மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

குடிமராமத்து பணிகளின் விவரத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவு!

குடிமராமத்து பணிகளின் விவரத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளின் விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்புநிதி என்பவர் இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், “ஆறு, ஏரி, குளங்களை, ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு 110ஆவது விதியின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக ரூ.1,250 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்தார்.

தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், தமிழகத்தின் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக்கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே ஆகும்.

ஆகவே, தமிழகத்தின் அனைத்து நீர் நிலைப்பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளை, அவற்றின் சர்வே எண், ஒதுக்கப்படும் நிதி, பணி காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு நேற்று (பிப்ரவரி 9) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல. மேலும் ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல் என்பது குறைக்கப்படும்.

எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்று குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களை அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளம் தொடங்கி, அதில் குடிமராமத்து பணி நடைபெறக்கூடிய இடம், பணியின் விவரம், கால அளவு, அதற்காக செலவழிக்கக் கூடிய தொகை, அதில் நடைபெற்றுள்ள பணிகள் என முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை 12 வார காலத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்" என உத்தரவு பிறப்பித்தனர்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

புதன் 10 பிப் 2021