மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

உத்தரகாண்ட் திடீர் வெள்ளம்: காரணம் என்ன?

உத்தரகாண்ட் திடீர் வெள்ளம்: காரணம் என்ன?

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் தொடர்கின்றன. இந்த நிலையில் இந்த திடீர் வெள்ளத்துக்கான காரணம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஜமோலி மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் தவுலி கங்கை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இரண்டு நீர்மின் நிலையங்கள் அடித்து செல்லப்பட்டன. அப்போது அங்கு பணியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்களையும் வெள்ளம் அடித்து சென்றுவிட்டது.

தவுலி கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரண்டாவது நீர்மின் நிலையத்தில் இரண்டு சுரங்கங்கள் உள்ளன. திடீர் வெள்ளத்தில் சுரங்கம் முற்றிலும் மூழ்கியது. அதற்குள் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

இதில் முதல் சுரங்கத்தில் சிக்கி இருந்த 16 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். இரண்டாவது சுரங்கத்துக்குள் 34 பேர் சிக்கி இருக்கிறார்கள். அந்த சுரங்கப்பாதை 1.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

அதற்குள் சேறு, சகதி, பாறைகள் என நிரம்பி உள்ளன. அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்திய திபெத்திய ராணுவப்படையினர், தேசிய மீட்புக்குழுவினர் என 500 பேர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சுரங்கப்பாதை பல வளைவுகளை கொண்டதாக இருக்கிறது. எனவே வாகனங்களை உள்ளே கொண்டு சென்று இடிபாடுகளை அகற்றுவது கடினமாக உள்ளது. எனவே சிறிய வகை எந்திரங்கள் மூலமாக இடிபாடுகளை அகற்றி வருகிறார்கள்.

"இன்னும் 130 மீட்டர் தூரத்துக்கு இடிபாடுகளை அகற்ற வேண்டி உள்ளது. அவ்வாறு அகற்றிவிட்டால் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது. அவுர்கள் சிக்கியுள்ள பகுதியில் ஆக்சிஜன் அளவு கணிசமாக இருப்பதாக தெரிகிறது. எனவே அவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்க வாய்ப்பு இல்லை" என்று மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

"விரைவில் அந்த இடத்தை சென்றடைந்துவிடலாம். தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது" என்றும் அவர்கள் கூறினார்கள்.

இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 197 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்து நடந்த பகுதியில் நிதி என்ற கணவாய் உள்ளது. அதையொட்டி 13 கிராமங்கள் உள்ளன. அந்த கணவாய் சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பனிப்பாறை விழுந்தததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தனர். பனிப்பாறைக்கு கீழே தண்ணீர் சரியாக உறையாமல் ஏரி உருவாகி இருக்க வேண்டும். இதன் காரணமாக பிடிமானம் இல்லாமல் பாறை உடைந்து விழுந்து இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

அந்த இடத்தில் பனிப்பாறை முற்றிலும் வெடித்து விழுந்து இருப்பதாக முதலில் கருதப்பட்டது. ஆனால், அவ்வாறு வெடிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.

சம்பவம் நடப்பதற்கு முன்பு அந்தப் பகுதியில் எடுக்கப்பட்ட பாறை படத்தையும், 7ஆம் தேதி பனிப்பாறை விழுந்ததற்குப் பிறகு எடுக்கப்பட்ட படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்தக் கருத்தை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இஸ்ரோவின் தொலை உணர்வு ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் படங்கள் மூலமாக ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை. எனவே, அந்த இடத்தில் ஏரி அமைந்திருந்து அதன் மூலமாக பாறை வெடித்து விழவில்லை. பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

பனிச்சரிவு ஏற்பட்ட இடம் கடல் மட்டத்திற்கு மேல் 5,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பனிச்சரிவு ஒரே நேரத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் 3 கோடி கியூபிக் மீட்டர் தண்ணீர் ஒரே நேரத்தில் வெளியேறி இருக்கிறது. இதனால் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டுவிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

புதன் 10 பிப் 2021