.

சர்ச் பார்க்கிலும் ஐந்தாறு பெண்கள்தான் என்னுடன் படித்தார்கள். சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வை எழுதி முடித்தேன். டிசம்பரில் தேர்வு முடிந்ததும் அப்பா அப்போது ஜோத்பூரில் இருந்ததால் அங்கு சென்றேன். ஆறு மாதங்கள் அங்கே இருந்தபோது, ‘சும்மா இருக்கக் கூடாது. கணக்கும், தட்டச்சும் படி’ என்று அப்பா சொன்னதைச் செய்தேன். மருத்துவப் படிப்பின் மேல் எனக்கு பெரும் ஆர்வம் இருந்தது. மேல் படிப்புக்காக டிசம்பர் மாதமே மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியை நாடினேன். அவர்களும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வந்து பாருங்கள் என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள். ஜூன் மாத இறுதியில் அங்கே மீண்டும் சென்றேன். கல்லூரியில் ‘உனக்கு வேறொரு குரூப் தருகிறோம்... லாஜிக், வரலாறு குரூப்பில்தான் காலியிடம் இருக்கிறது’ என்று சொன்னார்கள்.

அதன்பின் அப்பா நகரின் பல கல்லூரிகளின் படியேறி இறங்கினார். எங்கும் நான் கேட்ட பிரிவு கிடைக்கவில்லை. வேறு வழியின்றி மகளிர் கிறிஸ்துவக் கல்லூரி எனக்குத் தந்த லாஜிக், வரலாறு குரூப்பில் சேர்ந்தேன். மருத்துவப் படிப்பில் சேர இயற்பியல், வேதியியல், கணிதம் படிக்க வேண்டும் என்பது புரிந்தது. பெற்றோருக்கோ மருத்துவத்தில் ஆர்வம் கொஞ்சமும் இல்லை. நான் வேறு ஏதாவது படிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

என் கல்லூரி முதல்வரிடம் சென்றேன். அறிவியல் குரூப்பும் நான் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ‘என்னை அந்த குரூப்பும் சேர்த்து படிக்க உதவுங்கள்; இரண்டு குரூப் வகுப்புகளுக்கும் நான் செல்கிறேன்’ என்று வேண்டுகோள் வைத்தேன். அவரும் அனுமதி தந்தார்.

ஒரே ஆண்டில் இரண்டு குரூப் பாடங்களும் படித்துதான் இன்டர் முடித்தேன். நேர்முகத் தேர்வு முடித்து மதராஸ் மருத்துவக் கல்லூரியில் நுழைந்தேன். அந்தக் காலத்தில் பெண்கள் அவர்கள் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்து. பெண்கள் அதிகம் படிக்க வேண்டும் என்று அப்போதைய சமூகம் விரும்பியது. குட் ஷெப்பர்ட் ஹாஸ்டலில் தங்கித்தான் மருத்துவப் படிப்பு முடித்தேன். அப்பா அப்போது டெல்லியில் இருந்ததால் படிப்பை முடித்ததும் டெல்லி சென்றேன். அங்கு இர்வின் மருத்துவமனையில் ஹவுஸ் சர்ஜன்சி சேர்ந்தேன். மருத்துவமனை விடுதியில் தங்கி படித்துக்கொண்டே ஒன்றரை ஆண்டுகள் அங்கே பணியாற்றினேன்.

அப்பா பணி ஓய்வு பெற்று சென்னை திரும்பியதால், நானும் அவருடன் மீண்டும் இங்கு வந்தேன். வேலை எதுவும் செய்யாமல் என்னால் ஓய்வாக இருக்கவே முடியாது. செய்தித் தாளில் விளம்பரம் பார்த்து பீத்தாபுரம் மிஷன் மருத்துவமனையில் துணை அறுவைசிகிச்சை நிபுணராகப் பணியில் சேர்ந்தேன். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அந்த மருத்துவமனை இருந்தது. ரயிலிலிருந்து இறங்கியதும் என்னை அழைத்துச் செல்ல மாட்டு வண்டி வந்திருந்தது. காலையில் குளித்து தயாரானதும் கீழே நோயாளிகளைப் பார்க்க வந்துவிட்டேன். ஒரு தெலுங்கு சொல்கூட எனக்குத் தெரியாது. வந்த நோயாளிகளோ முழுக்க தெலுங்கில் பேசினார்கள். ஒரு வழியாக சைகை மொழியில் அவர்களிடம் பேசி சமாளித்து சிகிச்சை தரத்தொடங்கினேன். இரவு ஒன்பது மணிக்கு பணியை முடித்துவிட்டு மாடிக்கு வந்தால், அங்கே எனக்குத் தெலுங்கு மொழி கற்றுத்தர முன்ஷி ஒருவர் வந்து காத்திருந்தார். தினமும் இரவு ஒரு மணி நேரம் அவரிடம் தெலுங்கு பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொண்டேன்.

அங்கு வந்த மாணவர்களுக்கு பாக்டீரியாலஜி தெலுங்கில் கற்றுத்தரும் அளவுக்கு விரைவில் மொழித் தேர்ச்சி பெற்றுவிட்டேன். ஒன்றரை ஆண்டுகள் பீத்தாபுரத்தில் பணியாற்றினேன். ஐ.சி.எஸ் முடித்துவிட்டு சென்னை செக்ரடேரியட்டில் பணியாற்றி வந்த என் தம்பி கோபால் மேனன், ‘இப்படியே உன் வாழ்க்கை வீணாகிவிடக் கூடாது; நீ மாநில மருத்துவப் பணிகளில் சேரவேண்டும்’ என்று வலியுறுத்தினான்.

அங்கிருந்து சென்னை திரும்பி மருத்துவப் பணிகளுக்கு விண்ணப்பித்துப் பணியில் சேர்ந்தேன். திருமணி தொழுநோய் மையத்தில் என் அரசுப் பணி தொடங்கியது. முதல் நாளே 120 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டியிருந்தது. பெரிய காலனி அது. நோயாளிகள் அங்கேயே வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தார்கள். மிகவும் கடுமையான பணி அது. ஆறு மாதங்கள் அங்கு பணியாற்றிவிட்டு செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.”

அடுத்த பகுதி நாளை தொடரும்...

கட்டுரையாளர் குறிப்பு: நிவேதிதா லூயிஸ்

சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத்தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும்போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொலிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவைத் தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

இந்தியாவின் முதல் பெண் தோல் மருத்துவர் : சந்திரா ராஜரத்தினம்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வியாழன் 11 பிப் 2021